Followers

Thursday, January 22, 2015

சிந்திக்க மாட்டீர்களா நாத்திகர்களே......?

நாத்திகர்களே..... சிந்திக்க மாட்டீர்களா?



நாம் ஒரு பாலைவனத்தில் நடந்து செல்கிறோம். அப்போது அங்கு ஒரு கடிகாரம் கிடப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த கடிகாரம் எப்படி வந்திருக்கும்? யாரோ ஒருவர் கடிகாரத்தை தவற விட்டு போயிருக்க வேண்டும். தானாக வந்து அந்த பாலைவனத்தில் அந்த கடிகாரம் உட்கார்ந்து கொள்ள சாத்தியமில்லை என்று நமது பகுத்தறிவு சொல்கிறது. அந்த கடிகாரம் கூட செயல்படுவது தானாகவா இல்லையே! அதற்கும் அதன் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு மனிதனாலேயே உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று நம் சிற்றறிவு கூறுகிறது.

இதனை எல்லாம் ஒத்துக் கொள்ளும் நீங்கள் இந்த உலகை படைக்க ஒருவன் தேவையில்லை என்று எவ்வாறு எண்ண முடிகிறது? பல கோள்களைப் படைத்து அதில் மனிதன் வாழ பூமியை தேர்ந்தெடுத்து அவன் உணவு உண்ண இங்கு மட்டும் விசேஷமாக புல் பூண்டுகளை முளைக்க வைத்துள்ள இந்த செயல்களெல்லாம் தானாக உருவாகி விட்டது என்று எப்படி உங்களால் யூகிக்க முடிகிறது?

சூரியனை எடுத்துக் கொள்ளுங்கள். பூமியிலிருந்து 93 மில்லியன் மைல்கள் தூரத்தில் இருந்து கொண்டு நமக்கு பல நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சூரியன் சில மைல்கள் நம்மை நோக்கி நெருங்கி வந்தால் நாமெல்லாம் அனலால் கருகி விடுவோம். அதே சூரியன் நம்மிடம் கோபப்பட்டுக் கொண்டு சற்றே விலகி தூரமாக சென்று விடுமானால் உறைபனியால் நாம் விறைத்து அந்த கணமே இறந்து விடுவோம்.

சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை அதிகம் தாக்கி விடாமல் இருக்க 'ஓசோன் படலங்களை' கவசமாக நமது பூமிக்கு அமைத்திருப்பதும் இயற்கையாகவே நடந்து விட்டது என்கிறீர்களா? சூரிய ஒளி 24 மணி நேரமும் பூமியில் விழுந்தால் புல் பூண்டுகள் கருகி விடும். மனிதர்கள் சாப்பிட ஒன்றுமே பூமியில் இருக்காது. எனவே பூமியை சுழல விட்டு 12 மணி நேரம் இரவாகவும் 12 மணி நேரம் பகலாகவும் நமக்கு மாற்றித் தந்ததும் இயற்கையாகவே நடந்து விட்டது என்கிறீர்களா?

சிறிது நேரமாவது இது விஷயமாக சிந்திக்க மாட்டீர்களா நாத்திகர்களே!

'இறைவனை மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் தெரியும் கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அவன் அங்கே வரும் போது எதையும் காண மாட்டான். அங்கே அவனைப் படைத்த இறைவனைத்தான் காண்பான். அப்போது அவனது கணக்கை இறைவன் நேர் செய்வான். படைத்த இறைவன் விரைந்து விசாரிப்பவன்'
-குர்ஆன்: 24-39

'சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.'
-குர்ஆன் 13:2

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

'தக்க காரணத்துடனேயே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வரை ஓடும்.'
-குர்ஆன் 39:5

No comments: