Followers

Saturday, February 21, 2015

இருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்



"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

- திருக்குறள் 5

பொருள்:

'இருளில் சேர்த்து விடும் இரு வினைகளையும் தவிர்த்து இறைவன் இட்ட கட்டளைப் படி தனது வாழ்வை அமைத்துக் கொள்வோரே புகழோடு வாழ்ந்தவராவார்'

அது என்ன இருளில் சேர்க்கும் இரு வினைகள்? நன்மை தீமையை சொல்கிறாரா வள்ளுவர்? இல்லை. ஏனெனில் இரண்டு வினைகளுமே நம்மை இருளில் சேர்த்து விடும் என்கிறார். நன்மையான காரியங்களை செய்பவரை எப்படி இருளில் கொண்டு சேர்பதாக வள்ளுவர் சொல்வார்? எனவே நன்மை தீமையை இங்கு வள்ளுவர் கூறவில்லை என்பதை அறியலாம். ஆனால் பல விளக்கவுரைகளில் நன்மை தீமை என்றே 'இருளில் நேர்க்கும் இரு வினைகளுக்கு' விளக்கம் அளித்துள்ளனர். கலைஞரும் சாலமன் பாப்பையாவும் கூட நன்மை தீமை என்றே மொழி பெயர்த்துள்ளனர்.

வள்ளுவர் சொன்ன அந்த இரு வினைகள் என்ன என்று பார்போம்.

ஒன்று ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனோடு சேர்ந்து வரும் இறைவன் விதித்த தீமையை அடிப்படையாக கொண்ட விதி. மற்றொன்று ஒரு மனிதன் பிறந்ததற்கு பிறகு இந்த பூமியில் அவன் இறக்கும் வரை செய்து வரும் தீய வினைகள். அதாவது தீய செயல்கள். இந்த இரண்டு தீய செயல்களையும் எவன் ஒருவன் வென்று விடுகின்றானோ அவனே பாக்கியசாலி என்கிறார் வள்ளுவர்.

இஸ்லாமும் இந்த இரு வினைகளைப் பற்றி பேசுகிறது. மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பு தாயின் வயிற்றில் ஒரு வானவர் மூலமாக அவனது அனைத்து காரியங்களும் பதியப்படுவதாக நபிகள் நாயகம் அறிவித்துள்ளார். நல்லவனா? தீயவனா? என்பது இங்கு தீர்மானிக்கப்படுகிறது. இது ஒரு வினை. தாயின் வயிற்றிலிருந்து அவன் வெளியேறியவுடன் இந்த உலகில் நன்மை தீமை இரண்டும் இறை வேதங்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. இந்த இறை வேதங்களை ஆராய்ந்து இறைவன் இட்ட கட்டளைப்படி நன்மை செய்து இறப்பவனுக்கு சொர்கம் தருவதாகவும், இறை கட்டளைகளை மீறுபவனுக்கு நரக வேதனை தருவதாகவும் குர்ஆன் கூறுகிறது. இது இரண்டாவது தீய வினை. இங்கும் இரண்டு தீய வினைகளைப் பார்கிறோம்.

தாயின் வயிற்றில் ஒருவனை கெட்டவனாக இறைவன் எழுதி விட்ட பிறகு அவன் எப்படி நல்லவனாக மாற முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். முக்காலத்தையும் உணர்ந்தவன்தான் நம்மைப்படைத்த இறைவனாக இருக்க முடியும். படைத்த தனது படைப்பினம் எவ்வாறு வாழ்ந்து மரிக்கும் என்ற புரிதல் இல்லாதவன் எவ்வாறு இறைவனாக முடியும்?

அதே நேரம் கெட்டவனாக இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட ஒரு மனிதன் ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து 'இறைவா! எனக்கு நேர் வழியைக் காட்டுவாயாக' என்று பிரார்தித்தால் அந்த பிரார்தனையை ஏற்றுக் கொண்டு எழுதிய விதியை அந்த இறைவனே மாற்றி அமைப்பதாக குர்ஆனிலே சொல்கிறான்.

'பதிவு ஏட்டில் உள்ளவைகளில் இறைவன் நாடியதை அழிப்பான். நாடியதை அழிக்காமல் விடுவான். அவனிடமே தாய் ஏடு உள்ளது'
-குர்ஆன் 13:39

ஆக.... கெட்டவனாக பூமிக்கு அனுப்பப் பட்ட தனது அடியான் தன்னிடம் நேர் வழி காட்ட பிரார்தித்தால் அதனை ஏற்று எழுதிய தாய் ஏடான பதிவு ஏட்டை திருத்தி அவனை நல்லவனாக மரணிக்க செய்கிறான். அதாவது தான் எழுதிய விதியை தானே மாற்றி எழுதுவதாக இங்கு இறைவன் கூறுகிறான். எனவே தான் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத பகுத்தறியும் ஆன்மாவை விசேஷமாக மனிதனுக்கு மட்டும் இறைவன் கொடுத்துள்ளான். எனவே மனிதனின் முயற்சியில்தான் ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பதை இதிலிருந்து விளங்குகிறோம்.

இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்திலும் இந்த இரு வினைகள் சொல்லப்பட்டுள்ளது.மனிதன் பிறக்கும் போது அவனோடு சேர்ந்து வரும் வினையாகிய ஜென்ம பாவம். அதனை சைவத்தில் 'சகச மலம்' என்று கூறுவர். அடுத்து அவன் பூமியில் பிறந்து மரிக்கும் வரை செய்த பாவ காரியங்களை கர்ம பாவம் என்று கூறுவர். இங்கும் அந்த இரண்டு தீய வினைகளும் வருவதைப் பார்கிறோம்.

இது பற்றிய செய்திகளைத் தரும் சங்க கால பாடல்களையும் பார்போம்.

“பற்றி தொடரும் இரு வினை அன்றி வேறு ஒன்றும் இல்லை பராபரமே” – தாயுமான சுவாமிகள்.

"கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்..." - சிவவாக்கியர்

சங்க இலக்கியங்களும், திருக்குறளும், குர்ஆனும் ஒத்த கருத்தைப் பெற்றிருப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறோம். இது எப்படி சாத்தியமாகிறது? உலக மொழிகள் அனைத்துக்கும் இறைவேதத்தை அனுப்பியுள்ளதாக குர்ஆன் கூறுகிறது.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4


ஆதி மொழியான தமிழுக்கு வேதமும் தூதரும் வந்துள்ளனர். அந்த வேதக் கருத்துக்கள் ஒரு சில இன்றும் உயிர்ப்புடன் இருப்பதால்தான் அவை குர்ஆனோடு ஒத்து போகின்றன. இதன் மேலதிக உண்மைகளை இறைவனே அறிந்தவன்.


No comments: