Followers

Sunday, July 26, 2020

இராமனைப் போல் எதற்கும் பின்னால் தான் இருப்பார்கள்.


பார்ப்பனர்கள் எப்போதும் மரத்திற்கு பின் மறைந்து நின்று செயல்படும் இராமனைப் போல் எதற்கும் பின்னால் தான் இருப்பார்கள்.
நமது சுக்ரீவர்களும் விபீஷ்ணர்களும் அனுமர்களும் தான் குதியாட்டமும் கும்மாளமும் போடுவார்கள்.
இது இராமாயணக் காலந்தொட்டு இன்றைய இராவணலீலா காலம் வரை பளிங்கு போல்

12 comments:

Dr.Anburaj said...

சதா பார்ப்பன் நஞ்சு பிரச்சாரம்.
ஒரு முஸ்லீம் பெரியவா் வாலிவதம் குறித்தவிவாதம் செய்துள்ளாா்.அதை பதிவு செய்கிறேன். இலக்கிய தேன் அருந்துவோம்.
வாலி வதம் நியாயமா அல்லவா என்று ஆராய்வோம் நியாயமாயினும் அல்லவாயினும் ஆராய்ச்சியில் ஏற்படும் கம்பனின் சுவையை நாம் அனுபவிக்கலாம்
பிராட்டியைப்பிரிந்து தவிக்கும் இராம லக்குவர்க்குக கவந்தன் தன் அரக்க உருவம் நீங்கப்பெற்றதும் சீதையைத்தேடும் உபாயம் சொல்கிறான். அவன் கூறுகிறான் :”நீங்கள் எத்தகைய வில் வீரராயினும் ,இணை யாரும் இல்லைஎன்றாலும் ,இணையற்ற சீதையைத் தேடுவதற்கு அவசியம் துணை வேண்டும் .எத்துனை வீரராயினும் நீரைக் கடக்க ஓடம் வேண்டுமல்லவா ? அதேபோலபகைவரை வெல்லத் துணை வேண்டும் .தனியாக நின்று பகை வெல்லுதல் இயலாது
“கணை உலாம் சிலையினீரைக் காக்குனர் இன்மையேனும்
இணை இலான்தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்
புனை இலாதவாற்கு வேலை போக்கு அரிது அன்னதேபோல்
துணை இல்லாதவற்கு இன்னா பகைப்புலம் தொலைத்து நீக்கல்”
என்று கூறி , அவ்வாறு துணை கொள்ளத்தக்கவன் கதிரவன் சிறுவனான சுக்ரீவனே ! அவன் ருஷ்ய முகம் எனும் மலையில் இருக்கிறான் .மதங்கா கிராமத்தில் உள்ள சவரி அதற்கு வழி கூறுவான் என்று கூறிச் செல்கிறான் . அதை இராம இலக்குவரும் ஒப்புக்கொண்டனர்
அதிர் கழல் வீரர் தாமும் அன்னதே அமைவதானர். இராமன் கணையால் வீழ்ந்த வாலி கூறுவான: ஏ ராமா ! உனக்குத் துணை வேண்டுமானால்
புயலைப் பற்றும் அப்பொங்கு அரி போக்கி ஓர்
முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ
என்று கேலி செய்கிறான்
ஏன் இந்தக்கவந்தன் வலியனாகிய வாலியை விட்டு விட்டு பயந்து ஒதுங்கி உறையும் சுக்ரீவனைத் துணையாக்கிக்கொள்ளச் சொல்கிறான் ! வாலியும் இராமன்பால் அன்பு பூண்டவன் என்பது அவனுக்குத் தெரியாமலா இருக்கும்! இன்னும் பார்த்தால் சுக்ரீவனோ இராம லக்குவவரைப்பார்த்து அஞ்சி மறைகிறான் ;வாலியோ இராமன் பேரைச் சொல்லக்கேட்டவுடன் குதிக்கிறான் கூத்தாடுகிறான் .இதில்தான் வாலி வதத்தின் நியாயம் உருவாகிறது
“ நீ நல்லவனா கெட்டவனா என்பது உனக்குத் தெரியாது ; உன் பக்கத்தில் உள்ளவர்கள் உன்னைபற்றி என்ன கருதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும் அவர்கள் உன்னை நல்லவன் என்றல் நீ நல்லவன்தான். கெட்டவன் என்றால் நீ கெட்டவன்தான் .திருந்திக்கொள் “ இது நபி நாயகம் அவர்களின் வாக்கு .
கவந்தன் வாலியை நல்லவன் என்று கருதவில்லை அதனால் அவனைத் துணை கோடச் சொல்லவில்லை . வளமை மிகுந்தவனாகவும் இராமன் பால் அன்பு பூண்டவனாகவும் இருந்தும் அந்த சிங்கத்தை விட்டு ,சுக்ரீவனாகிய முயலைத் துணைக்கு அழைத்துக் கொள்ளச் சொன்னான் ..அடுத்துள்ள கவந்தன் வாலியை எவ்வளவு கெட்டவனாகக் கருதினான் என்று அறிகிறோம்

Dr.Anburaj said...

ஒருவாறு ,கவந்தன் அரக்கனாக இருந்து மன்னுயிர் புடைத்துத் தின்றதால் வாலியை இவனுக்குப் பிடிக்கவில்லையோ என்றும் கருதலாம் .ஆனால் தவபெண்ணான சவரியும் வாலியைப் பற்றிக் கூறாமல் சுக்ரீவன் இருப்பிடத்திற்கே வழி கூறுகிறாள்.
துணை பரித் தேரோன் மைந்தன் இருந்த அத்துலக்கு இல் குன்றம்
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னான்

இராமன் ,வரப்போவதை முன்னதாக அறிந்த சவரிக்கும் பக்கத்தில் வாழும் வாலி சுக்க்ரீவனைப்பற்றி நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும் அவளும் துணை கொள்ள வாலியைப்பற்றிக் கூறாததிலிருந்து வாலி அக்கம்பக்கத்தாரால் வெறுக்கப்படும் தீய செயல் உள்ளவன் என்று அறிகிறோம்
வாலியைப்பற்றியும் அவன் செய்த பெரும் பிழையைப்பற்றியும் இராமன் அனுமன் வாயிலாத்தான் அறிகிறான் . சுக்ரீவனுக்கு அபயம் அளிக்கும்போது கூட
மாற்று இனி உரைப்பது என்னோ? வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார், தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்
என்று வாக்குறுதி கூறும்போதும் அவனது துயரை இராமன் அறிந்து கொள்ளவில்லை
வாக்குறுதி ஈந்த பின்னர் உன் மனைவி எங்கே , என்போல நீயும் மனைவியை இழந்தவனா
பொருந்து நன் மனைக்குரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்

இப்பொழுதுதான் அனுமன் வாலியைப் பற்றியும் அவன் இழைத்த தீங்கினைபற்றியும் கூறுகிறான்.
வாலியின் வலிமை அளவிடற்பாலதன்று. அவனைத் துந்துபி எனும் அரக்கன் எதிர்த்தான் .இருவரும் பிலத்தினிற் சென்று இருபத்தியெட்டு மாதங்கள் வராதது கண்டு சுக்ரீவன் அழுது கலங்குகிறான் ஐயோ அண்ணனை அரக்கன் அழித்து விட்டானே
கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்
பொன்றுவேன்
என
சுக்ரீவனும் பிலத்துள் புகப்போனான் . அமைச்சர்கள் அவனைத் தடுத்து அடுத்த அரசுரிமையைக் கொடுக்க இவன் வெறுப்புடன் ஏற்றுக்கொண்டான் .மாயாவி திரும்பி வந்து மறுபடியும் எங்களைத் துன்புறுத்துவான் என்ற அச்சத்தில்
உன்னு குன்றெலாம் உடன் அடுக்கி அப்பிலத்தை அடைந்தோம்
ஆனால் உண்மையில் வாலி சாகவில்லை .மாயாவிதான் மடிந்திருக்கிறான் .அடைக்கப்பட்ட மலைகளையெல்லாம் காலால் எற்றிவிட்டு நன்றாயிருக்கிறது தம்பி காவல் செய்த லட்சணம் என்று கூறி கடுங்கோபத்துடன் வந்தான் வாலி. சுக்ரீவன் அவனை அடிபணிந்து நடந்தவற்றைக் கூறினான் .தன் பிழையை மன்னிக்குமாறு வேண்டினான்
“ஆணை அஞ்சி இவ்வரசை எய்தி வாழ்
நாண் இலாத என்நவையை நல்குவாய் “
என்று இறைஞ்சினான் .மந்திரிகளும் எடுத்துச் சொன்னார்கள் அனால் வாலி மன்னிக்கவில்லை . கடுங்கோபத்துடன் தாக்கப்போன சமயம் எப்படியோ தப்பித்து ஒடி வந்து விட்டன சுக்ரீவன்
உருமை என்று இவற்கு உரிய தரமாம்
அருமருந்தையும் வாலி விரும்பினான்
இரண்டையும் துறந்து மனைவியையும் நாட்டையும் துறந்து
சுக்ரீவன் இங்கிருந்தனன்
இதுதான் கருமம் கடவுளே என்று முடித்தான் அனுமன்
இக்குற்றச்சாடிலேயே வாலியின் அக்கிரமச் செயல் நன்கு புலனாகிறது .அறியாமல் செய்த குற்றத்துக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டும் வாலி தம்பியை துரத்தி விட்டான் .மேலும் அவனது அருமை மனைவி உருமை என்பவளைக் கைப்பற்றிக்கொண்டான் .இப்புகாரை “அறம் தலை நிறுத்த வந்த அண்ணல்” என்ற முறையிலே ஒரு நீதிபதி ஸ்தானத்திலே ஆராய்கிறான் இராமன்

Dr.Anburaj said...

புகாரைத் தாக்கல் செய்தவன் வாய்மை தவறாத அனுமன் .குற்றமோ கொடியது. தம்பியை நாட்டை விட்டுத் துரத்தியதுமன்னியில் அவன் மனைவியையும் அபகரித்துக்கொண்டான் .இக்குற்றத்துக்குத் தண்டனை வாலி கொல்லப்படுவதுதான் என்று தீர்ப்பும் கூறி விட்டான்
“தீயோர் இறந்துநூறி தக்கோர் இடர் துடைப்பதல்லவோ “ இவன் கடமை
“உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவனுயிர்க்கு உதவி விலகும் என்னினும் ,வில்லிடை வாளியின் வீட்டி தலைமையொடு நின் தாரமும் உனக்கின்று தருவேன் “
என்று முடிவு கூறி விட்டான் .இது ஒருதலைப் பட்ச முடிவென்றாலும் உண்மையை ஆய்ந்து செய்த முடிவுதான் .வாலி விசாரணைக்கு அழைத்தால் வரவா போகிறான் ,வந்தாலும்தான் வேறு முடிவு ஏது?. இந்த முடிவு மனைவியை இழந்ததால் அறிவிழந்து செய்வதென்று வாலி வாதம் செய்கிறான்
“ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியை பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை
இன்னும் வாதாடுகிறான்
ஒரு அரக்கன் உன் மனைவியை தூக்கிச் சென்ற ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ள குரங்கு அரசனான நான்தானா அகப்பட்டேன்
“அரக்கன் ஒரு அழிவு செய்து வீழ்த்திட அதற்கு மற்றோர் குரங்கினத்து அரசைக்கொல்ல மனு நெறி கூறிற்றுண்டோ”
“தாரமற்று ஒருவன் கொள தன் கையிற்
பாரவெஞ்சிலை வீரம் பழுதுற
நேருமன்று மறைந்து நிராயுதன்
மார்பின் எய்யவோ ! வில் இகல் வல்லதே ?
ஆத்திரம் அடைந்தது உண்மைதான் .அறம் அழிக்கப்பட்டது கண்டு யார்தான் ஆத்திரம் கொள்ளாதிருக்க முடியும் . ஆனால் தனக்கு நேர்ந்த இழப்பின் அவன் ஆத்திரம் கொண்டு நீதி தவறவில்லை
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்குதோள் தம்பிக்கு தன்னரசு உரிமைப்
பாரம் ஈந்தவன் பரிவிலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வௌவினான் என்ற சொல் தரிக்குமாறு உளதோ
என்று கவி கூறுகிறான்

தன்னுடைய தம்பியின் தாரத்தைக கைப்பற்றிக்கொண்டானே !இந்த அநீதியை எவ்வாறு சகிப்பது என்று தன நீதிக்காக ஆத்திரம் கொண்டானே அன்றி தன சுயநலத்துக்காக அல்ல என்பது கவிக்கூற்று

வேண்டுமென்றே செய்யாத குற்றத்துக்கு மன்னிப்புக் கோரும் தம்பியை ,மந்திரி பிரதானிகள் எல்லாம் அவன் குற்றம் செய்யவில்லை நாங்கள்தான் அவனை அரசவையில் அமர்த்தினோம் என்று கூறியும் ,துரத்தி விட்டுஅவன் மனைவியையும் பற்றியது பெருங்குற்றம்
இதற்கு தண்டனை உயிர் போக்குதல்தான் என்று அறம் தலை நிறுத்த வந்த நீதிபதி தீர்ப்புக் கூறி விட்டான்
இது ஒருதலைப்பட்சமான தீர்ப்பாகத் தோன்றினாலும் வாலிக்கு வாதம் செய்ய பின்னர் வாய்ப்பு அளிக்கப படுகிறது

எழுத்தாக்கம்
ஹாஜி கா. பீர் முகமது பி .எஸ்ஸி
ஒய்வு பெற்ற நகராட்சி ஆணையர்

Dr.Anburaj said...

வாலிவதம் குறித்த அடுத்த கட்டுரை
வாலி வதம் முடிந்து விட்டது. வாலி இறந்து கிடக்கிறான். அங்கே , வாலியின் மகன் அங்கதன் வருகிறான். அங்கதனை இராமனிடம் அடைக்கலமாக கொடுத்த பின், வாலி விண்ணுலகுக்கு அப்பால் ஏகினான்.

வாலியை இராமன் மறைந்து இருந்து கொன்றான். அது சரியா தவறா என்ற வாதம் இன்று வரை நீண்டு கொண்டே இருக்கிறது.

அந்த வாதத்திற்கு ஒரு வதம் இன்று !

மற்றவர்கள் எப்படியோ நினைத்து விட்டுப் போகட்டும்...இராமன் என்ன நினைத்தான் ? மறைந்து இருந்து கொன்றது தவறு என்று இராமன் நினைத்தானா ? அது பற்றி அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருந்ததா ? அல்லது தான் செய்தது சரி என்று அவன் நினைத்தானா ?

இராமனுக்கு அவன் செய்ததில் ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை. தான் , தன் கடமையை செய்ததாகவே அவன் நினைக்கிறான்.

எப்படி ?

வாலி அடிபட்டுக் கிடக்கிறான், உயிர் எந்த நிமிடமும் பிரியலாம், அந்த நிலையில் வாலியின் மகனை தனது மெய் காப்பாளனாக இராமன் நியமிக்கிறான். தான் வாலியை கொன்றது சரி இல்லை என்று இராமன் நினைத்திருந்தால், அங்கதனை தன் மெய் காப்பாளனாக நியமித்து இருப்பானா ? ஒரு வேளை , அங்கதன் தன்னை சரியான சமயத்தில் பழி வாங்கிவிட்டால் என்ற என்ன பய உணர்ச்சி இராமனிடம் இல்லை. தான் செய்தது சரி இல்லை என்று இராமன் நினைத்து இருந்தால், அங்கதனை தன் அருகிலேயே வர விட்டிருக்க மாட்டான் அல்லவா ?

தன்னுடைய பொன்னாலான வாளை அங்கதனிடம் தந்து, இந்த துக்கத்தை நீ பொறுத்துக் கொள் என்று சொல்கிறான்.

பாடல்

தன் அடி தாழ்தலோடும்
தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி,
‘நீ இது பொறுத்தி ‘என்றான்;
என்னலும், உலகம் ஏழும்
ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு
அப்புறத்து உலகன் ஆனான்.

பொருள்

தன் அடி தாழ்தலோடும் = தன் அடியில் வீழ்ந்து வணங்கிய அங்கதனை

தாமரைத் தடங்கணானும், = தாமரை போன்ற பெரிய கண்களை கொண்ட இராமனும்

பொன் உடை வாளை நீட்டி, = தன்னுடைய பொன்னாலான வாளை தந்து

‘நீ இது பொறுத்தி ‘என்றான் = நீ இந்த துக்கத்தை பொறுத்துக் கொள் என்றான்

என்னலும் = அப்படி சொன்ன பின்

உலகம் ஏழும் ஏத்தின; = இராமனை உலகம் எழும் போற்றியது

இறந்து, வாலி, = வாலி இறந்து

அந் நிலை துறந்து, = அந்த நிலையை துறந்து

வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். = வானுக்கு அப்புறம் உள்ள உலகத்துக்குச் சென்றான்

Dr.Anburaj said...

