Followers

Sunday, July 05, 2020

''விடுதலை செய்யப்பட்ட 17000 கைதிகளில் நானும் இருந்திருக்க கூடாதா”

விடுதலை செய்யப்பட்ட 17000 கைதிகளில் நானும் இருந்திருக்க கூடாதா” - #டாக்டர்கஃபீல்கான் உருக்கம்

“நான் எதற்காக தண்டிக்கப் படுகிறேன் என்று தெரியவில்லை. என்னுடைய குழந்தைகள், மனைவி, தாய், சகோதரர்கள், சகோதரி ஆகியோரை எப்போது சந்திப்பேன் என்று தெரியவில்லை. என்னுடைய சகோதர மருத்துவர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ்-ற்கு எதிராக போராடி ஒரு மருத்துவனாக என்னுடைய கடமையை எப்போது நிறைவேற்றுவேன் என்று தெரியவில்லை.”

ஐந்து மாதங்களுக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் சமீபத்தில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் இவை.

தற்போது அவர் மதுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றில் அரசாங்கத்தை விமர்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ஜனவரி 29 2020 இல் சிறையில் அடைக்கப்பட்டார். பிப்ரவரி 10 அன்று அலிகர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கிய போதும் பிப்ரவரி 13 அன்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை மீண்டும் கைதுசெய்தது உத்தர பிரதேச அரசு.

ஆகஸ்ட் 10, 2017 அன்று உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரத்திலுள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக அறுபது குழந்தைகள் அநியாயமாக மரணித்தனர். அப்போது தன்னுடைய சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏனைய குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார் கஃபீல்கான். ஆனால் அவர் மீதே குற்றம் சுமத்தி அவரை பணியிலிருந்து நீக்கியது உத்தர பிரதேச அரசு. ஆனால் அரசாங்கம் நியமித்த விசாரணைக் கமிட்டி அவர்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை என்று கூறி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அறிக்கை சமர்ப்பித்தது. அன்றிலிருந்து கஃபீல் கானை குறிவைக்கும் போக்கை உத்தர பிரதேச அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மார்ச் 19 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய மருத்துவர் கஃபீல் கான், கொரோனா வைரசுக்கு எதிராக தன்னுடைய மருத்துவ சேவைகளை பயன்படுத்த தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

இருபது வருடங்கள் மருத்துவத் துறையில் அனுபவம் கொண்ட இவர் கோரக்பூர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் 103 மருத்துவ முகாம்களை நடத்தியது அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இப்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு சிறையில் உள்ள சிறைவாசிகளை ஜாமீன் அல்லது பரோலில் விடுவிக்க மார்ச் 23 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 17, 963 கைதிகளை பரோலில் விடுவித்ததாக உத்தர பிரதேச அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அதில் கஃபீல் கான் இடம் பெறவில்லை.

534 கைதிகளுக்காக கட்டப்பட்ட இந்த சிறை வளாகத்தில் தற்போது 1600 நபர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு முதல் ஆறு கழிவறைகள் மட்டும் உள்ளதாகவும் தனது கடிதத்தில் கஃபில் கான் குறிப்பிட்டுள்ளார்.

சிறைவாசிகள் நெருக்கமாக இருப்பதால் சமூக இடைவேளைக்கான வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். துர்நாற்றம், கொசுக்களின் தொல்லை குறித்து அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளார். புத்தகத்தை வாசிப்பதற்கு தான் ஆர்வம் கொண்டிருந்தாலும் அதில் தன்னால் கவனத்தைக் குவிக்க இயலவில்லை என்பதை வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

Vidiyal on July 5, 2020

No comments: