Followers

Thursday, February 26, 2015

குறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா? - 4

செங்கொடியின் கேள்விகளுக்கான எனது பதில்கள்......

//1.கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் எனும் பதிவுக்கான பதில்.//

இரண்டாவது கேள்வியில் இதற்கான பதில் இருக்கிறது.

//2. முதலில் எழுத்து விவாதத்துக்கு நேரம் இல்லை என்று பொய்யாக கூறியதன் காரணம் என்ன?//

பொய்யெல்லாம் கூறவில்லை. கிடைக்கும் ஓய்வு நேரத்தை உங்களோடு வீணாக்காமல் மற்ற ஆக்கபூர்வ பணிகளில் கவனம் செலுத்தலாமே என்றுதான் சொன்னேன்.

//3. நேரடி விவாதத்துக்கு வர வேண்டும் என்று கூறியவர் தன் முடிவை மாற்றிக் கொள்ள நேர்ந்ததற்கான காரணம் என்ன?//

இப்பொழுதும் உங்களுடன் நான் விவாத ஒப்பந்தமெல்லாம் போட்டு விவாதிக்கவில்லையே! 'சமூகத்தில் சாமான்ய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாமா? கம்யூனிஸமா?' என்ற தலைப்பில் சில கருத்துக்களை உங்களிடம் கேட்டுள்ளேன். விவாதம் என்று வந்தால் அது நேரிடையாக நடந்து குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி செய்தால்தான் முடிவுக்கு வரும். இப்போதும் அதற்கு நான் தயார். இதற்கு முன் பல வருடங்களாக உங்களோடு எழுத்து முறையில் விவாதித்து எந்த தரப்பும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை என்பதால் தான் எழுத்து பூர்வ விவாதத்தை மறுக்கிறேன்.

//4.சுவனப்பிரியன் – நெருப்புக்கோழி பதிவில் இருக்கும் குறிப்பான அம்சங்களுக்கான பதில்,//

இரண்டாவது கேள்வியில் இதற்கான பதில் இருக்கிறது.

//5.இந்தப் பதிவில் விவாதிக்கப்பட்டவைகளுக்கான பதில்.//

நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக வரும்.

//6.இந்த விவாதத்துக்கு பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுப்பது.//

'சமூகத்தில் சாமான்ய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாமா? கம்யூனிஸமா?'

//இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள், இந்த ஆட்சியதிகாரம் குரைஷிகளிடம் தான் இருக்கும் அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. புஹாரி 3501//


இது பற்றி சற்று விரிவாகப் பார்போம். ஒரு மனிதனிடமிருந்து இரண்டு கருத்துக்கள் வந்திருக்க முடியாது. குறைஷி குலம் உயர்ந்தது என்ற ரீதியில் நீங்கள் பதிந்த நபி மொழி வருகிறது. ஆனால் 10க்கும் மேற்பட்ட நபி மொழிகள் குலம் உயர்த்தி தாழ்த்தி பேசுதலை கண்டிக்கிறது. குர்ஆன் வசனமும் இவ்வாறு மனிதர்களில் உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் என்ற பாகுபாட்டை காட்டி தீண்டாமை கடைபிடிப்பதை வன்மையாக கண்டிக்கிறது.

குரைஷிக் குலம் பற்றி இனி பார்போம்.

குறைஷிக் குடும்பத்தார் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித் தோன்றல்கள். இதன்படி கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பைக் குரைஷிகள் தலைமுறை தலைமுறையாகப் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்துவமிக்க குடும்பங்களாக ஆக்கிக் கொண்டனர். எவ்வாறு நமது நாட்டில் பார்பனர்கள் தங்களுக்கென்று தனி உரிமைகள், தனி வழிபாடுகள், தனி ஆளுமைகளை கொண்டிருக்கிறார்களோ அவ்வாறே அன்றைய குரைஷிகள் இருந்தனர்.

குரைஷிகள் தங்களை ஹுமுஸ் என்று அழைத்துக் கொண்டனர். ஹுமுஸ் என்றால் கடுமை, கடினம் என்று பொருளாகும். குரைஷிகள் தங்கள் மார்க்கத்தில் பிடிப்பாக இருப்பதால் அவர்களுக்கு இந்தப் பெயர். (நவவீயின் முஸ்லிம் விரிவுரை)

இவர்கள் ஹஜ், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டால் இறைச்சி சாப்பிட மாட்டார்கள்; முடி, கம்பளியினால் ஆன ஆடைகளை அணிய மாட்டார்கள். மக்காவுக்கு வந்தால் இந்த ஆடைகளைக் களைந்து விடுவர். இது அப்துல் அஜீஸ் பின் இம்ரான் அல்மதனீ என்பார் கூறும் விபரமாகும்.

குரைஷிகளிடம் குரைஷி அல்லாதவர் யாரேனும் பெண் பேசி வந்தால், தங்கள் பிள்ளை தங்கள் மார்க்கத்தில் தான் இருப்பாள் என்று நிபந்தனையிட்டே திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். இந்த அடிப்படையில் சம்பந்தம் கொள்கின்ற கிளையாரில் தாய்கள் மட்டும் ஹுமுஸைச் சார்ந்தவர்கள் ஆவர். (பத்ஹுல் பாரி)

தனித்துவத்தைத் தக்க வைத்தல்

ஆரம்ப காலத்தில் இவர்களது முன்னோர்கள் சீர்திருத்தவாதிகளாக, இறைத்தூதர்களாக இருந்ததால் கஅபா எனும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெறுகின்றனர். அதை வைத்துத் தங்கள் குடும்பத்தின் தனித்தன்மையை அப்படியே தலைமுறை தலைமுறையாகத் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஹஜ் என்பது மக்கள் அனைவரும் மக்காவில் ஒன்று கூடுவதாகும். அப்படி ஒன்று கூடும் மக்கள், மக்காவில் கஅபா எனும் ஆலயத்திற்கும், முஸ்தலிபா என்ற இடத்திற்கும், அரஃபா என்ற இடத்திற்கும் கண்டிப்பாக வருகையளிக்க வேண்டும்.

ஆனால் இந்தக் குரைஷிகளோ மற்ற மக்களைப் போன்று அரஃபாவுக்கு வர மாட்டார்கள். முஸ்தலிபா என்ற இடத்திற்கு மட்டும் வருகையளிப்பார்கள்.

மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே கஅபாவைச் சுற்றி வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையாரைத் தவிர. ஹும்ஸ் என்றால் குரைஷிகளும் அவர்களது சந்ததிகளும் ஆவர். அவர்களில் ஓர் ஆண் இன்னோர் ஆணுக்கு தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார். மேலும் மக்கள் அரஃபாவிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குரைஷிகளோ எல்லாம் முடிந்த பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1665

அல்குர்ஆன் வைக்கும் ஆப்பு

இந்த அறியாமைக் காலப் பழக்கத்திற்கு, அகந்தைக்கு, குல வெறிக்குத் தான் அல்குர்ஆன் ஆப்பு வைக்கின்றது.

மக்கள் எங்கிருந்து புறப்படு கிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! (2:199) என்ற வசனம் குரைஷிகள் தொடர்பாக இறங்கியது தான். (புகாரி 1665)

அல்குர்ஆனின் இந்த ஆணைப் படி குரைஷிகளின் குடும்ப வெறி அடித்து உடைத்துத் தரைமட்டமாக்கப் படுகின்றது. அதன்படி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யும் போது அவர்கள் குரைஷிக் குடும்பத்தவராக இருந்தாலும் அரஃபாவில் வந்து நிற்கின்றார்கள்.

அதைப் பார்த்து மற்ற குரைஷிகள் ஆச்சரியப்படுகின்றனர்.

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், "இவர் குரைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?'' என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)

நூல்: புகாரி 1664

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் வழக்கத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வார்கள் என்று குரைஷிகள் எதிர்பார்த்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்த அறியாமைக் காலத்துப் பழக்கத்திற்கு அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப ஆப்பு வைத்து விடுகின்றார்கள்.

"நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமை களும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று பல தடவை கூறினார்கள்.
நூல்: புகாரி 1739

மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!
நூல்: அஹ்மத் 22391

அறியாமைக் காலத்து அனைத்துக் காரியங்களும் என் இரு பாதங்களுக்கடியில் போட்டுப் புதைக்கப்படுகின்றன.

நூல்: முஸ்லிம் 2137

அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 2137, திர்மிதீ 3012, அபூதாவூத் 1628, 2896, இப்னுமாஜா 3046, 3065, இப்னு குஸைமா

தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷிகளின் குருட்டு எண்ணத்தையும் நபி (ஸல்) அவர்கள் உடைக்கின்றார்கள். அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ர-) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3730

குரைஷ் குலத்தின் உட்பிரிவான மக்ஸூமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப் படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது. எனவே நபிகளிடம் கை வெட்டும் தண்டனையை கைவிடுமாறு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது நபி அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

"உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்'' என்று பிரகடனம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3475

"(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)

நூல்: முஸ்லிம் 3440

"மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!''

(நூல்: அஹ்மத் 22391)


மேலே நாம் பல நபி மொழிகளையும் குர்ஆன் வசனங்களையும் பார்தோம். அவை அனைத்தும் குரைஷி குலம் உயர்ந்தது என்று நினைப்பவர்களுக்கு சம்மட்டி அடியாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம். இவ்வாறு சொல்லி விட்டு அதற்கு நேர்மாறான வேறொரு கருத்தை நபிகள் நாயகம் சொல்லியிருப்பார்களா?


இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். குர்ஆனுக்கு மாற்றமாக எந்த நபிமொழிகள் இருந்தாலும் அது இட்டுக் கட்டப்பட்டவை என்று ஒதுக்கி விட வேண்டும். இஸ்லாத்தில் இணைவதாக நடித்த ஒரு சில யூதர்கள் நபி அப்படி சொன்னார் நபி இப்படி சொன்னார் என்று நிறைய கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டனர். அவ்வாறு வரும் நபி மொழிகளை இஸ்லாமியர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன். குர்ஆனை பாதுகாப்பதாக சொன்ன இறைவன் நபி மொழிகளுக்கு அந்த உத்தரவாதத்தைக் கொடுக்கவில்லை. எனவே இரு வேறு கருத்துக்களை சுமந்த நபி மொழிகள் நமக்கு கிடைத்தால் குர்ஆனோடு அதனை உரசிப் பார்க்க வேண்டும். குர்ஆனை ஒட்டி எந்த கருத்து வருகிறதோ அதனையே நபி அவர்கள் சொன்னதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக ஒரு நபி மொழி கிடைத்தால் நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று அதனை ஒதுக்கி விட வேண்டும். உலக முஸ்லிம்கள் பொதுவாக ஒத்துக் கொண்ட நடைமுறையே இது.

இனி கம்யூனிஸத்தைப் பற்றி வரும் பதிவுகளில் பார்போம்.

3 comments:

செங்கொடி said...

சுவனப்பிரியன்,

நீங்கள் முடித்த பின்னர் நான் வருகிறேன். எனக்கான பதிவாக இருப்பின் என்னிடம் தகவல் தெரிவிப்பதே சிறந்தது.

செங்கொடி said...

நன்றி சுவனப்பிரியன்,

நீங்கள் முடித்த பின் நான் வருகிறேன். எனக்கான பதிவின் போது சற்று தகவல் தந்து விடுங்கள்.

செங்கொடி said...

இந்த பதிவுக்கான மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரியாரின் சொல்லை மெய்பிக்கும் சுவனப்பிரியன்
https://senkodi.wordpress.com/2015/03/09/suvana-4/
உங்கள் பார்வைக்கும் பங்களிப்புக்கும்