அரசர்கள் தங்கள் வாளை அவர்களுடைய மெய் காப்பாளர்களுக்குத்தான் தருவார்கள். அது மிக மிக நம்பிக்கைக்கு உரிய பதவி. இராமன், தன் உடைவாளை இலக்குவனிடம் கூட தரவில்லை. அதற்கு இலக்குவனிடம் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் அல்ல. இலக்குவனுக்கு இணையாக, இன்னும் சொல்லப் போனால் அதை விட ஒரு படி மேலான இடத்தை, நெருக்கமான இடத்தை அங்கதனுக்குத் தருகிறான் இராமன்.

அதுவும் எப்போது ?

யுத்தம் முடிந்து, பொது குழு, செயற் குழு எல்லாம் கூட்டி, ஆலோசனை செய்து முடிவு எடுக்கவில்லை. போர் முடிந்த அந்தக் கணமே முடிவு எடுக்கிறான். யாரையும் கேட்கவில்லை.

தான் செய்தது தவறு என்று இராமன் நினைத்து இருந்தால், அப்படி ஒரு முடிவை எடுத்திருப்பானா ?

சரி. இராமன் மனதில் களங்கம் இல்லை. அங்கதனுக்காவது இராமன் செய்தது தவறு என்று எப்போதாவது தெரிந்ததா ? இராமனுக்கு அருகில் எந்நேரமும் இருக்கிறான். உடை வாளோடு. இராமன் , தன்னுடைய தந்தையை அநியாயமாகக் கொன்று விட்டான் என்று அங்கதன் நினைத்திருந்தால் , இராமன் தனியாக இருக்கும் நேரத்தில் ஏதேனும் செய்து இருக்கலாம். குறைந்த பட்சம் , அந்த மெய் காப்பாளன் பதவியையாவது வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம்.

இல்லை. அங்கதன் அதை ஏற்றுக் கொள்கிறான்.

சரி, இது ஏதோ இராமன் அங்கதனை சமாதனம் செய்ய எடுத்த ஒரு இராஜதந்திர முடிவு என்று நினைக்கலாமா என்றால், முடியாது.

ஏன் முடியாது ?

வெறும் அலங்கார பதவி இல்லை இராமன் கொடுத்தது.

இராவணனிடம் தூது போக அங்கதனை அனுப்புகிறான்.

இலக்குவனை அனுப்பி இருக்கலாம். அனுமனை அனுப்பி இருக்கலாம். அனுமன் இலங்கை பற்றி நன்கு அறிந்தவன். அங்கதனை விட அறிவில், ஆற்றலில் , அனுபவத்தில் உயர்ந்தவன். அனுமனை அனுப்பவில்லை. அங்கதனை அனுப்புகிறான்.

அங்கதனை அவன் எவ்வளவு தூரம் நம்பி இருந்தால் அந்த வேலையை அவனிடம் ஒப்படைத்து இருப்பான் !

சரி அதோடு முடிந்ததா என்றால் இல்லை.

இராவண வதம் முடிந்தது. எல்லோரும் அயோத்தி வந்து விட்டார்கள். இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள்.

அங்கும் அங்கதன் உடை வாளை ஏந்திக் கொண்டு வந்து நிற்கிறான்.

பாடல்

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி

பொருள்

அரியணை அனுமன் தாங்க, = அரியணையை அனுமன் தாங்க

அங்கதன் உடை வாள் ஏந்த = அங்கதன் உடை வாளை ஏந்த

பரதன் வெண் குடை கவிக்க = பரதன் வெண்கொற்றக் குடை பிடிக்க

இருவரும் கவரி பற்ற = இலக்குவனும் சத்ருக்கணும் கவரி வீச

விரை செறி குழலி ஓங்க = சீதை சிறப்புடன் நிற்க

வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் = சடையப்ப வள்ளலின்

மரபுளோர் கொடுக்க = மரபில் வந்தவர்கள் கொடுக்க

வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி = வசிட்டனே இரமானுக்கு முடி சூட்டினான்

Dr.Anburaj said...

இராவண யுத்தம் முடிந்தவுடன் அங்கதனை இராமன் விட்டு விடவில்லை. தன்னோடு அயோத்திக்கு அழைத்து வந்து விடுகிறான். குகன் வருகிறேன் என்று சொன்ன போது வேண்டாம் என்று மறுத்தான். வீடணனை இலங்கையில் தங்க வைத்து விட்டான். ஆனால், அங்கதனை மட்டும் தன்னோடு கொண்டு நடக்கிறான் இராமன்.

வாலியை கொன்றதில் ஒரு குற்ற உணர்வு இருந்திருந்தால், அங்கதனை தவிர்த்து இருப்பான் இராமன். இராமன் செய்தது தவறு என்று நினைத்து இருந்தால் அந்தப் பதவியை ஏற்று இருக்க மாட்டான் அங்கதன்.

இது இரண்டுமே நடக்கவில்லை.

தன்னிடம் அடைக்கலம் என்று வாலி தந்த பின், அங்கதனை தன் பிள்ளை போலவே நடத்தி இருக்கிறான் இராமன்.

தன் உயிருக்கு பாதுகாவலனாக அவனை நம்பி இருக்கிறான் இராமன்.

இராமன் தவறு செய்தான் என்று வாலி நினைக்கவில்லை.

அவன் மகன் அங்கதன் நினைக்கவில்லை.

இராமனும் நினைக்கவில்லை.

நாம் மட்டும் ஏன் நினைக்க வேண்டும் ?

Dr.Anburaj said...

வாலிவதத்தில், இராமன் நடந்து கொண்டது சரியா? அல்லது தவறா?

இராமன் நடந்துகொண்டது தவறுதான் என்றும், சிலர் அது சரி என்றும் தீர்ப்புத் தந்திருக்கிறார்கள்.

மூதறிஞர் இராஜாஜி கூறும்போது, "இராமன் என்கிற வெள்ளைத் துணியிலே விழுந்த கரும் புள்ளி", என்று வாலி வதத்தை விமர்சித்திருக்கிறார்.

கவிஞன் தான் படைத்த காப்பியத்தின் நாயகன் இது போன்ற ஒரு விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரியாமல் அப்படி ஒரு பாத்திரத்தைப் படைத்திருக்க வாய்ப்பே இல்லை.

ஒரு வேளை கம்பனுக்கே இராமன் நடந்து கொண்டது சரியா அல்லது தவறா என்கிற நிலையிலேயே இந்த நிகழ்ச்சியை விவாதத்திற்கென்றே வைத்து விட்டுச் சென்றிருக்கின்றானோ? என்று கூட எண்ணத் தோன்றும்.

http://www.dinamani.com/Images/feb09%5C22ramlakshman.jpg

கல்லாத கலைகள் ஒன்றும் இல்லாதவன் கம்பன். "நாத்தொய்வில்லா நன்னூற் புலவன்",என்று சிலம்பின் ஆசிரியர் உரையால் ஏத்தலாம் இந்தக் கவிஞனை. இவ்வளவு ஆற்றல் பெற்ற கவிஞன், வாலி வதத்தைப் பற்றி தன் கருத்தைச் சொல்லாமல் விட்டிருப்பானா என்று ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால், விடை கிடைத்துவிடும்.

இராமன் அயோத்தியை விட்டு கானகம் செல்லும் போது யார் யாரெல்லாம், எவை எவையெல்லாம் அழுதன என்று பட்டியல் இடுகிறான்.

"ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த
பூவும் அழுத....."

என்கிற பதங்கள் மிக அற்புதமானவை.

அன்றைக்கு மலர்ந்த பூக்கள், இராமன் பிரிவை நினைத்து அழுதனவாம். காரணம், தாவரங்களுக்கும், அதிலே பூக்கும் பூக்களுக்கும் உயிர் உண்டு என்கிற நுண்ணிய கருத்தை 1200 ஆண்டுகளுக்கு முன்பாகச் சொன்னவன் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

எந்தப் பயிர்களை எந்தெந்த சமயத்தில உபயோகப்படுத்தினார்கள் நம் முன்னோர்கள் என்பதையும் சொன்னவன் அவன். பொதுவாக "எள்" எனப்படும் பயிர் அமங்கல நிகழ்ச்சியிலேயே அதிகம் பயன்படுத்தப்படும். உதாரணத்துக்கு, கும்பகர்ணன் வீடணனுக்குச் சொல்கிறான், "நீ இங்கு இருக்க வேண்டாம். இராமனிடத்திலே போய் சேர்ந்து நிரந்தரமான அவனுடைய ஆசி பெற்று வாழ்வாயாக", என்று. அதற்கு ஒரு காரணத்தையும் சொல்கிறான்.

"இந்த அரக்கர் குலம் முழுவதும் இராமனது கணையினாலே அழியப்போகிறது என்பதை நான் அறிவேன். தம்பியர் இன்றி நம் தனையன் இராவணன் தரை மேல் மாண்டு கிடப்பான். அவனுக்கு எள் நீர் இறைத்து ஈமக் கடன் செய்வதற்கு நீ ஒருவன் மட்டுமாவது எஞ்சி இருக்க வேண்டும். அதனால் நீ அவனிடத்திலே அடைக்கலமாகச் செல்", என்கிறான். இந்தப் பாடலிலிருந்து கம்பன் "எள்" என்பதை அமங்கல நிகழ்ச்சிக்கு பயன்படுத்துகிறான் என்பது தெரிய வருகிறது.

அப்படியென்றால் மங்கல நிகழ்ச்சிக்கு ஏதாவது பயிர் உண்டா?

அப்படியானால் அது எந்தப் பயிர்?

அந்தப் பயிர்தான் உழுந்து (உளுந்து).

இராமனின் திருமணத்திற்கு தசரதன் சுற்றம் சூழ பெருந்திரளாக மிதிலை நோக்கி புறப்படுகின்ற காட்சி. கட்டுக் கடங்காத கூட்டம்.

"உழுந்து இடம் இல்லை உலகம் எங்கணும்", என்று உழுந்தை அந்தக் கூட்டத்தின் இடையிலே போட்டால் அது தரைசென்று சேராது என்கிற அளவிற்கு பெருங்கூட்டம் என்று சொல்லுவான்.

எள் என்பதை அமங்கல நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவதால் உழுந்து என்கிற ஒரு பயிரை மங்கல நிகழ்ச்சியைப் பற்றி வர்ணிக்கும் இடத்திலே பயன்படுத்துகிறான்.

வீழ்ந்த வாலி வலியினால் தளர்கிறான். காரணம் வீழ்த்தியது இராமபாணம். இந்த இடத்திலே கம்பனது கைவண்ணத்திலே ஓர் அற்புதமான பாடல்,

"எழுந்து வான் முகடு இடித்து
உகப்படுப்பல் என்று உறுக்கும்
உழுந்து பேரு முன் திசை திரிந்து
ஒருப்பல என்று உறுக்கும்

விழுந்து பாரினை வேரொடும்
பறிப்பல் என்று ஓரும்
அழுந்தும் இச்சரம் எய்தவன்
ஆர் கொல்? என்று அயிர்க்கும்"

சாய்ந்து வீழ்ந்த வாலி எழுந்து வானத்தின் மேல் முகட்டினை இடித்து சிதைத்து வீழச் செய்வேன் என்று கூறி மேல் எழுவான். ஓர் உழுந்து நிலை பெயர்ந்து உருளும் நேரத்திற்கு முன்னரே எல்லாத் திசைகளையும் சுற்றித் திரிந்து அனைத்தையும் முறித்து அழிப்பேன் என்று சினம் கொண்டான். கீழே பாய்ந்து இப்பூமியை வேரொடும் பெயர்த்தெடுப்பேன் என்று நினைத்தான். தன் மார்பில் ஆழ்ந்து தைத்துள்ள இந்த அம்பினை தொடுத்தவன் யார் என்று ஐயுறுவான்.

Dr.Anburaj said...

இத்துணை வலியை, துன்பத்தைச் சந்திக்கின்ற வாலியைச் சொல்ல வந்த கம்பன், "உழுந்து" என்கிற ஒரு சொல்லைக் கையாண்டிருப்பதால் கம்பனது பார்வையிலே இது ஒரு மங்கல நிகழ்ச்சியாகத்தான் பார்த்திருக்கிறான். காரணம், மறைந்திருந்து அம்பு எய்தாலும் வாலி அழிக்கப்பட வேண்டியவன். குறுக்கு வழியிலே அரசுரிமையைக் கவர்ந்தவனை குறுக்கு வழியிலேயே சாய்ப்பது சரி என்றும், அதர்மத்தை அழிக்கக் கடமைப்பட்டு அவதாரம் எடுத்த இராமன் அவனை வீழ்த்தினான் என்றும் கம்பன் கருதுவதாகச் சொல்லலாம்.

இந்தப் பாடலிலே மாந்தர்களுக்கு ஒரு மாபெரும் உண்மையைக் கம்பன் சொல்கிறான்.

இந்த உலகம் பஞ்ச பூதங்களினால் ஆனது. இதன் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இந்த உண்மையை - இயற்கையை நம்புவார்கள்.

அந்த இயற்கையின் ஆற்றலை தங்கள் அறிவுத்திறனால் ஆராயலாம்; புரிந்து கொள்ளவும் முயற்சிக்கலாம்; அதில் வெற்றியும் பெற்றுவிடலாம். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அதனோடு மோத வேண்டும் என்று இந்தப் புவியிலே யார் நினைத்தாலும் அழிந்து போவான்; அழிக்கப்படுவான்.

இதற்கு நேர் மாறான மற்றொரு பாடல். "சுந்தரகாண்ட"த்தில் சிறுவனைப் போல சீதையினிடத்தே சென்றபோது, இந்த உருவத்திலே எப்படி நீ கடலைத் தாண்டி, இந்த இடத்திற்கு வந்தாய் என்று கேட்கும்போது, அனுமன் தன் விஸ்வரூபத்தை அவளுக்குக் காண்பிக்கிற இடத்திலே வரும் பாடல்,

"சுட்டினன் நின்றனன் தொழுத கையினன்
விட்டு உயர் தோளினன் விசும்பின் மேக்குஉயர்
எட்ட அருநெடு முகடு எய்தி நீளுமேல்
முட்டும் என்று உருவொடும் வளைந்த மூர்த்தியான்"

தன் உருவத்தை உயர, உயரக் கொண்டு செல்கின்றான் அனுமன். ஒரு கட்டத்திலே நெடு முகடு இடிக்கும் எனத் தெரிந்தவுடன் உருவம் உள்ளிட்ட அனைத்தையும் வளைத்தான். அவன் இயற்கையோடு மோதவில்லை. வாலியைப்போல, கும்பகர்ணனைப்போல விண்ணை முட்டி மோதி தனது அசுரபலத்தை பறைசாற்ற எத்தனிக்கவில்லை. செருக்கை அழித்த மனத்தினன் அனுமன். அதனால் குனிகிறான், வாழ்கிறான் என்றும் சிரஞ்சீவியாக.

மேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களையும் நுணுகி ஆராய்ந்து பார்க்கும்போது தங்கள் பலத்தால் பஞ்ச பூதங்களையும் தன்வசம் கொண்டுவந்து விடலாம் என்று நினைத்த வாலியும், கும்பகர்ணனும், இராமனால் வதை செய்யப்படுகிறார்கள். ஆனால் பஞ்ச பூதங்களை ஆட்கொள்ள எண்ணாமல் அவற்றின் செயல்களுக்கு மதிப்பு அளித்த அனுமன் சிரஞ்சீவியாக வாழ்கிறான் என்பதைப் பார்க்கும்போது, வாலி வதம் கம்பன் கண்ணோட்டத்தில் சரியானது என்று எண்ணத் தோன்றுகிறது.

நான் என்ற ஆணவத்தாலே நிமிர்ந்து நின்ற வாலியை, பஞ்ச பூதங்களின் நாயகனாகிய பரம்பொருள் அவனது ஆணவத்தை அழித்து வீடுபேற்றை அளித்தான் என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால் வாலி வதையின் உண்மை நிலை நமக்குப் புலப்படும்.

ஜி.கோபாலன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)

Dr.Anburaj said...

சிறியன சிந்தியாதான்
சுக்ரீவன் வாலியின் இருப்பிடம் சென்று அவனைப் போருக்கு அழைத்தான். வாலியின் மனைவியான தாரை வாலியைத் தடுத்தாள். அதற்கு வாலி அவளிடம் ‘தன் தம்பியர் அல்லாது தனக்கு வேறு ஒரு உயிர் இல்லை என்று எண்ணுகின்ற இராமன் எனக்கும் என் தம்பிக்கும் நடக்கின்ற போரில் என் மேல் அம்பு தொடுப்பானோ’ என்று கேட்டான்.

தம்பியர் அல்லது தமக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை
அம்புஇடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான்

பொருள்

தம்பியர் அல்லது – தனது உடன்பிறப்புகளைத் தவிர
தமக்கு வேறு உயிர் – தனக்கு வேறு ஒரு உயிர்
இம்பரின் இலது என – இந்த உலகில் இல்லை என்று
எண்ணி ஏய்ந்தவன் – நினைத்து வாழ்கின்ற இராமன்
எம்பியும் யானும் – எனது தம்பியான சுக்ரீவனும் நானும்
உற்று எதிர்ந்த போரிடை – எதிர்த்து செய்யும் இந்தப் போரில்
அம்புஇடைத் தொடுக்குமோ – என் மீது அம்பைத் தொடுப்பானோ
அருளின் ஆழியான் – அருட்கடலாகிய இராமபிரான்

சுக்ரீவனுக்கும் வாலிக்கும் கடும் யுத்தம் நடந்தது. அப்போது இராமன் மறைந்து இருந்து எய்த அம்பு வாலியின் மார்பைத் துளைத்தது. மார்பில் தைத்த அம்பை பிடுங்கிப் பார்த்தான் வாலி. அந்த அம்பில் ‘இராம’ என்ற எழுத்து இருப்பதைக் கண்டான்.

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை இராம என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்

பொருள்

மும்மைசால் உலகுக்கெல்லாம் – மூவுலகங்களுக்கெல்லாம்
மூலமந்திரத்தை – மேலான மூல மந்திரமானதும்
முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் – தன்னையே தன் அடியார்க்குக் கொடுக்கும்
தனிப்பெரும் பதத்தைத் தானே – தனிப் பெரும் பதமானதும்
இம்மையே எழுமை நோய்க்கு – இனி வரும் பிறவிக்கும் நோய்களுக்கும்
மருந்தினை – மருந்தான
இராம என்னும் – இராம என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் – சிறப்புடைய திரு நாமத்தை
கண்களில் தெரியக் கண்டான் – வாலி தன் கண்களால் கண்டான்

Dr.Anburaj said...

தன்னை வீழ்த்தியவன் இராமன் என்று அறிந்தபோது வாலிக்கு வருத்தம் ஏற்பட்டது அறநெறி தவறாத சூரியகுலம் அறத்தைத் துறந்ததே என்று வருத்தப்பட்டான். வாலி இராமனைப் பார்த்து ‘என்ன காரியம் செய்தாய் நீ? சீதையைப் பிரிந்ததால் உன் புத்தித் தடுமாறிவிட்டதா?’ என்றான்.

கோவியல் தருமம் உங்கள் குலத்துத்துதிதோர்கட் கெல்லாம்
ஓவியத் தெழுத வொண்ணா உருவத்தா யுடைமை யன்றோ
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியை பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை

பொருள்

கோ இயல் தருமம் – அரசியல் தர்மம்
உங்கள் குலத்துத்துதிதோர்கட் கெல்லாம் – – உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்கெல்லாம்
ஓவியத் தெழுத வொண்ணா உருவத்தாய் – ஓவியத்தில் எழுத முடியாத உருவத்தை உடையவனே
உடமை யன்றோ – – உரியது அல்லவா
ஆவியை சனகன் பெற்ற – உன் உயிரைப் போன்ற ஜனகன் பெற்ற
அன்னத்தை அமிழ்தின் வந்த – அன்னத்தைப் போல அமிர்தத்தில் வந்த
தேவியை பிரிந்த பின்னைத் – சீதையைப் பிரிந்த பின்னர்
திகைத்தனை போலும் செய்கை – தடுமாறியது போலுள்ளது உன் செய்கை

‘நீ அரக்கரோடு போரிட்டு அவரை அழிப்பதை விடுத்து அதற்குப் பதில் குரங்கின் அரசைக் கொல்லுமாறு உன்னுடைய மனு நீதியில் கூறியிருக்கிறதா? என் மீது என்ன பிழை கண்டாய்’ என்றான்.

அரக்கரோர் அழிவு செய்து கைவரேல் அதற்கு வேறோர்
குரக்கினத்து அரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாய் அப்பா
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிக்கல் பாலார்

பொருள்

அரக்கரோர் அழிவு செய்து கைவரேல் – அரக்கர் உனக்கு தீங்கு செய்தபோது
அதற்கு வேறோர் – அதற்கு வேறு ஒரு
குரக்கினத்து அரசைக் கொல்ல – வானர அரசனைக் கொல்ல
மனுநெறி கூறிற்றுண்டோ – மனு நீதியில் கூறியிருக்கிறதா?
இரக்கம் எங்கு உகுத்தாய் – இரக்கத்தை எங்கு விட்டாய்
என்பால் எப்பிழை கண்டாய் அப்பா – என்னிடம் எந்த குறையைக் கண்டாய்
பரக்கழி இது நீ பூண்டால் – பெரும் பழியை நீ சுமந்தால்
புகழை யார் பரிக்கல் பாலார் – புகழை யாரால் அடைய முடியும்

இது வீரமும் அல்ல நீதியும் அல்ல. உனக்கு நான் பாரமும் அல்ல.பின் எதற்காக இதைச் செய்தாய்?’ என்றான்.

வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என்னுடல்
பாரம் அன்று பகையன்று பண்பு அழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ

பொருள்

வீரம் அன்று விதி அன்று – இது வீரமில்லை விதியும் இல்லை
மெய்ம்மையின் வாரம் அன்று – உண்மையைச் சேர்ந்ததும் இல்லை
நின் மண்ணினுக்கு – உன்னுடைய நாட்டிற்கு
என்னுடல் பாரம் அன்று – நான் பாரமும் இல்லை
பகையன்று – எனக்கும் உனக்கும் பகையும் இல்லை
பண்பு அழிந்து – இப்படி பண்பு இல்லாமல்
ஈரம் இன்றி – அன்பும் இல்லாமல்
இது என் செய்தவாறு அரோ – இந்த செயலைச் செய்யக் காரணம் என்ன?

Dr.Anburaj said...

இதைக் கேட்ட இராமன் ‘உன் தம்பி உன்னைச் சரணடைந்தும் நீ அவனை மன்னிக்காமல் கொல்ல முயன்றாய். பிறன் மனைவியை தன் வலிமையால் பற்றிக் கொள்ளுதல் வீரம் ஆகுமோ? உன் தம்பி எனக்கு உயிர் நண்பன். அதனால் உன்னைக் களை பறிப்பது போல் பறித்தேன். நிரபராதிகளையும் வழியற்ற எளியோரையும் காப்பது என் கடமை என்றான். வாலி ‘ஆயினும் நீ என்னை மறைந்திருந்து தாக்கியது என்ன நீதி?’ என்று கேட்டான். அதற்கு பதிலாக இலட்சுமணன் ‘முன்பே உன் தம்பி இராமனைச் சரணடைந்தபோது வாலியைக் கொல்வேன் என்று வாக்களித்தான். நேரில் வந்தால் ஒருவேளை நீ சரணடைந்து விடலாம். அப்போது உன் தம்பிக்கு கொடுத்த வாக்கு என்னவாகும்? அதனாலேயே உன்னை என் அண்ணன் மறைந்து இருந்து தாக்கினான்’ என்றான்.

முன்பு நின் தம்பி வந்து சரண்புக முறைஇ லோயைத்
தென்புலத் உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும்
அன்பினை உயிருக் காகி அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி யண்ணல் மறைந்துநின்று எய்தது என்றான்

பொருள்

முன்பு நின் தம்பி வந்து சரண்புக – உன்னுடைய தம்பியான சுக்ரீவன் வந்து சரண் புகுந்ததால்
முறைஇ லோயைத் – நீதி பாலிக்காத உன்னை
தென்புலத் உய்ப்பென் – கொல்வேன்
என்று செப்பினன் – என்று வாக்குக் கொடுத்து விட்டான்
செருவில் நீயும் – போரில் நீயும்
அன்பினை உயிருக் காகி – உன் உயிர் மேலுள்ள ஆசையால்
அடைக்கலம் யானும் என்றி – நானும் இராமனிடம் அடைக்கலம் அடையலாம் என்று
என்பது கருதி யண்ணல் – எண்ணியே இராமன்
மறைந்துநின்று எய்தது என்றான் – மறைந்து இருந்து அம்பை எய்தான்

இதை ஏற்றுக் கொண்ட வாலி இராமனை வணங்கி தீயன பொறுத்தி என்றான். வாலியை சிறியன சிந்தியாதான் என்கிறார் கம்பர். அதாவது அற்பமான இவ்வுலக இன்பங்களை பற்றிச் சிந்திப்பதை ஒழித்தவன் என்று பொருள். தன மகன் அங்கதனை இராமனிடம் ஒப்படைத்து விட்டு வாலி உயிர் துறந்தான்.

Dr.Anburaj said...

வாலி வதம் சரியா தவறா?

இராமன் வாலியை மறைந்து இருந்து கொன்றது சரியா தவறா என்ற விவாதத்திற்கு இன்றும் ஒரு முடிவில்லை. வாலி செய்த முதல் குற்றம் தன்னிடம் சரணடைந்த சுக்ரீவனை அழிக்க முற்பட்டது. இரண்டாவது சுக்ரீவனின் மனைவியை அபகரித்தது. மனித தர்மம் விலங்குகட்கு கிடையாது என்ற வாலியின் வாதத்திற்கு இராமன் “மனிதன், விலங்கு என்பது உடம்பினால் அன்று. மனித தர்மங்களைப் பற்றி நன்கு அறிந்த நீ விலங்கு அல்ல. அதனால் உன்னை தண்டித்தேன்” என்றான். ஆனால் மறைந்து இருந்து கொன்றது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்விக்கு இலட்சுமணன் அது சரணாகதி தத்துவம் என்று பதிலளிக்கிறான். வாலியும் அதை ஏற்றுக் கொண்டான் என்று கம்பர் கூறுகிறார். வழக்கைத் தொடுத்தவனே அதைத் திரும்பிப் பெற்றுக் கொண்டதால் சரியா தவறா என்ற கேள்வி அத்துடன் முடிகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இராமன் வாலியை அழித்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. வாலியாக அவதரித்தவன் இந்திரன். இராவண வதத்தில் திருமாலுக்கு துணை போவது தான் அவனது அவதார நோக்கம். ஆனால் வாலியோ இராவணனுடன் நட்பு கொண்டு விடுகிறான். இராவணன் வாலியிடம் மிகுந்த அச்சம் கொண்டவன். வாலி கூறினால் சீதையை இராமனிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். அப்படி நேர்ந்தால் இராவண வதம் நடை பெறாது.

இராஜாஜி இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இராமாவதாரத்தில் இராமனும் சீதையும் சகிக்க வேண்டிய துக்கங்களில் இந்தத் தவறும் பழியும் ஒன்று என்கிறார். இது இராவண வதத்துடன் தேவர்கள் நியமித்து விட்ட திட்டம் என்று சொல்லி வீட்டு இராமன் வாலியிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் அழகாக அமைந்திருக்கும் என்கிறார்.

இறுதியில் வாலி தன் மகன் அங்கதனை இராமனிடம் ஒப்படைக்கிறான். இராமன் அங்கதனிடம் தன வாளைக் கொடுத்து விட்டு “இது நீ பொறுத்தி” என்கிறான். இதனை “நீ இதை ஏற்றுக் கொள்வாய்” என்று பொருள் கொள்வாரும் உண்டு. “நீ என்னை மன்னிப்பாயாக” என்று பொருள் கூறுவாரும் உண்டு. இறுதியில் கம்பர் இராமன் செய்தது சரியா தவறா என்ற கேள்விக்கு விடையை நமக்கு விட்டு விடுகிறார்.

பொருள் – நன்றி வைமுகோவிற்கு