Followers

Thursday, February 12, 2015

இஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ஒன்று!



இஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ஒன்று!

கருப்பு, வெள்ளை, மாநிறம், தூய வெள்ளை, தூய கருப்பு என்று மனிதரில் இத்தனை நிறங்களா? என்று உங்களை வியக்க வைக்கும் பல தமிழக முஸ்லிம் கிராமங்கள். மாநிறமும் தூய வெள்ளையும் எவ்வளவு அன்யோன்யமாக கள்ளம் கபடமற்று தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை பாருங்கள்.

கருப்பு நிறத்துக்கு சொந்தக்காரர்களான வன்னியர்களும் தலித்களும் எந்த அளவு பகை கொண்டு ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு உயிரை விடுகின்றனர் என்பதை தினமும் பத்திரிக்கையில் பார்கிறோம். காதலித்த ஒரே குற்றத்தக்காக இளவரசன் என்ற இளைஞனின் உயிரை பறித்தது சாதி வெறி. ஆனால் இங்கோ நேரெதிர் நிறங்களான கருப்புக்கும் வெள்ளைக்கும் இந்த அளவு பிணைப்பு எப்படி வந்தது? இதனை கொடுத்தது எந்த சித்தாந்தம்? வன்னியர்களும் தலித்களும் நாடார்களும் செட்டியார்களும் தேவர்களும் பார்பனர்களும் வாழும் அதே சாதி வெறி பிடித்த தமிழகத்தில்தானே இஸ்லாமியர்களும் வாழ்கின்றனர்? பேசும் மொழியும் ஒன்றுதான். இவர்களுக்கு மட்டும் இந்த அன்பு எப்படி சாத்தியமாகிறது?

இன வெறி, மொழி வெறி, இவற்றை தனது காலடியில் போட்டு மிதிப்பதாக நபிகள் நாயகம் தனது அறிவுரையாக முஸ்லிம்களுக்கு கூறியுள்ளதாலேயே இது சாத்தியமாகிறது. எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று குர்ஆன் கட்டளையிடுவதாலேயே இது சாத்தியமாகிறது.

இதனை ஒரு வரலாற்று சம்பவத்தின் மூலம் நினைவு கூர்வோம்.

அபூதர்தா என்ற நபித் தோழர் மதீனாவைச் சேர்ந்தவர். சல்மான் ஃபார்ஸி என்பவர் ஈரானைச் சேர்ந்தவர். நபிகள் நாயகத்தின் பிரசார பணியைக் கேள்விப்பட்டு இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக மதினாவுக்கு வந்தவர் சல்மான் ஃபார்ஸி. இது போன்று அபிசீனியா, ஏமன், சிரியா, சூடான் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் பலர் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள அணி அணியாக வந்தனர். இவர்களை சமாளிப்பது நபியவர்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்தது. ஏனெனில் இன்று போல் அன்று தங்கும் விடுதிகளோ, உணவு விடுதிகளோ இல்லை. நெடுந்தூரம் பிரயாணத்திலிருந்து வருபவர்கள் யார் வீட்டிலாவது விருந்தாளிகளாக தங்கிக் கொள்வர். இதுதான் அன்றைய வழிமுறை.

ஆனால் மதினாவுக்கோ ஆயிரக் கணக்கில் மக்கள் தினமும் வருகின்றனர். மக்காவில் தங்கள் பொருட்களை எல்லாம் விட்டு விட்டு அகதிகளாக மதினாவில் தஞ்சம் புகுந்தவர்களே நபிகளும் அவரது தோழர்களும். பொருளாதார வசதியும் இல்லை. இஸ்லாத்தில் இணைபவர்களை கொலை செய்வதற்கென்றே மக்காவிலிருந்தும் சுற்று கிராமங்களிலிருந்தும் பல சிலை வணங்கிகள் முஸ்லிம்களை நோட்டமிட்டு வந்தனர். எனவே இவர்களின் உயிரையும் பாதுகாக்க வேண்டும். தங்குமிடமும் உணவும் தொடர்ந்து கொடுக்க வேண்டும். என்ன செய்வது? அருமையான ஒரு திட்டத்தை நபிகள் நாயகம் செயல்படுத்தினார்கள். அது என்ன திட்டம்?

மதினாவைச் சேர்ந்த அபூதர்தாவையும் ஈரானைச் சேர்ந்த சல்மான் ஃபார்ஸியையும் கூப்பிட்டு 'இதோ பார் அபூ தர்தா! இன்று முதல் சல்மான் ஃபார்ஸி உனது சகோதரன். இவருக்கு உணவு இருப்பிடம் அனைத்தும் கொடுக்க வேண்டியது உனது கடமை' என்ற ஒரு கட்டளையை போட்டார் நபிகள் நாயகம். இறைத் தூதர் போட்ட கட்டளைக்கு உடன் அடி பணிந்தார் அபூதர்தா. இதே போன்று அனைத்து மதினாவாசிகளுக்கும் கட்டளையிட்டார் நபிகள் நாயகம்.

சல்மான் ஃபார்ஸி ஈரானைச் சேர்ந்த ஃபார்ஸி மொழி பேசக் கூடியவர். இனத்தாலும் மொழியாலும் வேறுபட்டவர். அபூதர்தா அரபு இனத்தைச் சார்ந்தவர். தாய் மொழியாக அரபியைக் கொண்டவர். உடை, மொழி, கலாசாரம் என்று அனைத்திலும் வேறுபட்ட இந்த இருவரையும் சகோதரர்கள் என்று இணைத்து வைத்தது அந்த காலத்தில் மிகப் பெரிய புரட்சி. ஏனெனில் நமது தமிழகத்தை விட சாதி வெறியில் கொடி கட்டி பறந்த சமுதாயம் அன்றைய அரபு சமுதாயம். அரபு மொழி பேசாத மற்ற மொழிக் காரர்கள் ஊமைகள் என்று அன்றைய அரபு சொல்லி வந்தான். 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று நீங்கள் தமிழை தூக்கி வைத்துக் கொண்டாலும் அன்றைய அரபியின் பார்வையில் நீங்கள் 'பே...பே தான்' அதாவது ஊமைகள். :-) இதுதான் அன்றைய அரபு நாட்டு நிலை.

ஒரு சில மதீனா வாசிகள் ஒரு படி மேலே சென்று அவ்வாறு சகோதரர்களாக ஆக்கிக் கொண்டவர்களுக்கு தனது மகளை, தனது தங்கையை திருமணம் முடித்துக் கொடுத்து இரத்த சொந்தமாகவும் ஆக்கிக் கொண்டார்கள். அந்த காலத்தில் இது மிகப் பெரிய புரட்சியாகும். தனது சீடர்களை தோழர்கள் என்று அழைத்து கம்யூனிஸ சித்தாந்தம் உருவாகவே காரணமானது இந்த சகோதரத்துவ கொள்கை. கம்யூனிஸமே இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் உருவானதுதான். இதனை கம்யூனிஸ்டுகளும் நன்கு அறிவர்.

இந்த இஸ்லாமிய வரலாறுகளை தங்களின் வாழ்வில் உள் வாங்கிக் கொண்டதாலேயே தமிழக முஸ்லிம்களால் இவ்வளவு சகோதரத்துவமாக மாற்றாரோடும் பழக வைக்கிறது. பல இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் தளங்களில் 'எங்களுக்கு சாதி இந்துக்களை விட முஸ்லிம்களே நெருக்கமானவர்கள்' என்று எழுதும் அளவுக்கு நிலைமை இருக்கிறதென்றால் அது நபிகள் நாயகம் எங்களுக்கு இறைத் தூதின் மூலம் அளித்த பயிற்சி என்றால் மிகையாகாது.

நமது தமிழகம் இஸ்லாத்தால் பெற்ற நன்மைகளில் தலையாயது இந்த சகோதரத்துவம்.

No comments: