Followers

Sunday, January 04, 2015

ஜல்லிக் கட்டு விளையாட்டால் உயிரை இழந்த குடும்பங்கள்!



திண்டுக்கல் அருகே நத்தம் வாடிப் பட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த ஜல்லிக்கட்டில் பாலி டெக்னிக் கல்லூரி மாணவர் சூரியபிரகாஷ் உயிரிழந்தார். அவரது நினைவு தினம் ஜனவரி 16-ம் தேதி. தம்பியின் நினைவு தினத்துக்காக ராணுவத்தில் பணிபுரியும் அவரது அண்ணன், ஊருக்கு வந்துள்ளார். சூரியபிரகாஷைபோல அவரும் மாடுபிடி வீரர்தான். தனது ஜல்லிக்கட்டு ஆர்வம்தான், தம்பியின் மரணத்துக்கு காரணம் எனக் கூறும் அவர், துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். தம்பி இறந்த நாளோடு, ஜல்லிக்கட்டு விளையாட்டை கைகழுவி விட்டார்.

திண்டுக்கல் அருகே 2006-ம் ஆண்டு நடந்த கொசுவப்பட்டி ஜல்லிக்கட்டில் ஜோசப் (32) என்பவர் இறந்தார். கணவர் இறந்ததால் அவரது மனைவி ஜேசுமேரி கூலி வேலைக்குச் சென்று தனது 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையை சிரமப்பட்டு வளர்த்தார். முதல் இரு பெண் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாமல், சின்ன வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிட்டார். மூன்றாவது பெண் தங்கமணி பி.எஸ்சி 2-ம் ஆண்டு, நான்காவதாக பிறந்த மகன் லியோ ப்ளஸ் டூ படிக்கிறார். இருவரையும் படிக்க வைக்க ஜேசுமேரி போராடி வருகிறார். சாலையோரம் அரசு புறம்போக்கில் குடிசையில் வசிக்கின்றனர்.

ஜேசுமேரி கூறும்போது, எனக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக் கூடாது. ஜல்லிக்கட்டால் என்னோட வாழ்க்கையும் தொலைந்துவிட்டது.

இதுபோல, தென் மாவட்டங் களில் ஜல்லிக்கட்டில் மற்றவர்களை மகிழ்விக்க களம் இறங்கி உயிரை விட்டவர்கள், கை, கால், கண் உள்ளிட்ட பல இடங்களில் குத்துபட்டு முடமாகிப் போனவர்களின் குடும்பத்தினர், தங்களது இயல்பான வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசும் உதவவில்லை. ஜல்லிக் கட்டு விளையாட்டை நடத்த துடிப்பவர்களும் கண்டுகொள்ள வில்லை.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
03-01-2015

பொங்கல் நெருங்குகிறது. இந்த ஜல்லிக் கட்டில் கலந்து கொள்வதற்காக வெளி நாடுகளில் இருந்தெல்லாம் சொந்த ஊருக்கு ஓடுபவர்களை பார்த்துள்ளேன். இது ஒரு வீர விளையாட்டுத்தான் அதில் சந்தேகமில்லை. அதற்கென பயிற்சி பெற்றவர்கள் முறையாக தக்க பாதுகாப்போடு கலந்து கொண்டால் பிரச்னையில்லை. இன்று சாராயத்தை தொடாத தமிழனே இல்லை என்ற நிலையாகி விட்டது. குடலெல்லாம் அரித்து மிக பலஹீனமான நிலையில் உள்ள பலர் 'மாடு பிடிக்கிறேன்' என்று மார் தட்டி சென்று முடிவில் மரணத்தை தழுவுகின்றனர். கணவனையும் சகோதரனையும் இழந்து தவிக்கும் இது போன்ற குடும்பங்களின் நிலையை சற்று சிந்தித்து பாருங்கள். கலாசாரம் முக்கியமா? நமது உயிர் முக்கியமா என்ற நிலை வந்தால் அறிவுள்ள மக்கள் உயிரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். சொந்த உயிரை பணயம் வைத்து கலாசாரத்தைக் காப்பாற்றி எதை சாதித்தோம். எனவே வரும் பொங்கலில் குடும்பத்தை மகிழ்ச்சிக்குரியதாக்க ஆக்க முயற்சிப்போம். உயிரை போக்கும் ஆபத்தான விளையாட்டுக்களை சமூகத்திலிருந்து தூரமாக்குவோம்.

1 comment:

C.Sugumar said...

ஜல்லிக்கட்டு ஒரு பிறபோக்குதனமான பண்பாடற்ற கூட்டத்தினாின் வக்கிர பொழுது போக்கு.வீம்புக்காக நடத்தப்பட்டு வருகின்றது.விளையாட்டு எனடபது இலக்கண விதிகளுக்குட்பட்டது.ஜல்லிக்கட்டில் என்ன இலக்கணம் உள்ளது.காலபந்து இறகு பந்தி கைபந்து போன்ற விளையாட்டுக்களை ஊக்குவிக்க வேண்டும்.ஜல்லிக்கட்டை முற்றிலும் ஒழித்துக கட்ட வேண்டும். மனிதவளம் வீணாக்கும் ஒரு முட்டாள்தனமாக அழிவுசக்தியை ஓப்பல் முட்டாள்தனம்.