Followers

Saturday, February 07, 2015

மார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?

சதீஸ் குமார்!

//முஸ்லிம்களும் சரி கிறிஸ்தவர்களும் சரி இப்படி புக் கேட்டு நெருங்கினால் நம்மை மூளை சலவை செய்து மத மாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்ன செய்வது//

கிறித்தவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல வரவில்லை. பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?

என்னைக் கேட்டால் இதற்கு ஐந்து காரணங்களை சொல்வேன்.

1.நாங்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் குழப்பமில்லாத ஓரிறைக் கொள்கை. மன அமைதி. சமூகத்தில் அந்தஸ்து. அழகிய சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் என்று அனைத்தையும் அனுபவித்து வருகிறோம். இதனை நாம் மட்டும் பெறுவதற்கு பதில் நம்மோடு அண்ணன் தம்பிகளாக, நண்பர்களாக, பக்கத்து வீட்டுக்காரர்களாக பழகி வரும் நம் இந்து சகோதரர்களுக்கும் இந்த அழகிய வாழ்வு முறை கிடைக்கட்டுமே என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம்.

2. இரண்டாவதாக நாளை மறுமையில் இறைவன் இஸ்லாமியர்களைப் பார்த்து 'உங்களை நான் ஒரு இஸ்லாமிய பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறக்கச் செய்து சமூக அந்தஸ்தையும் கொடுத்தேனே. கஷ்டமில்லாமல் கிடைத்த இந்த மார்க்கத்தை உனக்கு அருகில் இருந்த உனது பள்ளி நண்பர்களுக்கும், அக்கம் பக்கத்து வீட்டாருக்கும் எடுத்துரைத்தாயா? அறியாதவர்களை தேடி அவர்களின் அறிவின்மையை போக்க உனக்கு கட்டளையிட்டிருந்தேனே அதனை செயல்படுத்தினாயா?' என்று கேட்டால் என்ன பதில் சொல்வது.? எனவே இஸ்லாத்தை ஏற்கிறார்களோ இல்லையோ நாம் ஒரு முறை குர்ஆனின் கருத்துக்களை எத்தி வைப்போம் என்று நினைத்திருக்கலாம். இது ஒரு வகையான சுயநலம் என்று கூட சொல்லலாம்.

3. மூன்றாவதாக... இந்தியாவில் முஸ்லிம்களான நாம் சிறுபான்மையினராக இருக்கிறோம். ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பஜ்ரங்தள் போன்ற தீவிரவாத அமைப்புகள் தினமும் நம்மை அச்சுறுத்துகின்றன. நமது வியாபார தலங்களை திட்டமிட்டு அழிக்கின்றனர். இளைஞர்களை பொய் கேஸ்கள் போட்டு கைது பண்ணுகின்றனர். கல்வி வேலை வாய்ப்பிலும் சரியான பிரதிநிதித்துவம் தருவதில்லை. இந்தியாவில் இஸ்லாமியரின் எதிர்காலம் கேள்விக்குரியதாக உள்ளது.

இதனை எல்லாம் யோசித்து நாம் சிறுபான்மையினராக இருப்பதால்தானே இத்தனை சிரமங்களும். நாமே இந்தியாவில் பெரும்பான்மையாகி விட்டால் இந்துத்வாவை ஒரு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். அரசியல் அதிகாரமும் நம் கையில் அப்போது இருக்கும் என்று நினைத்திருக்கலாம். இது ஒரு வகையான தற்காப்பு என்று கூட கூறிக் கொள்ளலாம்.

4. நான்காவதாக.... நாளை மறுமையில் தீர்ப்பு நாளில் ஏக இறைவனை மறுத்த, கொலை, கற்பழிப்பு, வட்டி, திருட்டு என்று பல பெரும் பாவங்களைச் செய்த நபர்களை இறைவன் விசாரித்து அவர்களை நரகில் கொண்டு செல்ல ஆணையிடும் போது அவர்கள் 'இறைவா! என் கூட கல்லூரி வரை ஒன்றாக படித்தான். உற்ற நண்பனாக இருந்தான். இணையத்தின் மூலம் தினமும் இரண்டு மணி நேரம் அரட்டை அடிப்போம். அப்போதெல்லாம் ஒரு தடவையாவது எனது இஸ்லாமிய நண்பன் உனது இறுதி வேதத்தை எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. நபிகள் நாயகத்தைப் பற்றி ஒரு வார்த்தை என்னிடம் பேசியதில்லை. அனைத்து சினிமா நடிகர்கள் நடிகைகளின் போட்டோக்களை ஷேர் செய்த இவன் ஒரு முறையாவது உனது வேத வசனங்களை ஷேர் பண்ணியிருந்தால் நான் நேர் வழி பெற்றிருப்பேனே!' என்று முறையிடுவான். விசாரணையில் அந்த இந்து நண்பன் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று தெரிய வரும் போது சத்தியத்தை எடுத்து சொல்லாத அந்த முஸ்லிமும் தண்டிக்கப்படுவான்.

அது போன்ற ஒரு நிலை தங்களுக்கு நேர்ந்து விடக் கூடாது என்ற முன் ஜாக்கிரதையாலும் உங்களுக்கு உபதேசம் பண்ணியிருக்கலாம்..

5. ஐந்தவதாக இஸ்லாமிய வரலாறுகள் உங்களுக்கு தவறாக சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. கஜினி முகமது வந்தான் கோவிலை கொள்ளையடித்தான். என்று சிறு வயதிலிருந்து பாட புத்தகங்கள் மூலமாக ஒரு சார்பு வரலாறு போதிக்கப்பட்டுள்ளது. சேர சோழ பாண்டிய மன்னர்களும், வட நாடுகளில் இந்து மன்னர்களும் இதே போல் கோவிலை அழித்திருக்கிறார்கள். அங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்திருக்கிறார்கள். ஏனெனில் அன்றைய கோவில்கள் மன்னர்களின் கஜானாக்களாக இருந்தது. மன்னர்கள் ஒளிந்து கொள்ளும் புகலிடமாகவும் இருந்தது. எனவே தான் கோவிலை சுற்றி அகழிகளை நிறுவினர். தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றி பெரிய அகழி இருப்பதை இன்றும் நாம் பார்கலாம். அதே பெரிய கோவிலில் பல சுரங்கங்களும் இன்றும் உள்ளன. ஒரு ஆள் நுழைந்து செல்லும் அளவுக்கு பல மைல்கள் தோண்டியுள்ளனர். வழிபடும் கோவிலில் சுரங்கங்கள் எதற்கு? இறைவனை வழிபடக் கூடிய கோவிலுக்கு அகழி எதற்கு? அங்கு செல்வங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததாலேயே அகழிகள் வெட்டப்பட்டன. கேரள பத்மநாபசாமி கோவிலின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுமாம். இந்தியாவின் வறுமையையே ஒழித்து விடலாம் :-) இறைவனை வழிபடும் கோவிலுக்கு இத்தனை ஆயிரம் கோடி நகைகள் எதற்கு? எனவே அன்றைய கோவில்கள் வழிபடும் இடமாக மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் பல ரகசியங்களை காத்திடும் இடமாகவும் திகழ்ந்துள்ளது.

அன்றைய போர்களே கொள்ளையிடுவதை நோக்கமாக கொண்டது. அது அன்று தவறாகவும் பேசப்படவில்லை. உலகமெங்கும் இதுதான் நடைமுறையில் இருந்தது. இவ்வாறு மறைக்கப்பட்ட வரலாறை உங்களுக்கு விளக்கவும் முயற்சித்திருக்கலாம்.

எனவே உங்களுக்கு அவர்கள் குர்ஆனின் வசனங்களையோ மற்ற இஸ்லாமிய நடைமுறைகளையோ இஸ்லாமிய வரலாறுகளையோ கொண்டு வந்தால் விரும்பினால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் 'நன்றி' என்று திருப்பி கொடுத்து விடுங்கள். யாருக்கும் கட்டாயமில்லை. அல்லது உங்கள் மதத்தின் நல்ல கோட்பாடுகளை அந்த இஸ்லாமியருக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் ஏற்படும். சமூக நல்லிணக்கமும் மலரும்.

No comments: