Followers

Saturday, January 10, 2015

சிரிய பாலஸ்தீன மக்கள் பனிப் புயலில்......



பாலஸ்தீன் ஹிப்ரான் குன்றுகளில் அல் முபாகரா என்ற கிராமத்தில் ஒரு பெண் தனது மகனுக்கு குளிர் தாக்காமல் இருக்க போர்வையைக் கொண்டு போர்த்துகிறார். வளைகுடா முழுக்க கடுங் குளிர். சில இடங்களில் பனிப் புயலும் வீசுகிறது.

ரியாத்திலும் குளிர் அதிகமாக உள்ளது. தொழுகைக்கு 15 நிமிடம் வெளியில் சென்று வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. பாதுகாப்பான வீடு. ஹீட்டர் வசதி. கம்பளி போர்வைகள். குளிரைத் தாங்கக் கூடிய மேலாடைகள். காலுறை: அதற்கு மேல் ஷூ. கைகளுக்கு உறை: என்று இத்தனை ஏற்பாடுகளை செய்தும் நம்மால் குளிரைத் தாங்க முடியவில்லை.

ஆனால் சிரியா, பாலஸ்தீன் போன்ற நாடுகளில் இதை விட அதிக குளிர். பனிப் புயலும் வீசுகிறது. மின்சாரம் சுத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சிலர் மலைகளின் குகைக்குள்ளே தஞ்சம் புகுந்துள்ளார்கள். இரவு நேரத்தில் சாப்பாட்டுக்கு சிறிது நேரம் மெழுகு திரிகளை ஏற்றுகிறார்கள். அதன் பிறகு எங்கும் இருள் மயம். ஒரு ஆண்டுக்கு முன்னால் சகல சவுகரியங்களோடும் வாழ்ந்த சிரிய மக்கள் இன்று ஒரு துண்டு ரொட்டிக்காக அலைகின்றனர்.

வல்லரசுகளின் பொருளாதார ஆசையால் இன்று அழகிய இரண்டு நாடுகளும் சின்னா பின்ன மாக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளர்கள் ஒரு புறம், தீவிரவாத கும்பல்கள் ஒரு புறம், வல்லரசுகள் ஒரு புறம் என்று நாற்புறமும் அவர்களை துன்பம் சூழ்ந்துள்ளது.

வீடில்லை: வாசலில்லை: செல் போன் இல்லை: லேப் டாப் இல்லை: சிறந்த உடை இல்லை என்றெல்லாம் நாம் அங்கலாய்த்துக் கொள்கிறோம். ஒரு துண்டு ரொட்டிக்காக பலரும் போட்டியிடும் இந்த மக்களை நினைத்துப் பார்போம். இறைவனுக்கு நமது நிலைக்கு நன்றி சொல்வோம்.

நமது ஒவ்வொரு தொழுகையிலும் இந்த மக்களின் நல் வாழ்வுக்காக பிரார்த்திப்போம். பல வருடங்களாக தொல்லைகளை அனுபவித்து வரும் இவர்களுக்கு நிரந்தர அமைதி நிலவ இறைவன் சிறந்த தலைமையை அந்த மக்களுக்கு கொடுப்பானாக! குளிரிலிருந்து சிறுவர்கள் சிறுமியர்கள், பெண்கள் வயோதிகர்களுக்கு பாதுகாப்பை நல்குவானாக!

No comments: