Followers

Wednesday, July 01, 2020

ரஷ்யா & இஸ்லாம்.......

ரஷ்யா & இஸ்லாம்.......
பிரபல சர்வே நிறுவனமான Pew Research center, சென்ற வருடம் ரஷ்ய மக்களிடம் இஸ்லாம் குறித்த ஆய்வொன்றை நடத்தியது. அதில், 76% ரஷ்யர்கள் இஸ்லாம் மீது நன்மதிப்பை கொண்டிருப்பதாக தெரிவித்தனர். மக்கள் மட்டும் அல்ல, ரஷ்ய அரசியல்வாதிகளும் கூட இஸ்லாமை தங்கள் பாரம்பரியத்தின் பிரிக்கமுடியா சக்தி என்றும், தங்கள் நாட்டை கட்டமைத்ததில் கணிசமான பங்கு இம்மார்க்கத்திற்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனாலேயே ரஷ்ய அரசியலமைப்பு இஸ்லாமிற்கு கவுரவமான இடத்தை கொடுத்திருக்கிறது.
ரஷ்யாவின் இன்றைய முஸ்லிம் மக்கட்தொகை 17% ஆகும் (சுமார் 2.5 கோடி). இதுவே 2050 - ஆம் ஆண்டு வாக்கில் முப்பது சதவிதத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் மட்டும், முஸ்லிம்களின் மக்கட்தொகை சுமார் பத்து லட்சமாகும். முஸ்லிம்கள் இல்லையென்றால் மாஸ்கோவின் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது என இந்நகரத்தின் மேயர் ஒருமுறை குறிப்பிட்டது இங்கே கவனிக்கத்தக்கது.
ரஷ்யாவின் முஸ்லிம் பெரும்பான்மை குடியரசுகள் ஏழு ஆகும். செசன்யா, டகெஸ்டான், டாடரஸ்தான் ஆகியவை இதில் அடங்கும். வெளியுறவு மற்றும் ராணுவம் தவிர்த்து மற்ற அனைத்தையும் இவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். ரஷ்யா குறித்த உரையாடல் என்றால் அதில் செசன்யா இல்லாமல் இருக்காது. சோவியத் உடைந்த போது தங்களையும் தனி நாடாக அறிவித்துக்கொண்டார்கள் செசன்னியர்கள். பின்னர் ரஷ்யாவுடன் இரு போர்கள். முடிவில் தங்களுடன் செசன்யாவை மறுபடியும் இணைத்துக்கொண்டது ரஷ்யா. இன்று, ரஷ்ய அரசின் பாசிட்டிவ் அணுகுமுறைகளால், செசன்யாவில் பிரிவினைவாதம் குறைந்து அமைதி நிலவுகிறது.
சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய கல்வி/ஆன்மீக நிறுவனங்கள் ரஷ்யாவில் இயங்குகின்றன. இவற்றிற்கு மானியமும் வழங்குகிறது ரஷ்ய அரசு. டாடர் இன முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் டாடரஸ்தான் குடியரசின் தலைநகரான கசன் தான் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இரண்டாவது பெரிய ரஷ்ய நகரமாகும் (மாஸ்கோவிற்கு முதல் இடம்). இந்நகரில் அமைந்திருக்கும் Qolsarif பள்ளிவாசல், ஐரோப்பாவின் மிகப்பெரும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும் (படம் 1)
இரு பெருநாள் தினத்துடன், மற்றொரு தினத்தையும் தேசிய விடுமுறையாக அறிவித்திருக்கிறது டாடரஸ்தான் அரசு. அது என்னவென்றால், இவர்களின் மூதாதையர் இஸ்லாமை தழுவிய நாள் தான் அது. 922 - ஆம் ஆண்டு, மே 21-ல் டாடர் இன மக்கள், பாக்தாத்-திலிருந்து வந்த முஸ்லிம் மக்களின் பிரச்சாரத்தால் இஸ்லாமை தழுவினராம். ஆகவே அந்நாளை தேசிய விடுமுறையாக கொண்டாடுகிறது இந்த குடியரசு. டாடர் இன மக்களில் ஐவரில் ஒருவர் இஸ்லாமிய மார்க்க அறிஞராக இருக்கிறார். டகெஸ்டான் குடியரசில் பல்வேறு இஸ்லாமிய பல்கலைக்கழகங்களும், மதரசாக்களும் செயல்படுகின்றன.
ரஷ்யாவின் Norilsk நகரில் அமைந்துள்ள நார்ட் கமால் மசூதி தான் (படம் 2), உலகின் வடக்கோடியில் அமைந்துள்ள பள்ளிவாசலாகும். இதனை டாடர் இன மக்கள் நிர்வகிக்கின்றனர். எட்டாயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ள ரஷ்யாவில் இருந்து, வருடந்தோரும் சுமார் 20,000 முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கையை 28,000-மாக உயர்த்த வேண்டும் என தொடர்ந்து சவுதி மன்னரை வலியுறுத்தி வருகின்றனர் ரஷ்யர்கள்.
யாரும் எதிர்பாரா வண்ணம், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பில் (OIC) சேர விருப்பம் தெரிவித்தது ரஷ்யா. தற்பொழுது OIC-யில் பார்வையாளர் அந்தஸ்த்தில் இருக்கிறது. சோவியத் ரஷ்யாவிலும், அதற்கு பின்பான ரஷ்யாவிலும் நாம் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உண்டு. மக்கள் மனதில் ஆழமாக குடியேறிய ஒரு கொள்கையை அடக்குமுறையால் எல்லாம் வென்றுவிட முடியாது. என்றாவது ஒருநாள் அது உங்களை நிச்சயம் மிகைத்துவிடும். அப்பொழுது, அரவணைத்து செல்வது மட்டுமே உண்மையான வெற்றி என்ற நிதர்சனம் புரியவரும்.
படம் 3: செசன்ய தலைநகர் க்ராஸ்னி-யில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி.
இப்பதிவுக்கான ஆதார ஊடகங்கள்:
Pew Research, BBC, TRT World, The Times, NewsWeek, Russian Population census & Wikipedia
படங்களுக்கு நன்றி:
Wikipedia & TRT World.
சகோ @Aashiq Ahamed ன் பதிவிலிருந்து....




No comments: