Followers

Tuesday, April 12, 2016

உபியில் நாகப் பாம்புடன் இளைஞருக்கு திருமணம்!



உபியில் நாகப் பாம்புடன் இளைஞருக்கு திருமணம்!

உத்தரப்பிரதேசத்தில் நாகப் பாம்புடன் இளைஞருக்கு நடக்கவிருந்த வினோத திருமணம் போலீஸார் தலையிட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டது.

உ.பி.யின் மத்தியப் பகுதியில் உள்ள பூல்பூர் நகரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் பத்வாபூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலில் கடந்த வாரம் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியி ருந்தனர். மனிதனாக மாறியுள்ள இச்சாதாரி பாம்பு என்று தன்னை கூறிக்கொண்ட 27 வயது சந்தீப் பட்டேலுக்கு அங்கு திருமணம் நடைபெற இருந்தது.

இது வழக்கமான திருமணமாக இல்லாமல், மணப்பெண்ணாக நாகப்பாம்பு இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. பண்டிதர் ஒருவரும் அருகில் அமர்ந்து வேத மந்திரம் ஓத, பாம்புக்கு இளைஞன் தாலி கட்டும் நேரத்தில் வில்லன் போல் அங்கு போலீஸார் புகுந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி யுள்ளனர்.

இது குறித்து பூல்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சீவ்குமார் மிஸ்ரா ‘தி இந்து’விடம் கூறும் போது, “இந்த வினோத திருமணம் குறித்து ஒருநாள் முன்னதாக அறிந்து, சந்தீப் வீட்டுக்குச் சென்று விசாரித்தோம். அப்போது அவரது குடும்பத்தினர், கிராமத்தின் அமைதி கெடும் வகையில் எதையும் செய்ய மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். ஆனால் அந்த உறுதி மீறப்பட்டதால் தந்தை மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

பத்வாபூரில் வசிக்கும் தயா சங்கர் என்ற விவசாயியின் மகனான சந்தீப், சூரத்தில் பணியாற்றி வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த பிப்ரவரி 17- தேதி சொந்த ஊர் திரும்பினார். இங்கு வந்ததில் இருந்தே தான் மனிதனாக மாறியுள்ள இச்சாதாரி பாம்பு என்று கூறி வந்துள்ளார். இதனால் கிராம மக்கள் அவரை இச்சாதாரி என்றே அழைத்து வந்துள்ளனர். இதனிடையே சந்தீப் அங்குள்ள சிவன் கோயிலில் தான் ஒரு பெண் நாகத்தை சந்தித்ததாகவும், அது முற்பிறவியில் தனக்கு ஜோடியாக இருந்ததை நினைவூட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் அதே பெண் நாகத்தை அந்த சிவன் கோயிலில் ஏப்ரல் 5-ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த திருமணத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்கி கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி யுள்ளனர். கூட்டத்தில் சில பெண்கள் சாமியாடவும் செய்து பக்தி பரவசப்படுத்தியுள்ளனர். இக்கூட்டத்தை கலைக்க சுற்றி யுள்ள காவல் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீ ஸார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தில் பலர் சந்தீப்புக்கு ஆதரவாக போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களை சமாளித்து சந்தீப் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய போலீஸாருக்கு மதியம் 3 மணி வரை ஆகியுள்ளது.

சூரத் மருத்துவமனையில் சந்தீப் சிகிச்சை பெற்ற மருத்துவக் குறிப்புகளை போலீஸார் ஆராய்ந்த போது, அவர் மனநலம் பாதிக்கப் பட்டு இருந்தது தெரியவந்தது.

பாம்புகள் தொடர்பான மூட நம்பிக்கைகள் உ.பி.க்கு புதிதல்ல. அலிகருக்கு அருகில் உள்ள பிசாவா என்ற கிராமத்தில் கடந்த 1995-ம் ஆண்டு டிராக்டர் ஓட்டிச் சென்ற விவசாயி ஒருவர் வழியில் 2 பாம்புகளை கொன்றுவிட்டார். அப்போது ஊருக்குள் பாம்பு குற்றம் நிகழ்ந்துவிட்டதாகவும் பாம்புகள் படை எடுத்து வந்து ஊரையே பழி வாங்கும் என்றும் பீதி கிளம்பியது.

சில தினங்களில் கிராமத்தில் தானியப் பயிர்களின் இலைகளில் பாம்பு போல் வளைந்த கோடுகள் உருவானது. “இறந்த பாம்புகளின் ஆவிதான் இப்படி பயிரில் கோடு போடுகின்றன. அடுத்து பாம்புகள் படையெடுத்து வந்து ஊரையே அழித்துவிடும். இதற்கு நாகபூஜை செய்து பரிகாரம் தேட வேண்டும்” என்று மக்கள் புரளி கிளப்பினர். ஆங்காங்கே பலர் நாக பூஜைகள் செய்யத் தொடங்கினர்.

இந்தப் பிரச்சினையில் தலையிட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை, “அந்தப் பகுதியில் பயிர்களின் இலைகள் மீது பரவியுள்ளது ஒரு வகை வைரஸ்” என்று கூறியது. மேலும் ஆய்வில் ஈடுபட்டு சில மாதங்களில் அதற்கான மருந்தையும் கண்டுபிடித்தது. அதன் பிறகே அடங்கியது பாம்பு பீதி.

இது நடந்த 2 மாதங்களில் ஆக்ரா - அலிகர் இடையில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்புடன் ஒரு பெண்ணுக்கு காதல் உண்டாகி விட்டதாக ஒரு செய்தி கிளம்பியது. அந்தப் பாம்பு அடிக்கடி வந்து அந்தப் பெண்ணை அன்பாக கொத்திவிட்டுச் செல்வதாகவும், ஆனால் விஷம் கக்குவதில்லை எனவும் மக்கள் பேசினர். பிறகு சில நாட்கள் கழித்து அது விஷமில்லாத பாம்பு எனவும் அந்தப் பெண், தான் பிரபலம் அடைவதற்காக கிளப்பிய புரளி இதுவென்றும் குட்டு வெளிப்பட்டது. இதுபோல் இன்னும் பல கதைகள் உ.பி.யில் நிலவுகின்றன.

திருமண முயற்சிக்கு முன் சடங்குகளில் ஈடுபட்ட சந்தீப் பட்டேல் மற்றும் அவரது உறவினர்கள். அடுத்த படம்: வேடிக்கை பார்க்கும் கிராம மக்கள்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
13-04-2015

ஒரு மதமாகட்டும், அல்லது ஒரு மார்க்கமாகட்டும், அதன் சட்டதிட்டங்கள் இன்னதுதான் என்று வரையறுக்கப்படாவிட்டால் அந்த சமூகம் இது போன்ற மூடப் பழக்கங்களில் வீழ்ந்து தங்களின் அறிவை இழந்து விடுவார்கள் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

1 comment:

Dr.Anburaj said...

சுவாமி விவேகானந்தாின் ஞானதீபத்தை இந்த ஊா் மக்கள் படித்திருந்தால் இவ்வளவு முட்டாள்தனமாக காாியத்தைச் செய்திருக்க மாட்டாா்கள்.பழமையின் பாழ்கள் மாற வேண்டும். புதிய வெள்ளம் பாய்யச்ச வேண்டும். செய்யாதது அரசின் தவறு.இந்து சமூகத்தை மலினப்படுத்துபவா்களுக்கு அவல் கிடைத்துவிட்டது.

அரேபிய அடிமை சுவனப்பிாியனுக்கு கொண்டாட்டம்.