Followers

Wednesday, February 25, 2015

மதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்!



மதரஸாக்களில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்!

உத்தரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது 'ஜம்யத்துல் அன்ஸார்' என்ற அரபி மதரஸா. இந்த மதரஸாவில் 14 இந்து மாணவர்கள் தாங்களாகவே விரும்பி சேர்ந்து கல்வி பயில்கின்றனர். இது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

இந்த மதரஸாவில் முன்பு வெறும் இஸ்லாமிய பாடங்கள் மட்டுமே போதிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு என்று பலதரப்பட்ட கல்விகளையும் இந்த மதரஸா போதிக்கிறது. இந்த மதரஸாவின் முதல்வர் காலித் அன்சாரி சொல்கிறார் 'இந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உருது மற்றும் அரபி மொழியையும், இஸ்லாமிய சட்டதிட்டங்களையும் தெரிந்து கொள்வது நல்லது என்று நினைக்கின்றனர். அதோடு உலக கல்வியும் சேர்ந்து கிடைப்பதால் இவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு கல்வியும் கிடைத்து விடுகின்றது. இது அவர்களின் எதிர்கால வாழ்வை சிறப்பாக்கி வைக்கும் என்று இந்த மாணவர்களின் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.' என்கிறார்.

ஸ்ரீவாத்ஸவ் என்ற வைதீக இந்து சொல்கிறார் 'பலரும் என்னிடம் உனது குழந்தையை ஏன் மத்ரஸாவில் சேர்த்துள்ளாய் என்று கேட்கின்றனர். தரமான கல்வி, சிறந்த ஆசிரியர்கள், ஒழுக்கம் பேணுதல் என்று அனைத்தும் ஓரிடத்தில் எனது மகனுக்கு கிடைக்கும் போது அவனை அங்கு சேர்ப்பதில் என்ன தவறு?' என்று கேட்கிறார்.

இதே போல் இந்துக்கள் நடத்தும் வித்யா மந்திர் என்ற கல்வி ஸ்தாபனத்தில் சில இஸ்லாமிய மாணவர்களும் படிக்கின்றனர். இந்த பள்ளியில் படித்த இஸ்லாமியர்கள் பலர் பல நல்ல அரசு உத்தியோகங்களில் வேலை கிடைக்கப் பெற்றுள்ளனர். முன்பு கலவரம் நடந்து 50 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இறந்த முஸாஃபர் நகருக்கு பக்கத்தில்தான் இந்த அதிசயம் நடந்து வருகிறது.

இந்துக்களையும் முஸ்லிம்களையும் மோத விட்டு அதன் மூலம் ஓட்டு அறுவடை செய்தது இந்துத்வா. தற்போது உண்மையை உணர்ந்த இரு தரப்பும் அன்பினால் நெருங்கி வருகிறது. இந்துத்வாவின் பிரித்தாளும் சூழ்ச்சி நெடு நாளைக்கு நீடிக்கவில்லை.

ஹிந்தி பேசும் மாநிலங்களெல்லாம் இன்று மதரஸா கல்வியை நவீனமயமாக்கி முஸ்லிம்கள் மத்தியில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் நமது தமிழக மதரஸாக்களோ இன்னும் மத்ஹப் என்ற பெயரில் பல குப்பைகளை பாடங்களாக வைத்து போதித்து வருகின்றன. ஏழு வருடம் தனது வாழ்வை மதரஸாவில் தொலைத்த மாணவன் வெளியேறும் பொது உண்மையான இஸ்லாமிய கல்வியும் இல்லாமல் உலக கல்வியும் இல்லாமல் வருகிறான். போட்டி அதிகமுள்ள இந்த காலத்தில் மத்ஹப் பாடங்களை வைத்து அவனால் என்ன செய்ய முடியும்? இதனால் முடிவில் தட்டு, தாயத்து, ஃபாத்திஹா, தர்ஹா என்று போய் மூடப் பழக்கங்களில் மூழ்கி நஷ்டவாளிகளாக மாறிய பலரைப் பார்கிறோம்.

மதரஸாவை நடத்தும் செல்வந்தர்கள் இனியாவது உலக கல்வியை பாடமாக வைக்க முயற்சி செய்யுங்கள். சிஎம்என் சலீம் போன்றவர்கள் பல நல்ல திட்டங்களை வைத்துள்ளனர். அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு அரசு அங்கீகாரத்தோடு மதரஸாக்களை நடத்த முயற்சி எடுங்கள். வீணாக ஏழை மாணவர்களை ஏழு வருடம் மத்ஹப் குப்பைகளை படிக்கவைத்து அவர்களை படு குழியில் தள்ள வெண்டாம்.

பணமும், அறிவும் கொடுக்கப்பட்ட மக்கள் அதனை சரியாக பயன்படுத்தாவிட்டால் அதற்கும் இறைவனிடம் பதில் சொல்ல கடமைபட்டுள்ளனர் என்ற நபி மொழியை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து நடவடிக்கை எடுப்பார்களாக! குர்ஆன், ஆங்கிலம், அறிவியல், வரலாறு, புவியியல், கணிதம், கணிணி, விளையாட்டு, என்று வகைப்படுத்தி ஒவ்வொன்றுக்கும் முக்கால் மணி நேரம் ஒதுக்கி சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடங்களை எடுங்கள். நபிகள் நாயகம் காட்டித்தந்த அந்த 'முன் மாதிரி சமுதாயமாக' இளைஞர்களை மாற்ற இனியாவது முயற்சியுங்கள்.

'அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று நபியே கேட்பீராக! அறிவுடையோர்தான் நல்லறிவு பெறுவார்கள்'
-குர்ஆன் 39:9


தகவல் உதவி
என்டிடிவி
26-02-2015

No comments: