Followers

Saturday, February 28, 2015

அவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்!





அவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்!

அமெரிக்காவில் வசித்து வரும் பங்களாதேசத்தவரான 42 வயதான அபஜித் ராய் அடையாளம் தெரியாத நபர்களால் இரண்டு நாள் முன்பு கொல்லப்பட்டுள்ளார். மெகானிகல் இன்ஜியனரான இவர் பல ஆண்டுகளாக சமூக வலை தளங்களில் எழுதி வருபவர். சர்ச்சைக்குரிய சில விஷயங்களை தனது பிளாக்குகளில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். ரபீதா அஹமத் என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் முடித்திருந்தார்.

தனது மனைவியோடு பங்களாதேஷில் ஆட்டோ ரிக்ஷாவில் செல்லும் போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் வெட்டப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அவசரமாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் ரத்தம் அதிகம் வெளியாகி விட்டதால் இவரது உயிர் பிரிந்தது. இவரது மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டு தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது பங்களாதேஷில் தேர்தல் பிரசாரம் மும்முரமாகி உள்ளது. எனவே இது அரசியல் சம்பந்தப்பட்ட கொலையா? அல்லது இஸ்லாமிய பெண்ணை மணந்ததால் பெண்ணின் உறவினர் தரப்பில் நிகழ்த்தப்பட்ட கொலையா? அல்லது நாத்திகத்தை தனது எழுத்துக்களில் தொடர்ந்து புகுத்தி வந்ததால் கோபமுற்ற இஸ்லாத்தை சரியாக விளங்காத மூடர்களால் செய்யப்பட்ட கொலையா? என்பது தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

பங்களா தேசத்து பிளாக்கர் யூனியனின் தலைவர் இம்ரான் சொல்லும் போது 'உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது' என்கிறார்.

'குற்றவாளிகளை கைது செய்ய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்' என்கிறார் தவ்ஃபீக் இம்ரோஸ் காலிதி.

நாடு முழுவதும் இந்த கொலைக்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கொலையாகவோ அல்லது பெண் வீட்டாரின் பழி வாங்குதல் கொலையாகவோ இருந்தால் இது எல்லா நாட்டிலும் நடக்கும் ஒன்றுதான் என்று நமது கண்டனத்தை பதிவு செய்து விட்டு சென்று விடலாம்.

ஆனால் அவிஜித் ராய் நாத்திக கருத்துக்களை எழுதியதால் இந்த கொலையை இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு யாராவது செய்திருப்பார்களேயானால் அவர்கள் இறைவன் முன் குற்றவாளியாக்கப்படுவார்கள். எவ்வளவு பெரிய குற்றம் செய்தவனையும் தனி மனிதர்கள் ஆயுதம் தூக்கி கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை. நம்முடைய உயிரை ஒருவன் எடுக்க எதிரிலே வந்தால் நமது உயிரை காப்பாற்றிக் கொள்ள அந்த நேரத்தில் ஆயுதம் தாங்கி அவனோடு போரிட இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. மற்ற வேறு எந்த குற்றங்களாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. நீதி மன்றம் இருக்கிறது. காவல் துறை இருக்கிறது. இவற்றின் மூலம்தான் நமது பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமேயொழிய மூடத்தனமாக ஆயுதம் தூக்குவது இஸ்லாமிய நடைமுறை அல்ல என்பதை விளங்க வேண்டும்.

நபிகள் நாயகம் இஸ்லாத்தை பிரசாரம் செய்த காலங்களில் நாத்திகர்கள், நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள், கிறித்தவர்கள், யூதர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் நபிகள் நாயகத்திடம் வந்து பல குதர்க்கமான கேள்விகளை எல்லாம் கேட்டனர். அத்தனைக்கும் நபிகள் நாயகம் மிகப் பொறுமையாக பதில் அளித்ததை வரலாறுகளில் பார்கிறோம். தனக்கு பணத் தேவை ஏற்பட்ட போது ஒரு யூதரிடம் தனது பொருட்களை அடமானம் வைத்து விட்டு கடன் வாங்கியதை நாம் வரலாறுகளில் படிக்கிறோம். ஆட்சித் தலைவராக இருந்தும் மிரட்டி அவர்களிடம் மாமூல் வசூலிக்கவில்லை. அந்த அளவு மாற்று கருத்துடையவர்களை நபிகள் நாயகம் கண்ணியத்தோடு நடத்தியுள்ளார். எனவே நபிகள் நாயகத்தை பின் பற்றும் ஒரு முஸ்லிம் எதிர்க் கருத்து உடையவர்களை அதே கருத்துக்களைக் கொண்டுதான் விவாதித்து வெற்றி பெற முயல்வான். ஆயுதம் எடுப்பது ஒரு இஸ்லாமியனின் வழி முறை அல்ல என்பதை பதிவு செய்கிறேன்.

கொலைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு கொலையாளிகள் கைது செய்யப்பட்டு தக்க தண்டணையை அரசு பெற்றுத் தர வேண்டும். உயிரிழந்த அவிஜித் ராய் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

தகவல் உதவி:
கார்டியன்
28-02-2015

2 comments:

suvanappiriyan said...

யுக்ரெய்ன் போருக்கு எதிரான பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்த ரஷ்யாவின் முக்கிய எதிரணி அரசியல்வாதியான போரிஸ் நேம்ஸோவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

ரஷ்யாவில் முக்கிய எதிரணி அரசியல்வாதியும் முன்னாள் துணைப் பிரதமருமான போரிஸ் நேம்ஸோவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதிபர் மாளிகை உள்ள கிரெம்ளின் வளாகத்துக்கு அருகே உள்ள பாலம் ஒன்றை போரிஸ் நேம்ஸோவ் கடந்துகொண்டிருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரின் பின்புறத்தில் நான்கு துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளார்.

யுக்ரெய்னில் நடக்கும் போருக்கு எதிராக மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை பேரணி ஒன்றை நடத்த அழைப்புவிடுத்து சில மணிநேரத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையை அதிபர் விளாடிமிர் புடின் கண்டித்துள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.

எதிரணிச் செயற்பாட்டாளர் போரிஸ் நேம்ஸோவின் கொலை தொடர்பில் விசாரிப்பதற்காக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் குழுவொன்றை அதிபர் புடின் நியமித்துள்ளதாகவும் அவரது பேச்சாளர் கூறியுள்ளார்.

suvanappiriyan said...

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தின் தென் மத்தியப் பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தின் தென் மத்தியப் பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

டைரோன் நகரிலும் அதற்கு அருகிலும் ஐந்து வீடுகளில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளதாக காவல்துறை கண்டறிந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நான்கு இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகவும் இரண்டு இடஙங்களை காவல்துறை தேடிவருவதாகவும் ஹூஸ்டன் ஹெரால்ட் செய்தித் தாள் தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த ஒரு இடத்தில், நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அருகில் சடலம் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தச் சடலம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவருடையது என அவர்கள் கருதுகின்றனர்.
உள்ளூர் நேரப்படி இரவு பத்தே கால் மணியளவில் டெக்ஸாஸ் கவுண்டியின் ஷெரீஃப் அலுவலகத்தை தொலைபேசி மூலம் அழைத்த ஒரு இளம் பெண், ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கூறினார்.
அங்கு வந்த அதிகாரிகள், ஒரு வீட்டில் இரண்டு சடலங்களைக் கண்டறிந்தனர்.

மேலும் சோதனை நடத்தியதில் வேறு நான்கு வீடுகளில் மேலும் ஆறு பேரின் சடலங்கள் கிடைத்தனர். ஒருவர் காயமடைந்து கிடந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபரின் சடலம் அருகில் இருக்கும் ஷன்னோன் கவுண்டியில் ஒரு காரில் கண்டெடுக்கப்பட்டது.
டைரோனைச் சேர்ந்த 36 வயது நபரான அவர், தானே சுட்டுக்கொண்டதாகக் கருதப்படுகிறது.
காயமடைந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

BBC – 27-02-2015