விமானத்தில் வைத்து கன்ஹையா குமார் மீது தாக்குதல்
ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவர் கன்ஹையா குமார் மீது விமானத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஏப்ரல் 24)ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மும்பையில் இருந்து புனே செல்லும் விமானத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
விமானம் புறப்படுவதற்கு முன்னர் இச்சம்பவம் நடைபெற்றதாக கன்ஹையாவின் நண்பர் நிஷாந்த் தெரிவித்துள்ளார். செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த ஒரு நபர் திடீரென்று வந்து கன்ஹையாவின் கழுத்தை பிடித்து நெரித்ததாக அவர் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த விமானி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அனைவரையும் விமானத்தை விட்டும் இறங்குமாறு கூறினர்.
தாக்குதல் நடத்திய நபர் தற்போது மும்பை காவல்துறையின் கஸ்டடியில் உள்ளார். அவருடன் மற்ற நபர்கள் வந்திருந்த போதும் அவர்கள் விமானத்தை விட்டும் இறக்கி விடப்படவில்லை என்றும் நிஷாந்த் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய நபரின் பெயர் மனாஸ் தேகா என்றும் அவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் என்றும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து கன்ஹையா குமார் தனது டிவிட்டர் பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற மிரட்டல்களால் தாங்கள் துவண்டு விட மாட்டோம் என்றும் புனேயில் இன்றைய நிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடக்கும் என்றும் தெரிவித்தார்.
நன்றி புதிய விடியல்
No comments:
Post a Comment