Followers

Sunday, April 10, 2016

விருத்தாசலத்தில் இன்று ஜெயலலிதா பிரச்சாரம்: விளைநிலங்களில் தார் சாலை, ஹெலிபேட்



விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ள பகுதியில் சுமார் 50 ஏக்கர் விளை நிலங்களில் தார் சாலை மற்றும் ஹெலிபேட் அமைத்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவரும் முதல்வர் ஜெயலலிதா இன்று (ஏப்.11) விருத்தாசலத்தில் 15 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக விருத்தாசலம் - சேலம் புறவழிச் சாலையில் 50 ஏக்கர் விளைநிலம் தயார் செய்யப்பட்டுள்ளது.

மேடையிலிருந்து 350 மீட்டர் தொலைவில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலி பேடிலிருந்து மேடை நோக்கி காரில் செல்லும் முதல்வர் ஜெயலலிதாவுக்காக விளை நிலத்தில் தார் சாலை அமைக் கப்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலங்கள் முழுவதும் அதிமுக கொடிகள் அமைக்கப்பட்டிருப்ப தோடு, குளிர்சாதன வசதியுடன் கூடிய பிரம்மாண்ட மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

அதிருப்தி

விவசாய நிலத்தில் தார்சாலை அமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தைத் சேர்ந்த சக்திவேல் என்பவர் கூறும்போது, “கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளை பற்றி துளியும் கவலைப்படாதவரா தற்போது விளை நிலத்தில் தார் சாலை அமைக்க வருந்தப்போகிறார். எங்கள் விளை நிலத்தில் செருப்பு அணிந்துகூட செல்லமாட்டோம். புனித பூமியாக கருதும் விளை நிலத்தில், விவசாயிகளை மிரட்டி தார் சாலை அமைத்துள்ளனர். இந்தத் தேர்தலில் அவருக்கு சரியான பாடம் புகட்டுவோம்” என்றார்.

பரவளூர் கரும்பு உற்பத்தி யாளர் சங்க பொருளாளர் பாலு கூறும்போது, “அதிமுகவினரின் இந்த செயல் அராஜகமானது. விவசாயிகளை மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளனர். இதற்கான விலையை அவர்கள் கொடுக்க நேரிடும்” என்றார்.

ரெட்டிக்குப்பம் ஜனநாயக கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கூறும்போது, ‘‘உண்ண உணவு கொடுக்கும் பூமியில் தாரை ஊற்றி வீணடித்திருக்கின்றனர். அவற்றை மீண்டும் சரிசெய்வது எளிதானதல்ல. அந்தம்மா முக்கால் மணிநேரம் வந்து போக போவுது. அதற்காக வாழ்வாதாரமான விளை நிலத்தை பாழாக்கிவிட்டனர். இதன் விளைவு தேர்தலில் எதிரொலிக்கும்” என்றார்.

இது தொடர்பாக அதிமுகவினரை கேட்டபோது, “விவசாயிகளின் ஒப்புதலை பெற்றே விளைநிலங்களில் மேடை அமைத்துள்ளோம். பிரச்சார கூட்டம் முடிவுற்றதும், விளைநிலத்தை பழைய நிலைக்கு சரிசெய்து கொடுத்து விடுவோம்” என்றனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
11-04-2016

No comments: