சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத்தில் TNTJ நடத்திய 95வது இரத்ததான முகாம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங்ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் (KFMC) மருத்துவமனையில் சவுதி அரேபியாவின் 89-வது தேசிய தினத்தை முன்னிட்டு இன்று 20/09/2019 வெள்ளிக்கிழமை 95-வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 119க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் பதிவு செய்து கொண்டு சுமார் 104 நபர்கள் இரத்தக்கொடை அளித்தனர். இதில் தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நமது அண்டை மாநில மற்றும் அண்டை நாட்டு சகோதரர்களும் கணிசமாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
ரியாத் மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் சகோ. முஹம்மது அமீன் அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக இதுவரை 94 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் நமது இந்த மனித நேயப்பணியை பாராட்டி சவுதி சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது என தெரிவித்தார்.
ரியாத் மண்டலத்தின் தலைவர் சகோ. ஹாஜா மைதீன் அவர்கள் இரத்ததானம் நடத்துவதின் நோக்கத்தைப் பற்றி கூறும் போது திருக்குர்ஆன் 5 அத்தியாயம் 32 வசனம் “யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள் என்றும் ஆனால் இன்றைய மீடியாக்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து வருவதைக் களையவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை எதிர்பார்த்து இந்த பணியைச் செய்து வருவதாக கூறினார். கடந்த 16 வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் வளைகுடா மண்டலங்களில் இரத்ததானத்தில் தொடர்ந்து முன்னணியில் உள்ளதாகவும், இதை பாராட்டி பல்வேறு விருதுகளை மருத்துவமனைகள் வழங்கியுள்ளன என்றார்.
இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
…எல்லா புகழும் இறைவனுக்கே ….
No comments:
Post a Comment