Followers

Tuesday, February 03, 2015

ஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்!

ஈரானின் மஜீத் மஜீதியின் அடுத்த படத்துக்கான ஒலிப்பதிவு வேலைகள் முடிக்க ஏ ஆர் ரஹ்மான் தற்போது பாரிஸில் முகாமிட்டுள்ளார். சமீர், விஸாம், அத்னான் என்ற புகழ் பெற்ற ஊத் இசை அமைப்பாளர்களோடு தனது அடுத்த படத்துக்கான வேலைகளை பகிர்ந்து கொண்டார். பாலஸ்தீனியர்களான இந்த மூன்று பேரும் சகோதரர்களாம். முன்பு ரஹ்மானின் இசையில் அராபிய இசையின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த படத்தில் சொல்லவே வேண்டாம். வெளுத்து கட்டுவார்.

இந்த படம் நபிகள் நாயகத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை சொல்லக் கூடியதாக இருக்கும். உலகப் புகழ் பெற்ற பல விருதுகளை குவித்த மஜீதி இதன் டைரக்டர் என்பதால் காட்சி அமைப்புகளும் மிகப் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

'தி மெஸ்ஸேஜ்' படத்தைப் போன்றே கதாநாயகனை காட்சிப் படுத்தாமலேயே வரலாற்றை நகர்த்திச் சென்றுள்ளார் மஜீதி. கலீபா அபூபக்கர், கலீபா உமர் போன்றவர்களை படத்தில் கொண்டு வந்துள்ளார்.

மஜீதி ஷியா என்பதால் பலரும் பயந்தனர். ஆனால் அவர் தனது பேட்டியில் சன்னி, ஷியா இரு பிரிவினரும் ஒத்துக் கொண்ட விஷயங்களை வைத்தே இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாக தனது பேட்டியில் கூறியுள்ளார். நபிகள் நாயகம் மரணித்து பல ஆண்டுகள் கழித்தே ஷியாக்கள் ஆட்சி அமைப்பதில் எழுந்த குளறுபடியால் உருவானார்கள். எனவே இவரது படத்தில் நபிகள் நாயகம் வரலாற்றில் எந்த பிரச்னையும் வராது என்றே நம்புவோம்.

இவரது முந்தய படங்கள் உணர்வு பூர்வமாக இருக்கும். இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்ப காலகட்டங்களில் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகள் பலரது கண்களையும் குளமாக்கும். அந்த காட்சிகளை எல்லாம் எவ்வாறு எடுத்துள்ளார் என்பதை பற்றி இப்போதே பலரின் எதிர்பார்புகளை மஜீதி ஏற்படுத்தியுள்ளார்.

மாற்று மத மக்களுக்கு உலகமெங்கும் இஸ்லாத்தின் செய்தியை ஒரே நேரத்தில் கொண்டு செல்ல சினிமா ஒரு சிறந்த சாதனம். அதனை மஜீத் சரியாக பயன்படுத்தியுள்ளாரா என்பதை படம் ரிலீஸானவுடன்தான் நமக்கு தெரிய வரும்.

இந்த படத்துக்கு பிறகு அராபிய உலகிலும் ரஹ்மான் காலடி பதிப்பார் என்று நம்பலாம். ஆஸ்காரும் கிடைக்க வாழ்துவோம்.

தகவல் உதவி
டெக்கான் கெரானிக்கல்
03-02-2015

ஒரு முறை நபிகள் நாயகம் அவர்களிடம் ஒருவர் வந்து 'திருமணத்தில் இசைப்பதையும் கெளிக்கை நடத்துவதையும் அனுமதித்துள்ளீர்களா?' என வினவினார். அதற்கு 'ஆம்! அது திருமணம் தானே! விபசாரம் அல்லவே! என நபிகள் நாயகம் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஜீத்
நூல் தப்ரானி: பத்ஹூல் புகாரி, பாகம் 11, பக்கம் 133ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.

நூல்: முஸ்லிம் 1619


எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் (ரஹ்) அவர்களிடம்) 'எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்' (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து இரங்கல் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்' என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லதே! இதை விடுத்து முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை வேண்டுமானால் சொல்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ருபய்யி(ரழி) நூல்: புஹாரீ: 4001

கஞ்சிராக்கள் என மொழிபெயர்க்கப்பட்ட இடத்தின் அறபு மூலத்தில் 'துப்பு' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் தோலால் மூடப்பட்ட கருவியாகும். இதை சிறுமிகள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. எனவே இது அங்கீகரிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

------------------------------------------------------------

இசை சம்பந்தமான அழகிய விவாதம்....

http://adirainirubar.blogspot.com/2012/07/blog-post.html

No comments: