Followers

Wednesday, September 25, 2019

பெல்லட் குண்டுகள் முதாசிரின் உடம்பை ஆழமாக துளைத்துள்ளது

பெல்லட் குண்டுகள் முதாசிரின் உடம்பை ஆழமாக துளைத்துள்ளது
செப்டம்பர் 6 ஆம் தேதி, இரவு 11 மணியளவில், 24 வயதுடைய கல்லூரி மாணவர் முதாசிர் அகமது தர், பாரமுல்லா மாவட்டம், குவாஜா பாக்கில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அரசியலமைப்புச் சட்டத்தை நீக்கி 51 நாட்கள் முடிவடைந்துள்ள போதிலும், அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என்பதால், முதாசிர் தனது குடும்பத்தினரை சீக்கிரம் படுக்கைக்குப் போகுமாறு கூறியுள்ளார்.
குடும்பத்தினர் படுக்கச் சென்ற சிறிது நேரத்திலேயே அவர்களது வீட்டிற்கு முன்பு வாகனங்கள் வரிசையாக வந்து நின்றது. யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக தட்டியதால், வீட்டில் மூத்தவரான முகமது ரம்ஸாம் தர் (60) கதவினைத் திறந்துப் பார்த்தார். ஆயுதத்துடன் போலீசு சீரூடை அணிந்திருந்த சிலர் அவர்களது வீட்டிற்கு முன் வரிசையாக நின்றிருந்தனர்.
“வீட்டில் உள்ளஆண்கள் அனைவரும் வெளியில் வாருங்கள்” என்று உத்தரவிட்டான் சீரூடை அணிந்திருந்த ஒருவன். வயதானவர் உட்பட ஐந்து ஆண்கள் அவர்கள் முன் நின்றனர்.
“அவர்கள் அதட்டும் தொனியில் எங்களது அடையாள அட்டைகளை எடுத்துவரச் சொன்னார்கள். அவர்கள் சிறப்பு செயல்பாட்டுக் குழு, ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து வந்துள்ளார்கள் என்று உடனே கண்டு கொண்டோம். எங்களது அடையாள அட்டைகளைப் பார்த்தவுடன், என் தம்பியையும், உறவினர் ஒருவரையும் போலீஸ் வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினர்” என்கிறார் முதாசிர்.
“எதற்கு ஏறவேண்டும்?” என பெண்கள் கேட்டதும் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டது போலீசு. அதோடு நிறுத்தாமல், முதியவர் முகமது ரம்ஸாம் தர் தலையில் ஓங்கி பலமாக அடித்தத்தில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். “அடித்ததில் என் தந்தைக்கு இரத்தம் அதிகமாக வெளியேறியது. நாங்கள் கதறினோம். ஆனால் அவர்கள் மற்றவர்களையும் தாக்க ஆரம்பித்தார்கள். நான் என் தந்தையைக் காப்பாற்ற விரைந்தபோது, அவர்கள் (காவல்துறையினர்) என்னை நோக்கி பெல்லட் குண்டுகளால் சுட்டனர்” என்கிற முதாசிர் தற்போது ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
முதாசிர் அருகே அவரது சகோதரி மெக்மூதா அக்தர் (31) அமர்ந்திருந்தார். அவர், “போலீஸ் படைகளின் செயல்கள் எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொன்றுவிடும் விதமாக இருந்தது. என் தந்தைக்கு 11 தையல்கள் போடும் அளவிற்கு அவர்கள் மிக மோசமாக தாக்கியுள்ளனர். அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை” என்றார்.
“பெல்லட் குண்டுகளால் சுட்டபின் அவர்கள் எனது சகோதரன் முதாசிரை சந்துக்குள் இழுத்து சென்று இரக்கமின்றித் தாக்கினர். முதாசிரை விட்டுவிடும்படி நாங்கள் கெஞ்சினோம். ஆனால் அவர்களின் காதுகளுக்கு அவை கேட்கவில்லை” என்கிற மெக்மூதா, அவர்களின் மிருகத்தனமாக தாக்குதலில் இருந்து தானும் தப்பவில்லை என்கிறார்.
முதாசிர் உடம்பில் பல காயங்கள் இருந்தது. “பெல்லட் குண்டுகள் முதாசிரின் உடம்பை ஆழமாக துளைத்துள்ளதால் பல குண்டுகளை மருத்தவரால் அகற்ற முடியவில்லை. இருதயப் பகுதியில் குண்டுகள் துளைத்துள்ளது” என்கிறார் மெக்மூதா.
முதாசிருடைய குடும்பத்தினரும், பக்கத்து வீட்டுக்காரர்களும் போலீஸ் படையின் தாக்குதலில் இருந்து முதாசிரை மீட்கப் போராடினர். ஆனால் போலீசார் அவர்களையும் தாக்கியுள்ளனர்.
“போலீஸ்காரர்கள் எங்களது வீட்டிற்கு வந்து எங்களை அழைத்தபோது, இந்த இரவு நேரத்தில் பெண்களையும், குழந்தைகளையும் தனியாக வீட்டில் விட்டு வர முடியாது. ஆனால் காலை வந்துவிடுவோம் என்று நாங்கள் உறுதியாகக் கூறினோம். ஆனால் அதன்பிறகுதான் அவர்கள் எங்களை மிருகத்தனமாகத் தாக்க ஆரம்பித்தார்கள்” என்கிறார் ஓட்டுநரான 30 வயது இளைஞர் ஜாவேத் அகமது.
ஜாவேத் அகமதுவின் மனைவி ஷுகுஃப்தா ஜன், படைகளின் தாக்குதலில் இருந்து தனது கணவரை மீட்க விரைந்தபோது, அவரை நோக்கி சுட்டுள்ளனர்.
“பெல்லட் குண்டுகளால் என்னை நோக்கிச் சுட ஆரம்பித்தார்கள். நான் அலறினேன். சூடான இரும்புக் கம்பிகள் எனது உடலை துளைத்ததுப் போல் உணருகிறேன்” என்கிற ஷுகுஃப்தாவிற்கு, ஆகில் ஜாவேத் என்ற 18 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவரும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கிறார்.
“எனது உடலில் கடுமையான வலி உள்ளது. ஆனால், என் மகனுக்கு பால் கொடுக்கமுடியவில்லை என்பதே உடல் வலியைவிட கொடுமையான வலி. ஒரு தாயால்தான் இந்த வலியை உணரமுடியும்” என்கிறார் ஷுகுஃப்தா.
மேலும் அவர், “என் மகன் என்னை எதிர்ப் பார்த்துக் கொண்டிருப்பான். நான் இறந்துவிட்டால் அவனை யார் கவனித்துக் கொள்வது?” என்று தனது ஆதங்கத்தைக் கொட்டியவர், “போலீஸ்காரர்கள் அப்பாவி மக்களைத்தான் பெல்லட் குண்டுகளால் தாக்குகின்றனர்; சித்திரவதை செய்கின்றனர்; வீட்டிற்குள் புகுந்து துன்புறுத்துகின்றனர். அவர்களது கைகளில் எப்பொழுதும் துப்பாக்கிகள் இருக்கின்றன. ஆகையால் அவர்கள் எங்கள்மீது தங்களது அதிகாரத்தைச் செலுத்துகின்றனர்” என்றார் அவர்.
இது குறித்து முதாசிர் பக்கத்து வீட்டுக்காரர்கள், “பெல்லட், கண்ணீர் புகைக் குண்டுகளால் முதாசிர் குடும்பத்தினர்மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்திய பிறகு, படையினர் வீட்டிற்குள் புகுந்து சன்னல் கண்ணாடிகளையும், வெளியில் நிறுத்தி வைத்திருந்த கால்டாக்சியையும் உடைத்தனர்”. அதைத் தடுக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒன்பது பேர் காயமடந்தனர்; ஆறு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
“நாங்கள் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு எங்களது மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் கூறினர். அங்கு எங்களுக்கு நான்கு ஆம்புலன்சையும் ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வெளியில் செல்லும் வேளையில் ஜம்மு-காஷ்மீர் போலீஸ்சார் வந்து தடுத்து நிறுத்தினர். கிட்டத்தட்ட அரைமணிநேரம் எங்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை” என்கிறார் அகமத்.
“பாரமுல்லா மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி போலீஸாரிடம், நாங்கள் மிக மோசமான நிலைமையில் இருப்பதாகவும், எங்களை வெளியில் செல்லுவதற்கு அனுமதியளிக்கும்படியும் கேட்டார். வலியைத் தாங்கமுடியாமல் முதாசிர் துடிப்பதைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர், “நல்லா அனுபவியுங்கள்!” என்று ஏளனமாக சொன்னார்.
முதாசிர் குடும்பத்தினரைக் காப்பாற்றச் சென்ற இக்பால் லத்தீப் கானின் (28) இரண்டு கண்களிலும் பெல்லட் குண்டுகள் துளைத்துள்ளது. தச்சு வேலை செய்யும் இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.
அவரது கண்களில் இரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால் மருத்துவர்கள் அவரது கண்களைத் தொடவும் பயந்தார்கள். “கண்ணீர் புகைக் குண்டினை அவர்கள் (போலீசார்) நேரடியாக என் தலையில் போட்டதுபோல் உணர்கிறேன். நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்” என்றார் கான், மெல்லிய குரலில்.
“அவரது கண்களில் ஆழமாகக் குண்டுகள் துளைத்துள்ளது. இரத்தம் நிற்காமல் அதிகமாக வெளியேறுவதால் எங்களால் எதுவும் சொல்ல இயலாது. நாங்கள் ஒரு அறுவை சிகிச்சையை நடத்தியுள்ளோம். இரண்டு கண்களிலும் குண்டுகள் துளைத்துள்ளதால், இக்பால் லத்தீப் கானின் கண் பார்வை சந்தேகத்திற்குறியதுதான்” என்று கண் மருத்துவர் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரித்திருக்கும் பெல்லட் குண்டுகளின் தாக்குதலை, சர்வதேச அமைப்புகள் கண்டித்து வருகிறது. இந்தப் பெல்லட் குண்டு தாக்குதலால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள் தங்களது பார்வைகளை இழந்துள்ளனர். ஒரு இரவிலேயே காஷ்மீர் மக்களது வாழ்க்கை தலைகீழாக மாற்றப்படுகிறது.
பள்ளத்தாக்கில், துண்டிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தால் இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல, முதாசிர் குடும்பம் போன்று பொருளாதார ரீதியாகப் பலவீனமான குடும்பங்களையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.
கால் டாக்சியை நம்பிதான் முதாசிர் குடும்பம் இருக்கிறது. “தகவல் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து ஒரு நயா பைசாவைக் கூட நான் சம்பாதிக்கவில்லை. இந்தக் கொடூரச் சம்பவம் ஏழை மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமானதாக்குகிறது” என்கிற ஜாவேத் தனது மனைவியின் மருத்துவ செலவிற்காக பெரிதும் சிரமப்படுகிறார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு கான் மற்றும் தர் குடும்பத்தினர், இறுதித் தீர்வு போராட்டம்தான் என்று நம்புகின்றனர். “எத்தனை காலங்களுக்குதான் அவர்களுடைய மிருகத்தனத்தையும் ஒடுக்குமுறையையும் பொறுத்துக் கொள்ள முடியும்? காரணங்கள் ஏதுமின்றி நாங்கள் பாதிப்புக்குள்ளாகிறோம்” என்று கானை மருத்துவமனையில் சந்திக்க வந்த உறவினர் மன்சூர் அகமது கூறுகிறார்.
“இந்த நடவடிக்கைகளால் எப்படி அவர்களால் அமைதியை கொண்டுவர முடியும்? அவர்கள் எங்களைத் தவறான செயலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். உண்மையில் அவர்கள் இங்கு அமைதியைக் கொண்டு வர விரும்பவில்லை. காஷ்மீரில் எப்போதும் அமைதியின்மையைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்” என்கிறார் அக்மத்.
வினவு செய்திப் பிரிவு
நன்றி : தி வயர்
தமிழாக்கம் : ஷர்மி



1 comment:

Dr.Anburaj said...

கட்டுக்கதை.உண்மை நிலை நிச்சயம் வேறாக இருக்கும். பாக்கிஸ்தான் காடையர்களுடன் தொடர்பு உள்ள குடும்பமாக இது நிச்சயம் இருந்திருக்கும். இந்திய அரசை மலினப்படுத்தும் சுவனப்பிரியன் திட்டத்திற்கு ஒரு பதிவு கிடைத்துள்ளது.