Followers

Sunday, January 18, 2015

சகோ சிஎம்என் சலீமின் கருத்தரங்கு பற்றிய எனது பார்வை!



நேற்று வெள்ளிக் கிழமை ரியாத்தில் ரமத் ஹோட்டலில் கல்வி சம்பந்தமான கருத்தரங்குக்கு சென்றிருந்தேன். சகோதரர் சிஎம்என் சலீம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இக்காலக் கட்டத்துக்கு தேவையான மிகச் சிறந்த ஒரு கருத்தரங்கு என்பதில் சந்தேகமில்லை. பல பயனுள்ள தகவல்களை சகோதரர்கள் பகிர்ந்து கொண்டனர். இதில் சகோதரர் சலீம் சொன்ன கருத்துக்களில் எனக்கு சில கருத்துக்கள் உண்டு. அதனைப் பற்றி இந்த பதிவில் பார்போம்.

அரசு உத்தியோகங்களில் மாத சம்பளத்துக்கு உட்காருவதை விட தொழில் தொடங்கி முன்னுக்கு வருவதே இஸ்லாமிய நடைமுறை. மேலும் அரசு தரும் பாடக் கல்வி முறையை ஒதுக்கி விட்டு இஸ்லாமிய வழிமுறையிலான படிப்புகளை நாம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

அரசு துறை சார்ந்த உத்தியோகங்களை, படிப்புகளை இட ஒதுக்கீட்டின் படி முன்பு நமக்கு பிரிட்டிஷார் கொடுத்த போது 'ஆங்கிலம் படிப்பது ஹராம்: அரசு வேலைகளை உதறி தள்ளுங்கள்' என்று பள்ளி வாசல்கள் தோறும் வெள்ளிக் கிழமைகளில் மார்க்க அறிஞர்கள் வீர வசனம் பேசியதால் பலரும் படிப்பையும் அரசு வேலைகளையும் உதறி தள்ளி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு பார்பனர்கள் இந்த காரியத்தை செய்யவில்லை. அதனால் இன்று வரை பார்பனர்களை ஆளும் வர்க்கத்திலிருந்து அகற்ற முடியவில்லை.

இவ்வாறு ஆங்கில படிப்பையும் அரசு வேலைகளையும் உதறியதால் அதன் பலனை இன்று வரை அனுபவித்து வருகிறோம். தீவிரவாதிகள், இந்த நாட்டுக்கு விசுவாசமாக இல்லாதவர்கள் என்றெல்லாம் பழிச் சொல் சொல்லப்பட்டு பல இளைஞர்கள் இன்று வரை சிறைச் சாலையில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். அரசு சார்பான உதவித் திட்டங்கள் எதுவும் இஸ்லாமியர்களை சென்றடையாமல் அதிகார வர்க்கம் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறது. ஹேமந்த் கர்கரே போன்ற ஒரு நியாயவான் கிடைக்காமல் போயிருந்தால் இன்று ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டிருப்போம். அருண் தேஜ்பால் சிரமப்பட்டு புலனாய்வு செய்ய வில்லை என்றால் குஜராத்தும் ஒன்றுமில்லாமல் அடங்கி போயிருக்கும். அருண் தேஜ்பாலை இதன் காரணமாக இன்று சிறை வரை கொண்டு சென்று விட்டது இந்துத்வா. அவருக்கு தன்னாலான சிறு உதவி செய்யக் கூட நம்மவர்களில் எவரும் முயற்சிக்கவில்லை.

இது போன்ற சூழ்ச்சிகளை எல்லாம் முறியடிக்க நமது குழந்தைகளை அரசு சார்ந்த படிப்புகளை படிக்க ஊக்கப்படுத்த வேண்டும். நமது விகிதாச்சாரத்துக்கு ஏற்றபடி இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு துறைகளில் நுழைய வேண்டும். பல இன்னல்களுக்கு மத்தியில் கடந்த 25 வருடங்களாகத்தான் முஸ்லிம்கள் தமிழகத்தில் ஓரளவு கல்வியில் ஆர்வம் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். தனது சொத்தை விற்றாவது தனது பிள்ளைகளை ஒரு டிகிரி வாங்க வைத்து விட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாற்றமாக சகோதரர் சலீமின் இது போன்ற கருத்துகளானது அந்த நோக்கங்களை சிதைத்துவிடக் கூடிய அபாயம் உள்ளது. இந்தியாவையும் உலகையும் முன்னேற்றக் கூடிய ஆய்வு படிப்புகளை முன்னேறிய சமூகங்கள் கையிலெடுக்க வேண்டும். பார்பனர்களுக்கும் ,நாடார்களுக்கும், செட்டியார்களுக்கும் அந்த படிப்பு தோதானதாக இருக்கும். ஏனெனில் அவர்கள் தன்னிறைவு பெற்று விட்டார்கள். இஸ்லாமியர்களும் அந்த நிலையை அடையும் போது உங்களின் எண்ணம் சரிப்பட்டு வரலாம்.

நமது வாழ்வாதாரமே கேள்விக் குறியாக இருக்கும் போது பன்முக சமூகத்தில் வாழும் நாம் அதனை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு உங்களின் தீர்வானது வெற்றியைத் தேடித் தராது. இஸ்லாமிய கல்வி முறையில் தேர்ச்சி பெற்று வரும் மாணவனுக்கு அரசு வேலை கிடைக்குமா? நமது பங்களிப்பை அரசுக்கு இதன் மூலம் செலுத்த முடியுமா? அதற்கான உத்தரவாதத்தை உங்களின் கல்வி முறையால் தர முடியுமா?

ஆராய்ச்சி படிப்புகள், இஸ்லாமிய அடிப்படை ஆய்வுகள், இஸ்லாமிய உண்மை வரலாறுகள் இவை அனைத்தையும் அஞ்சல் வழிக் கல்வி மூலமாக, அல்லது இணையத்தின் மூலமாக படித்து பட்டம் பெறலாம். அதற்கான வாய்ப்பு வசதிகள் நிறையவே தற்காலத்தில் உள்ளது. அரசு வேலைகளில் இருந்து கொண்டே மேல் படிப்பையும் தொடரலாம். அல்லது நம்மிடம் உள்ள பெரும் பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளை இது போன்ற ஆய்வுப் படிப்புகளுக்கு தேர்ந்தெடுக்கலாம். சாமான்யனுக்கு சாத்தியமில்லை.

உலக கல்வியை ஒதுக்கி விட்டு இஸ்லாமிய கல்வி மாத்திமே போதும் என்று ஆரம்பிக்கப்பட்ட மத்ரஸாக்களின் நிலை இந்தியா முழுக்க எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிதில்லை. உங்களுக்கு நன்றாகவே தெரியும். இஸ்லாம் என்றால் என்ன? என்று தெரியாமலேயே 50 சதமான இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்வை கழித்துக் கொண்டுள்ளனர். இதைக் களைய நர்சரி பள்ளி தொடங்கி ப்ளஸ் டூ வரை ஒரு பாடம் மட்டும் இஸ்லாமிய அடிப்படை கல்வியை கொண்டு வரலாம். அந்த மாணவன் 12 வருடங்கள் தொடர்ச்சியாக படித்து வந்தால் இஸ்லாத்தின் அடிப்படை அவனுக்கு விளங்கி விடும். அதன் பிறகு ஆய்வு படிப்பு என்பது அவரவர் விருப்பத்தில் விட்டு விடலாம். நமது மாணவ மாணவிகளை முன்னேறிய சமூகத்தோடு போட்டி போடக் கூடிய அறிவு ஜீவிகளாக உருவாக்குவதுதான் நம் முன் உள்ள தற்போதய முக்கிய பணி.

எனவே நமது பிள்ளைகளை ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய கான்வென்டுகளில் சேர்ப்பித்து அவர்களை சிறந்த கல்விமான்களாக மாற்றுவோம். இந்த கல்விச் சாலைகளின் தாளாளர்கள், ஆசிரியர்களை சலீம் போன்றவர்கள் சந்தித்து எந்த மாதிரியான பாடங்களை வைப்பது என்று ஆலோசனை வழங்கட்டும். தமிழக கிராமங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதரஸாக்களை நவீன கல்விச் சாலைகளாக, தொழிற் கல்வியோடு கூடிய பாட சாலைகளாக மாற்ற முயற்சிப்போம். இது தான் தற்போதய சூழலில் வெற்றியை நமக்கு தேடித் தரும். சகோதரர் சலீம் எடுத்து வரும் முயற்சிகளும் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்.

நம் அனைவரின் நல்ல எண்ணங்களையும் நிறைவேற்றி அதற்குரிய பலனைத் தர ஏக இறைவனிடம் இறைஞ்சுவோம். இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எனது கருத்துதான். அதே நேரம் மற்றவர்கள் செய்ல்படுத்தும் எந்த நல்ல காரியத்துக்கும் என்னாலான பங்களிப்பை என்றுமே தருவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

சில சகோதரர்களிடம் பேசிய வகையில் சகோதரர் சலீமின் பாடத் திட்டங்கள் அரசு அங்கீகாரத்தோடு கொண்டு வரப்படுவதாக அறிகிறேன். இதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சகோதரர் சலீமின் முயற்சிகள் வெற்றி பெற நானும் பிரார்த்திக்கிறேன்.

No comments: