Followers

Saturday, February 28, 2015

கம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்! - 6

கம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்!கொடிக்கால் செல்லப்பாவாக இந்து மதத்தில் இருந்த போது.....கொடிக்கால் அப்துல்லாவாக இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்த போது....

'சமூகத்தில் சாமான்ய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாமா? கம்யூனிஸமா?' என்ற தலைப்பின் கீழ் வரிசையாக பார்த்து வருகிறோம். இந்த பதிவில் மற்றொரு தீவிர கம்யூனிஸ்டின் அனுபவங்களைப் பார்போம்.


கம்யூனிஷம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வை தரும் என்று தனது வாழ்நாளின் பெரும் பகுதியை கம்யூனிஷ பிரசாரத்திலேயே கழித்த கொடிக்கால் செல்லப்பாவை அறியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. பல ஆய்வுகள் செய்து கம்யூனிஷத்தை கரைத்து குடித்தவர். அவரும் பல ஆண்டு காலம் செத்துப் போன கம்யூனிஷத்தை தூக்கிக் கெண்டு அலைந்து திரிந்து துவண்டு போய் முடிவில் அந்த கொள்கைக்கே மூடு விழா நடத்தியவர். இனி அவர் பேசுகிறார் நாம் கேட்போம்......

எனக்கு கிடைத்த அனுபவங்கள்

நான் ஒரு இந்துவாக இருந்து கொண்டே முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைகளையும், மார்க்க அனுஷ்டானங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். நான் சமீபத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்களுடன் வேலூருக்கு சென்றிருந்தேன்.

நாங்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களிடமிருந்து தொப்பி ஒன்றை வாங்கி தலையில் அணிந்து கொண்டேன். தொப்பியை அணிந்ததும் என் சிந்தனைகள் பலவாறு எழுந்தன. எனது நிலை திடீரென்று உயாந்தது மாதிரி எனக்குள்ளே மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போதே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான விபரங்களை அடியார் அவர்கள் எனக்கு விளக்கிக் கொண்டே வந்தார்கள். நான் எழுப்பிய பல சந்தேக வினாக்களுக்கு, தெளிவான விடை கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் மாலை சுமார் 6:30 மணியளவில் வேலூரை அடைந்தோம். பஸ்ஸிலிருந்து இறங்கிய எங்கள் தோற்றத்தை கண்டு, பாய் உங்களுக்கு எங்கே போகவேண்டும் என்று ரிக்ஷாக்கரரர் கேட்டார். தொப்பி அணிந்திருந்த என்னை பாய் என்று அவர் அழைத்ததும் எனக்கு மேலும் ஒரு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டியது.

நாங்கள் இஸ்லாமிய மதரஸா ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி ரிக்ஷாவில் அங்கு சென்றோம். மதரஸாவை அடைந்த எங்களை இஸ்லாமிய மார்க்க முறைப்படி ஒரு பெரியவர் வரவேற்றார். சிறிது நேரத்தில் மதரஸாவின் முதல்வர் வந்தார். அவருக்கு என்னை அப்துல்லாஹ் அடியார் அறிமுகப்படுத்தினார். உடனே முதல்வர் என்னை கட்டித்தழுவி நலம் விசாரித்தார்.

இரவு தொழுகைக்கான நேரம் வந்ததும், அந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்க வந்திருந்த மாணவர்களைப் பார்த்தேன். அவர்கள் தொழுகைக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்ததையும் பார்த்தேன். பின்பு அவர்கள் அனைவரும் வரிசை வரிசையாகவும் ஒருவரை ஒருவர் நெருங்கி இணைத்துக்கொள்ளும் வகையில் நின்று தொழுதுக்கொண்டிருந்ததை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். தொழுகை முடிந்ததும், அந்த இஸ்லாமிய நண்பர்களோடு கலந்துரையாட விரும்பி அணுகினேன். என்னுடைய தோற்றத்தை கண்ட அவர்கள் இஸ்லாமிய முறைப்படி 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார்கள். எனக்கு அந்த சலாமிற்கு பதில் சொல்ல வேண்டிய முறை தெரிந்திருந்ததால் 'அலைக்கும் சலாம்' என்று சொன்னேன்.

அங்கே 8 வயது முதல் 80 வயது வரையுள்ள முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர்களைப் பற்றி நான் சற்றும் எதிர்பாராத சில தகவல்களை சொன்னார்கள்.

அவர்களில் பெரும்பாலான பெரியவர்களும், சிறியவர்களும் சமீபத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் என்பதை அறிந்ததும், வியப்பும் ஆச்சரியமும் அடைந்தேன். அவர்களுடைய பேச்சு, நடவடிக்கை, அனுஷ்டானங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒத்து இருந்தன. அவ்வளவு தூரம் புதிய மார்க்கத்தில் தங்களை இணைத்து ஒன்றி போயிருந்தனர். அவர்களுடைய கண்ணியமான பேச்சும் கனிவான நடவடிக்கையும் அவர்கள் மீது எனக்குள்ள பிடிப்பையும், பாசத்தையும் அதிகப்படுத்தியது.

இரவு மணி 9 ஆகிவிட்டதால் நான் அவர்களிடமிருந்து விடைபெற்று, மீண்டும் நாளை சந்திப்பதாக சொன்னதும் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று கூறி அவர்கள் எனக்கு விடை தந்தார்கள். நானும் மீண்டும் அப்துல்லாஹ் அடியார் இருந்த இடத்திற்கு வந்து, நடந்த விபரங்களை விரிவாகச் சொன்னேன். எனது மகிழ்ச்சியில் அவரும் மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு சற்று தொலைவில் இருந்த தேநீர் கடைக்கு நான் சென்றேன். அது ஒரு ஜாதி இந்துவின் கடையாக இருந்தது. நான் கல்லாவில் இருந்த உரிமையாளரைப் பார்த்து டீ கேட்டேன். அவர் தொப்பி அணிந்திருந்த என்னைப் பார்த்ததும், பாய்க்கு ஒரு டீ கொடு என்று சொன்னார். அவர் எனது தோற்றத்தை கண்ட மாத்திரத்திலே உரிய மரியாதையை கொடுத்ததை கண்டு ஒரு புத்துணர்ச்சி ஒரு உயர்வைப் பெற்று விட்டது போல் நான் உள்ளுர உணர்ந்து கொண்டிருந்தேன்.

நான் டீயைக் குடித்துவிட்டு தங்கியிருந்த மதரஸாவிற்குச் சென்றேன். அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் இப்போது தேநீர் கடையில் நடந்த நிகழ்ச்சியை அவர்களிடம் ஆனந்தத்தோடு எடுத்துச் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பூரிப்பில் அவர்களும் பங்கு கொண்டனர்.

இன்னொரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்:-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டிணத்தில் நடைபெற்ற ஒரு மீலாது விழா நிகழ்ச்சியைப் பார்க்க சென்றிருந்த நான் இஸ்லாமிய நண்பர்கள் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக என்னை கண்ணியப்படுத்தி மேடையில் அமர வைத்தனர்.

சிறந்த சிந்தனையாளரும், பேச்சாளருமாகிய அப்துல்லாஹ் அடியார் அவர்களுடைய பேச்சைக் கேட்க பெரும் கூட்டம் திரண்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவன் 'கிராத்' ஒதினான். அவன் லுங்கியும் தொப்பியும் அணிந்திருந்தான். சிறுவனேயானாலும், அரபு மொழியில் அழுத்தமும் திருத்தமுமாக அவன் உணர்ச்சியோடு ஒதியதை செவிமடுத்த மார்க்க அறிஞர்கள், அச்சிறுவனை உற்று நோக்கினார்கள். அவன் ஓதும் முறை எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்தது.

இப்ராஹீம் என்ற அந்த சிறுவன் நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் இந்துவாக இருந்து மதம் மாறி இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தவன் என்ற செய்தியை தலைவர்; அவர்கள் தந்து, அறிமுகப்படுத்தியது மேலும் வியப்பை தந்தது. புதிய மார்க்கத்தை, வழியை அவன் தேடிக்கொண்டது சாதராணமாக எனக்கு படவில்லை. அவன் புதிய வழியை நன்கு அறிந்து அதைத் தழுவியுள்ளான் என்பதை அறிந்துக் கொண்டேன்.

அடுத்து எதிர்பாராத விதமாக என்னை பேசும்படி விழாத்தலைவர் அறிவித்தபோது சற்று திகைத்தேன். காரணம், அது ஒரு மார்க்க மேடை, அறிஞர்களும் உலமா பெருமக்களும் ஒருங்கே கூடியிருந்த ஒரு விழா அது. அவர்கள் முன்னிலையில் பேசுவது என்பது எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் இறைவனை மனதில் நினைத்துக் கொண்டதும், தைரியமும் உற்சாகமும் தானாக ஏற்பட்டது. பேசத் துவங்கினேன்.

அங்கே கிராத் ஓதிய அந்த இப்ராஹீம் என்னும் சிறுவனுக்கு அவனை பொறுத்தமட்டில் சமூக விடுதலை கிடைத்துவிட்டது என்பதை அந்த இடத்திலேயே உணர்ந்தேன். அந்த மாபெரும் சபை அந்த சிறுவனை கண்ணியப்படுத்திக் கொண்டிருந்தது. அங்கே என்னுடைய நிலையை உணர்ந்தேன்.

இறைவா இந்த சிறுவனுக்கு கிடைத்த விடுதலையும் உயர்வும் எனக்கு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தை நான் அங்கே வெளிப்படுத்தினேன். அச்சிறுவனை பொறுத்தமட்டில் அவனுக்கு சமூக விடுதலை மட்டுமல்ல. ஒரு புதிய அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அச்சிறுவனுக்கு தொழுகையை இமாமாக முன்னின்று நடத்தும் அருமையான கௌரவமும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு கண்ணியமான மார்க்கம் இஸ்லாம் என்பதை அன்றைய நிகழ்ச்சியில் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

-இந்த கட்டுரை திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2ல் நடைபெற்ற 'தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.


1 comment:

தீன் said...

இன்றைய கால கட்டத்தில் தொப்பி அணிவதை அநேக முஸ்லீம்கள் தவிர்க்கிறார்கள். கேட்டால் இது மார்க்கத்தில் இல்லாதது என்று வாதிடுகிறார்கள். செல்லப்பா அவர்கள் தொப்பி அணிந்த பிறகு தன் மனமாற்றத்தை இங்கு விளக்குகிறார். மேலும் தொப்பி அணிந்ததால் தனக்கு கிடைத்த மரியாதையை விளக்குகிறார். இதை படிக்கும் நம் சமுதாயம் இனியாவது திருந்துமா?