முகலாயர்களும், ஆங்கிலேயரும் வருவதற்கு முன் நமது மூதாதையரின் நிலை?
தஞ்சையை ஆண்ட மராட்டியர்கள் மோடி மொழியில் எழுதி வைத்துள்ள ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் ஆவணக்குறிப்புகள் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன் இல்லையா? கடந்த சில நாட்களாக தொடர்ந்து இந்த புத்தகத்தை படித்துவருகிறேன்.
அந்நாட்களில் அதாவது ராஜராஜ சோழன் காலத்திலிருந்து ஏறக்குறைய பிரிட்டிஷார் இருந்தவரை கூட அடிமைகளை வாங்கி, விற்கும் பழக்கம் இருந்துள்ளதை இந்த ஆவணம் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. 1831- ல் சித்தூர் மாவட்டம் வேலூர் கோட்டையில் பணியாற்றிய சோலையா என்பவரின் மகன் சபாபதியாபிள்ளை பற்றி ஒரு குறிப்பு உள்ளது. சபாபதியாபிள்ளை கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்கிறார். அங்கு பெரிய நாயக்கொத்தன் என்பவர் (கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்) தன்னை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்று பொய் சொல்லி தன் மகள் மீனாட்சியை சபாபதியாப்பிள்ளைக்கு மணம்முடித்து தருகிறார். சபாபதியாப்பிள்ளை இருபத்தி ஒண்ணேகால் ரூபாய் கொடுத்து பரிசம் செய்கிறார். 100 ரூபாய் செலவு செய்து திருணம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு சபாபதியாப்பிள்ளை இரண்டாண்டுகள் மாமனார் வீட்டில் தங்கிவிட்டு வேலூருக்கு செல்கிறார். அப்போது அந்த பெண் மீனாட்சிக்கு வயது ஏழு. (அதாவது ஐந்து வயதில் திருமணம் நடந்திருக்கவேண்டும்) அவள் பெரியவள் ஆனதும் அனுப்பிவைக்கிறேன் என்று மாமனார் சொன்னதை கேட்டு சபாபதி வேலூர் செல்கிறார்.
வேலூரில் மூன்றரை ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. சில வருடங்கள் ஆகியும் மாமனாரிடம் எந்த தகவலும் வரவில்லை. அப்போது வேலூரிலிருந்து கண்டியராஜாவின் தாயார் தஞ்சை வருகிறார். ராஜ பரிவாரங்களோடு சபாபதியும் தனது மனைவியை பார்க்க தஞ்சை செல்கிறார். 1842 ஜோலை மாசத்தில் திருவையாற்றில் உள்ள மாமனார் வீட்டுக்கு செல்கிறார். ஆனால் அங்கு அவருக்கு அதிர்ச்சி. அவரது மனைவி மீனாட்சியை ஆனந்தவல்லி என்று பெயர் மாற்றம் செய்து தஞ்சை அரண்மனைக்கு அடிமையாக விற்றுவிட்டார்கள். கடுப்பாகிப்போன சபாபதி அப்போதிருந்த ரெஸிடெண்டு N.W கிஸ்டர்ஸிலி என்ற வெள்ளைக்காரரிடம் புகார் தருகிறார். அவரோ இதில் நான் தலையிடமுடியாது. நீ கும்பினியிடம் பிராது கொடு என்று ஒதுங்கிக்கொள்ள சென்னை கவர்னிடம் பிராது கொடுக்கிறார். பிராது கொடுத்த தினம் 10-08-1842. இதில் பிரிட்டிஷ் அரசாங்கம் எதுவும் தலையிடமுடியாது என்று 30-08-1842 ஆம் ஆண்டு பதில் வருகிறது.
இந்த பதிவை படித்ததும் அந்நாட்களில் பெண்கள் நிலைமை எப்படி இருந்தது. எப்படி மக்கள் ஒருவரை ஒருவரை ஏமாற்றி பிழைத்தார்கள். தங்களுக்கு பைசா பெறாத விஷயங்களில் எல்லாம் எப்படி பிரிட்டிஷ்காரர்கள் ஒதுங்கி நின்றார்கள் என்று தெரிந்துக்கொள்ளலாம். தவிர அந்நாட்களில் பெண் குழந்தைகளுக்கு ஏக கிராக்கி இருந்துள்ளது. தவிர பெண்குழந்தைகளை ஆண்கள்தான் பணம் கொடுத்து பரிசம்செய்யும் வழக்கம் இருந்துள்ளது. சில மோடி ஆவணங்களில் உள்ள குறிப்புகளில் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீடுபுகுந்து பெண்குழந்தைகளை அரண்மனைக்கு விற்றுவிடும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இஸ்லாமியர்களும் அடக்கம். அவர்களும் தங்கள் பெண்குழந்தைகளை சர்க்காருக்கு விற்றுள்ளார்கள். வாங்கியுமுள்ளார்கள்.
1841- ல் கள்ளிக்கோட்டை கள்ளர் சாதி அங்காளி என்ற பெண்மணியின் மூன்றுமாத பெண்குழந்தையை 5சக்கரம் பணம் மற்றும் 1 சக்கரம் மதிப்புள்ள புடவை கொடுத்து தஞ்சை பக்கீர் மஹமத் ஸமுத்வான் என்ற இஸ்லாமியர் வாங்கியுள்ளார். குழந்தையை என்ன செய்தார் என்று குறிப்பில் இல்லை. மதமாற்றம் செய்து வீட்டு வேலைக்கு வைத்திருக்கலாம். ஏனெனில் 1785 - ல் திருமுல்லைவாசல் செவதாயி என்பவர் தனது சகோதரனின் பெண்குழந்தையை ஒரு வெள்ளைக்காரனுக்கு 6 சக்கரம் மற்றும் ஒரு பணத்துக்கு விற்றார். வெள்ளைக்காரன் இல்லையா? விற்றதை வாங்கியதை கம்பெனி முத்திரை காகிதத்தில் சாட்சி கையெழுத்தோடு எழுதி உடனே சர்ச்சுக்கு சென்று அந்த பெண்ணை மதம்மாற்றம் செய்துள்ளார்கள். தன் மகனுக்கு அந்த பையனை திருமணம் செய்துவைக்கலாம் என்று திட்டம். நான்காண்டுகள் கழித்து அந்தப்பெண் வீட்டை விட்டு ஓடிப்போனாள். பிறகு அவளை சீர்காழியில் பிடித்துள்ளார்கள்.
பெண்குழந்தைகளை விற்பது வாங்குவது சர்வசாதாரணமாக நடந்துள்ளது. வயது குறைய குறைய அந்த பெண்குழந்தைகளுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. இன்னொரு கொடுமையான விஷயம் இப்போது தங்க நகையை அடகு வைத்து பணம் வாங்கி பிறகு பணம் வந்ததும் மீட்டெடுப்பதுபோல பெண்குழந்தைகளை அடகு வைத்து மீட்டும் பழக்கமும் இருந்துள்ளது. கள்ளரும், பிள்ளைமாரும் திருமண தொடர்பு வைத்துள்ளார்கள். தேவதாசி பழக்கம் இருந்துள்ளது. அதேநேரம் கோவிலுக்கு பொட்டுக்கட்டிக்கண்ட தேவதாசிகள் விரும்பினால் அந்த வாழ்க்கையிலிருந்து விலகி யாரையாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தலாம். அதற்கு தடையில்லை என்ற நடைமுறையும் இருந்துள்ளது. அதேநேரம் தேவதாசிகள் பொதுவெளிக்கு வந்தால் அவர்களை சீண்டும் மனிதர்களும் அவர்களுக்கு எதிராக அரண்மனையில் புகார்கொடுக்கும் வழக்கமும், அவர்கள் மீது வழக்கு நடத்தப்பட்டு சிலருக்கு தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
இதை எல்லாம் எதற்கு பகிர்கிறேன் என்றால் நேற்று ஒரு வாட்ஸப் செய்தி வந்தது. அதில் முன்னோர்கள் முட்டாள் இல்லை என்று இருந்தது. இந்த முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை க்ரூப் எல்லாம் யாரென்று பார்த்தால் நம்மை யாராவது முட்டாள்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் அவசரஅவசரமாக முன்னோர்கள் முட்டாள் இல்லை என்று சொல்பவர்கள்.
No comments:
Post a Comment