Followers

Friday, February 20, 2015

பெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3//கம்யூனிசம் சாதிக்காததை இஸ்லாம் சாதித்திருப்பதாக கூறுகிறார். என்ன சாதித்திருக்கிறது என்பதை கூற முன்வந்தால், எது சாதனை? எது வேதனை? என அதை விரிவாக அலசலாம்.// - செங்கொடி

இஸ்லாம் சொல்கிறது எக்காலத்திலும் ஆணும் பெண்ணும் சமமாக முடியாது என்று. ஆனால் கம்யூனிஸமோ ஆணையும் பெண்ணையும் பிரித்து பார்பதில்லை. கணவனும் மனைவியும் கட்டாயமாக வேலை செய்து உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பது கம்யூனிஸ பார்வை. இது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம். லெனினும், ஸ்டாலினும் சொன்னதை நம்பி வேலைக்கு சென்ற பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி போலீஸ் கமிஷனர் முன் நமது சென்னையில் சொன்னதை இனி பார்போம்.

கமிஷனர் ராஜேந்திரன் முன்னிலையில் வேலைக்குச் செல்லும் பெண்கள் கொட்டிய உள்ளக் குமுறல்கள் வருமாறு:-

வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மூன்று விதமாகச் சொல்லலாம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினை, அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும் போது, பஸ் ஏற காத்திருக்கும் போது, பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் உடல், உள்ள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள், அலுவலகத்தில் தனக்கு மேலும், கீழும் வேலை பார்க்கும் ஆண் அதிகாரிகள் கொடுக்கும் `செக்ஸ்' தொல்லைகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

வேலைக்கு பெண்கள் புறப்படும் போது நன்றாக ஆடை அணிந்து, அலங்காரம் செய்து சென்றால் சில கணவர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள். இன்னும் சில கணவர்கள் சந்தேகப் பார்வை பார்க்கிறார்கள். இதனால் கணவர்களோடு வீட்டில் கடும் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால் பலரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள். ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது எதிரில் வருபவர் சேட்டை பார்வை வீசுவார். பஸ் ஏற பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது, வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிண்டல் பாட்டு பாடுகிறார்கள். பஸ்சில் ஏறிவிட்டால் போதும் இடிமன்னர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. பஸ் டிரைவர் `பிரேக்' போட மாட்டாரா என்று பல காமுகர்கள் ஏக்கத்தோடு நிற்கிறார்கள்.

`பிரேக்' அடித்தால் போதும் அந்தச் சாக்கில் பெண்கள் மீது சாய்ந்து அற்ப சுகம் காண்கிறார்கள்.

வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம், அவ்வாறு சாய்கிறவர்கள் முதலில் மார்பை குறி வைத்துத் தான் பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களோடு சண்டை போடுவதா, எச்சரிக்கை செய்வதா, கன்னத்தில் அறைவதா என்பது புரியாமல் சில நேரங்களில் இடி மன்னர்களின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு மவுனமாக அழுதுவிட்டுத் தான் வருகிறோம்.

மிரட்டல்

ஒரு வேளை எதிர்த்துச் சண்டை போட்டால், சிலர் பிளேடால் கீறி விட்டு ஓடிவிடுகிறார்கள். இன்னும் சிலர் கேவலமாகத் திட்டுகிறார்கள். இதையெல்லாம் சந்திக்க முடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.

அலுவலகத்துக்குச் சென்று விட்டால் உயர் அதிகாரிகளும், கீழ் அதிகாரிகளும் செய்யும் பாலியல் தொல்லைகள் சொல்லிமாளாது. இப்போது காணாத குறைக்கு செல்போனில் வேறு `ஓடிப் போகலாம் வர்றீயா' என்று கூப்பிடுகிறார்கள். செல்போன்களில் ஆபாசப் படங்களையும் அனுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர். ஒரு சினிமா படத்தில் `இப்படித் தான் இருக்க வேண்டும் பொம்பளை' என்ற பாடலை பாடினார். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது.

பெண்களாகிய நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். போலீசார் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இருட்டான இடங்களில்...

பெண்கள் சில நேரங்களில் வேலைக்குப் போய்விட்டு இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள் ரோடுகளில் தனியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு பெண்கள் தனியாக நடந்து செல்லும் இருட்டான பகுதிகளில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு சொல்லியபடி, பெண்களின் சுய பாதுகாப்புக்காக `விசாகா' கமிட்டிகளை அனைத்து பகுதிகளிலும் பலமாக நிறுவுவதற்கு போலீசார் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்க சென்றால் புகார்களை வாங்காமல் இழுத்தடிப்பார்கள், உடனடியாக எப்.ஐ.ஆர். போட மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பெண்கள் மத்தியில் உள்ளது. அதைப் போக்கும் வகையில் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும்.

பஸ்களில்

தற்போது பெண்கள் செல்லுவதற்கு தனி ரெயில் விடப்பட்டுள்ளது. அது போல, பெண்கள் பயணம் செய்வதற்காக அதிகளவில் மகளிர் பஸ்களை விட வேண்டும். பொதுவான பஸ்களில் பெண்களை முன்பக்கத்தில் ஏறுவதற்கும், ஆண்களை பின்பக்கத்தில் ஏறுவதற்கும் விசேஷ ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு பொதுவான பஸ்களில் பெண் கண்டக்டர், ஆண் கண்டக்டர் என்று இரண்டு கண்டக்டர்களை நியமிக்க வேண்டும். தைரியமாக புகார் கொடுக்க வருவதற்கு பெண்கள் மத்தியில் இது போன்ற கூட்டங்களை நடத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

அலுவலகங்களில், பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதி போட வேண்டும்.

நாங்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தான் இடிமன்னர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்கிறோம். சில நேரங்களில் முக்கியமான போலீஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி, அவர்கள் எங்கள் உறவினர்கள் என்று சொல்லி இடிமன்னர்களை மறைமுகமாகப் பயமுறுத்துகிறோம்.

பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது பேட்ஜ், உடை போன்றவற்றை அணிந்துகொண்டு நாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். ஆட்டோவிப் போட்டு இருக்கிறார்கள். சென்னை நகரிலும் ஆட்டோ டிரைவர்களை இது போல் நடப்பதற்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு பெண்கள் தங்களது உள்ளக் குமுறல்களை கொட்டி பேசினார்கள்.

தினத் தந்தி
-31 டிசம்பர் 2009

இந்த பெண்களின் உள்ளக் குமுறலுக்கு கம்யூனிஸ்டுகள் என்ன பதிலை வைத்துள்ளனர். இனி வேலைக்கு செல்லும் அனைத்துலக பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க கம்யூனிஸ்ட் காமரேட்டுகள் தயாரா? செங்கொடி இதற்கு ஏற்பாடு செய்வாரா? இங்கும் கம்யூனிஸத்தின் ஆண் பெண் சமம் என்ற கோட்பாடு தோல்வியை தழுவியுள்ளதைப் பார்கிறோம்.

-----------------------------------------------

இனி 1400 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு ஆதாரபூர்வமான நிகழ்ச்சியை நினைவு கூறுவோம்.

நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் பெண்குழந்தை பிறந்தால் வறுமைக்கு அஞ்சி அதனை உயிரோடு புதைத்து விடுவார்கள். தமிழ் நாட்டில் இன்றும் அந்த கொடுமை உசிலம்பட்டி போன்ற கிராமங்களில் நடந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில்தான் குர்ஆன் 'பெண் குழந்தைகளை கொன்றால் அதற்காக மறுமையில் தண்டிக்கப்படுவீர்கள்' என்ற இறை வசனம் இறங்குகிறது. அன்று முதல் மக்கா மதினாவில் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் பழக்கம் அந்த மக்களால் கைவிடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு நீண்ட நபி மொழி ஒன்றை பார்போம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபியவர்களிடம் 'இறைவனின் தூதரே! நான் புது மாப்பிள்ளை' என்று சொல்லி ஊருக்கு விரைவாக செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள். 'நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? அல்லது வாழ்ந்து அனுபவமுள்ள பெண்ணை மணந்து கொண்டாயா?' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத்தான் மண முடித்துக் கொண்டேன்' என்று பதில் கூறினேன். அதற்கு நபியவர்கள் ' கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே' என்று கூறினார்கள்.

நான் 'இறைவனின் தூதரே! எனக்கு சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை இறந்து விட்டார். எனவே எனது சகோதரிகளுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ அவர்களைப் பராமரிக்கவோ இயலாத சிறு வயதுப் பெண்ணை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. எனவே தான் அனுபவமுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணந்து கொண்டேன்' என்று பதிலளித்தேன்.

ஆதார நூல்: புகாரி 2967

பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த சமூகத்தில் குர்ஆன் இறங்கியதற்கு பிறகு அந்த இளைஞனின் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை பாருங்கள். தனது சுகத்தை விட தனது சகோதரிகளின் சுகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வயது அதிகம் உள்ள ஒரு பெண்ணை மணந்ததை பார்கிறோம். இந்த தாயுள்ளம் அந்த இளைஞனுக்கு வரக் காரணமாயிருந்தது நபிகள் நாயகத்தின் போதனைகளும் குர்ஆனின் வசனங்களும் தான். இவர் மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகமும் பெண்களுக்கு கண்ணியத்தை கொடுக்க ஆரம்பித்தது. அந்த பெண்களுக்கு கல்வியையும் கொடுத்தது இஸ்லாம். அவர்களின் உடல் நிலைக்கு தக்க வேலையை தேர்ந்தெடுத்து கொள்வதையும் இஸ்லாம் தடுக்கவில்லை. இஸ்லாம் விதிக்கும் ஒரே நிபந்தனை ஆணும் பெண்ணும் கலந்து கல்விச்சாலைக்கோ வேலைக்கோ போகக் கூடாது என்பதுதான். பெண்களின் பாதுகாப்பைக் கருதியே இத்தகைய சட்டத்தை இஸ்லாம் வகுத்தது.

ஆனால் கம்யூனிஸமோ ஆணும் பெண்ணும் கலந்து படிப்பதையும், வேலைக்குச் செல்வதையும் ஊக்குவித்தது. பெண்ணுக்கு விருப்பமில்லா விட்டாலும் பொருளாதார ஆசையை காட்டி அவர்களை கட்டாயப்படுத்தியது. அவ்வாறு கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பிய பெண்கள் படும் துயரங்களைத்தான் நாம் மேலே தினத் தந்தியின் செய்தியில் பார்தோம். கட்டுப்பாடான இந்தியாவிலேயே பெண்களுக்கு இத்தகைய கொடுமை என்றால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் படும் தொல்லைகளை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எனவே கம்யுனிஸம் முற்போக்கு பொருள் முதல் வாதம் என்று கூறி பெண்களை படுகுழியில் தள்ளியது. இஸ்லாமோ இறை நம்பிக்கையை ஊட்டி பெண்களுக்கு பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்து அவர்களின் உடலுக்கு ஏற்ற தகுந்த வேலைகளை கொடுத்து கண்ணியப்படுத்தி வருகிறது.

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்.ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு'-குர்ஆன் 4:32

விவாகரத்து இஸ்லாத்தில் மிக எளிதாக்கப்பட்டுள்ளது. பிடிக்கவில்லை என்றால் 'தலாக்' என்று சொல்லி மூன்று மாத இடைவெளி விட்டு மூன்று முறை கூறி கண்ணியமாக பிரிந்து விடுங்கள் என்கிறது இஸ்லாம். ஆனால் இந்து மதத்திலும், கிருத்தவ மதத்திலும் கம்யுனிஸத்திலும், விவாகரத்து கடினமாக்கப்பட்டுள்ளது. அவ்வளவு சுலபத்தில் விவாகரத்து கிடைத்து விடாது. ஆனால் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் எடுத்துக் கொண்டால் விவாகரத்து குறைவாக நடப்பது இஸ்லாமியரிடத்தில்தான். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மிக அதிக அளவில் விவாகரத்து நடப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. நமது இந்தியாவிலும் படித்த குடும்பங்களில் மிக அதிக அளவு விவாகரத்துகள் நடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. பணம்... பணம் என்று ஆணும் பெண்ணும் அலைந்ததால் நிம்மதி போய் மனச் சிதைவுக்கு ஆளாகி முடிவில் விவாகரத்தை நாடுகின்றனர். கம்யூனிஸ சித்தாந்தத்தால் சமூகம் அடைந்த கேடுகளில் இதுவும் ஒன்று.

இந்த இடத்திலும் இஸ்லாம் நிமிர்ந்து நிற்கிறது. கம்யூனிஸம் தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது.

ப.சிதம்பரம் ஒருமுறை சொன்னார், "இருபத்தைந்து வயதுக்குள் ஒருவன் கம்யூனிஸம் பேசவில்லை என்றால் அவனுக்கு இதயமே இல்லை என்று அர்த்தம்; இருபத்தைந்து வயதுக்குப் பிறகும் கம்யூனிஸம் பேசினான் என்றால் அவனுக்கு மூளையே இல்லை என்று அர்த்தம்" என்று. எங்கோ படித்தது...... :-) பொருளாதார புலி ப.சிதம்பரம் சரியாகத்தான் சொல்லியுள்ளாரா என்று செங்கொடிதான் சொல்ல வேண்டும்.

இறைவன் நாடினால் இனியும் எழுதுவேன். நான் எழுதிய மூன்று பதிவுகளுக்கு உரிய பதிலை செங்கொடி கொடுத்து விட்டால் மேற்கொண்டு தொடரலாம்.

No comments: