Followers

Thursday, January 08, 2015

பிராமணியத்திலிருந்து முஸ்லிமாக மாறியவரா நீங்கள்?

பிராமணியத்திலிருந்து முஸ்லிமாக மாறியவரா நீங்கள்?

நண்பர் திரு கோபால் சாமிநாதனுக்கு!

//Neenga Brahmin to muslima?// - kopal saminatha

எனது தாய் வழி சொந்தங்கள் எல்லாமே தூய வெள்ளை நிறத்தை உடையவர்கள். எனது தந்தை வழி சொந்தங்கள் எல்லாமே மாநிறம். ஏதோ இரண்டு சாதிகள் கலந்து நான் உருவாகியுள்ளேன். ஆனால் எந்த சாதி என்று எங்கள் யாருக்குமே தெரியாது. அதுதான் இஸ்லாம்.

நான் எந்த சாதியிலிருந்து வந்தேன் என்ற ஆராய்ச்சி எனக்கு தேவையற்றது. ஏனெனில் தற்போது நான் பின் பற்றும் இஸ்லாமிய மார்க்கம் மிக அழகிய வாழ்வு முறையை எனக்கு தந்திருக்கிறது. ஆதி கால தமிழர்களின் வாழ்வு முறையை எனக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறது.

எங்கள் ஊர் பாப்பாந்தெரு, நாயக்கர் தெரு, வண்ணான் தெரு, கொல்லன் தெரு, செக்கடித் தெரு, வடுகத் தெரு, என்று இந்து மதத்தின் அனைத்து சாதிகளின் பெயரையும் கொண்டதாக இருக்கும். இன்றும் இந்த சாதிப் பெயர்கள் புழக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு சாதியினரும் முன்னொரு காலத்தில் அவரவர்களுக்குரிய தெருக்களில் கூட்டமாக வாழ்ந்து வந்துள்ளனர். பிற் காலத்தில் அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர். தற்போது எங்கள் கிராமத்தில் உள்ள இந்துக்கள் ஆறு குடும்பமோ அல்லது ஏழு குடும்பமோதான் இருக்கும். இந்த குடும்பத்தாரோடு எந்த உரசலும் இல்லாமல் மிக அன்பாகவே பழகி வருகிறோம். தெருக்களின் பெயர்கள் மட்டுமே இந்து மத சாதி பெயர்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் ஏக இறைவனை வணங்கும் இஸ்லாமியர்களாக முழுவதுமாக மாறி விட்டனர். ஆதி கால தமிழன் எந்த இறையை வணங்கினானோ அந்த ஏக இறை மார்க்கத்துக்கு நாங்கள் வந்து விட்டோம்.

சாதியை ஒழிக்க எத்தனையோ கோடிகளை செலவு செய்கிறது அரசாங்கம். பெரியாரும் அம்பேத்காரும் ஓயாது போராடி ஓய்ந்து விட்டனர். ஒரு பலனும் இல்லை. ஆனால் எந்த செலவும் இல்லாமல் யாரையும் இழிவும் படுத்தாமல் மிகப் பெரிய புரட்சியை இஸ்லாமிய கிராமங்கள் தமிழகமெங்கும் செயல்படுத்தி வருகின்றன.

அந்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”

'இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்'

“உலகம் ஒரு குடும்பம்” (வாசுதேவ குடும்பம்)

“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்”

“ஜாதிகள் இல்லையடி பாப்பா”

"நட்ட கல்லும் பேசுமோ"

இவைகள் அனைத்தும் தமிழர்களான நம் முன்னோர்களின் பண்பாடு கலாசாரம் தெய்வ நம்பிக்கையாக இருந்தது. பின்னால் வந்த ஆரிய படையெடுப்பால் தமிழன் அடிமையாக்கப்பட்டு ஆரிய கலாசாரத்தை பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டான். தமிழனின் ஆதி கால நம்பிக்கைகளை ஒன்றாக்கி சுருக்கி இரண்டு வரிகளில் குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்.

'மனிதர்களே! உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்'
-குர்ஆன் 49:13


இந்த வசனத்தை உள் வாங்கிய ஒரு மனிதன் தன்னை உயர்ந்தவனாகவோ மற்றவர்களை தாழ்ந்தவனாகவோ எண்ணுவானா? கண்டிப்பாக மாட்டான். இந்த ஒரு வசனத்தை உளமார ஏற்றுக் கொண்டு விட்டால் மற்ற அனைத்து வேற்றுமைகளும் தானாக விலக ஆரம்பிக்கும். இந்த வசனம் இஸ்லாமியர்களை நோக்கி மட்டும் பேசவில்லை. கோபால் சாமிநாதனான உங்களையும் பார்த்து பேசுகிறது. 'மனிதர்களே' என்று ஒட்டு மொத்த மனித இனத்தையும் பார்த்து பேசுகிறது.

No comments: