காஷ்மீரி ஒருவரை தற்கொலை படை தீவிரவாதி என்று சித்தரித்த, டெல்லி தீவிரவாத தடுப்புப் படை போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, வடக்கு காஷ்மீர் லோலாப் பகுதியில் வசித்த லியாகத் ஷா என்பவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். ஷா டெல்லி வந்த போது அவரை கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இதற்கு அப்போதைய காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.
அதன் பிறகு லியாகத் ஷா உண்மையில் தீவிரவாதியா என்ற விசாரணையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இறங்கினர். விசாரணை முடிவில் அவர் தீவிரவாதி இல்லை என்றும் டெல்லி தீவிரவாத தடுப்புப் படை போலீஸ் அதிகாரிகள் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் தவறு செய்த டெல்லி போலீஸ் அதிகாரிகள் 5 பேர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் தண்டனை வழங்கவும் தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இதில் உதவி போலீஸ் ஆணையர், இரண்டு ஆய்வாளர்கள் அடங்குவர். இதற்கிடையில், காஷ்மீரில் இருந்து லியாகத் ஷா நேபா ளத்துக்கு வந்த போது, அஸ்லாம் ஹல்கா என்பவர்தான் அவரை டெல்லி அழைத்து வந்துள்ளார். ஷா மீது பொய் வழக்கு பதிவு செய்ய, போலீஸாருக்கு அஸ்லாம் ஹல்கா உதவியதாகக் கூறப்படுகிறது.
தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், போலீஸாரின் சதி திட்டத்துக்கு உதவிய அஸ்லாம் ஹல்கா மீதும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பிரச்சினையில் சிக்க வைக்கப்பட்ட லியாகத் ஷா தற்போது ஜாமீனில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ் இந்து நாளிதழ்
02-02-2015
No comments:
Post a Comment