Followers

Monday, January 12, 2015

தலையில் தொப்பி அணிவது யார் வழிமுறை?







(இங்கு தொப்பியோடு தோன்றும் அனைவரும் யூதர்களே)!

நம் தமிழ் படங்களிலும் ஹிந்தி படங்களிலும் முஸ்லிம்களைக் காட்டுவதாக இருந்தால் ஒரு தொப்பியோடு காட்டி அடையாளப்படுத்துவார்கள். ஊடகங்களிலும் அது போலவே. மேலும் நோன்பு கஞ்சி குடிக்கும் போதும் விஜயகாந்த் முதல் முக ஸ்டாலின் வரை அவசியம் தொப்பியை போட்டுக் கொள்வார்கள். முஸ்லிம் என்றாலே தொப்பி அவசியம் என்ற கருத்து எப்படியோ பலரின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

20 அல்லது 25 வருடங்களுக்கு முன்னால் தமிழக பள்ளிவாசல்களில் தொப்பி போடாமல் உங்களால் உள்ளே நுழையவே முடியாது. ஒரு முறை திருச்சியில் வேலை விஷயமாக நான் போன போது மதிய நேர தொழுகைக்கு ஒரு பள்ளியினுள் சென்றேன். தலையில் தொப்பி இல்லாமல் நான் தொழுது கொண்டிருந்தேன். ஒருவர் வந்து எனது தலையில் ஒரு வெள்ளை தொப்பியை வைத்து விட்டு சென்றார். :-) 'தொப்பி போடாமல் தொழுபவருக்கு இப்பள்ளியில் இடமில்லை' எனும் பொருள்பட ஒரு போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. 'வட்டி வாங்குபவன்: பொது சொத்தை திருடியவன், விபசாரம் புரிபவன்: சாராயம் குடிப்பன், அப்பாவிகளைக் கொன்றவன் போன்ற பெரும் பாவம் புரிந்த எவனுக்கும் இந்த பள்ளியில் இடமில்லை' என்ற போர்டை வைக்கக் காணோம். :-(

இவ்வாறு தொழும் போது தொப்பி போட வேண்டும். தலையை மறைக்க வேண்டும் என்று முகமது நபி அவர்கள் எங்குமே குறிப்பிடவில்லை. குர்ஆனிலும் அப்படி எந்த ஒரு கட்டளையும் இல்லை. பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் ஆண்களுக்கு தொப்பி அணிய வேண்டும் என்றோ அல்லது தலைப்பாகை அணிய வேண்டும் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. ஒருவர் தனக்கு பிரியமாக உள்ளது என்பதற்காக அணிகிறார் என்றால் அதில் நாம் தலையிட அவசியமில்லை. ஆனால் மார்க்க கட்டளை என்று சொல்லி வற்புறுத்தினால் அதற்கான ஆதாரங்களை நாம் கேட்க கடமைபட்டுள்ளோம்.

இதற்கு மாற்றமாக ஆண்கள் உம்ராவிலும் ஹஜ்ஜிலும் இஹ்ராம் (தூய வெள்ளை துணி) கட்டியிருக்கும் போது தலையை மறைக்காமல் திறந்திருக்க வேண்டும் என்ற கட்டளையை பார்க்கிறோம்.

இனி யூதர்களின் விஷயத்துக்கு வருவோம். அவர்களை பொருத்த வரை வழிபாடு புரியும் போது அவசியம் தலையில் தொப்பி இருக்க வேண்டும். இதனை நீங்கள் பல யூத கோவில்களில் நடைபெறும் பிரார்த்தனையின் போது பார்க்கலாம். யூத கட்டளைகளை நன்கு படித்து தெளிந்த ஒரு யூதன் அவசியம் தொப்பி அணிந்திருப்பார். யூதர்களின் ஒவ்வொரு செயல்களையும் தவறாமல் காப்பி அடிக்கும் நம் நாட்டு இந்துத்வாவாதிகளும் இதே காரியத்தை செய்கின்றனர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ள அனைவரும் தொப்பி அணிவது கட்டாய கடமையாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தர்ஹாவில் தலையை சாய்ப்பது இஸ்லாமிய வழிமுறை கிடையாது. யூதர்கள் தங்கள் நபி மார்களையும் மார்க்க அறிஞர்களையும் இறப்புக்கு பின்னால் சமாதியாக்கி அதனை வழிபடுவார்கள். எனவே தான் நபிகளும் யூதர்களைப் போல சமாதிகளில் சென்று வணக்கம் செய்பவர்களை சபித்தார்கள். இறந்தவர்களை வணங்கும் அந்த பழக்கமே இஸ்லாமியரிடத்திலும் தொற்றிக் கொண்டது. இஸ்லாம் என்றாலே மாற்று மதத்தவருக்கு உடன் தர்ஹாதான் ஞாபகம் வரும். அதே போன்று அவர்களிடம் இருந்து தொற்றிக் கொண்டதுதான் இந்த தொப்பி போடும் பழக்கமும்.



(தலையில் தொப்பியோடு சுவற்றைக் கட்டிக் கொண்டு அழுது பிரார்த்திக்கும் யூதர்கள்.)

எனவே தர்ஹா வணக்கம், பஞ்சா எடுக்கும் வழக்கம், தீ மிதிக்கும் வழக்கம், தொப்பி போடும் வழக்கம் எல்லாம் யூதர்களிடமிருந்து நமக்கு வந்தவை.

"எனக்கு தலை வழுக்கை: அதை மறைக்க நான் அணிகிறேன்: அல்லது எனக்கு தொப்பி போட்டால் அழகாக இருக்கிறது எனவே நான் அணிகிறேன்: சூரிய ஒளி, பனிக் காற்று, பாலைவனப் புழுதி போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தொப்பி, துண்டு போன்றவற்றை அணிகிறேன்" என்று ஒருவர் சொன்னால் அது அவரின் சொந்த விருப்பம் என்ற பேரில் அதனை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கலாம்.

ஆனால் 'நீ பள்ளிக்கு வந்தால் தலையில் தொப்பியோடு வர வேண்டும்' என்று கட்டளையிடுபவர்கள் அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க கடமைபட்டுள்ளார்கள். இது கட்டளையாக இருந்திருந்தால் கஃபாவில் எவரும் தலையில் தொப்பி இல்லாமல் தொழ முடியாது. அங்கு தொழுபவர்களில் 50 சதவீதத்துக்கு மேல் தலையில் தொப்பி இல்லாமல்தான் தொழுவார்கள். சவுதி மற்றும் அரபு நாடுகள் முழுக்க இந்த நிலைதான். தலையில் தொப்பி இல்லாமல் நான் சவுதி பள்ளிகளில் தலைவராக நின்று தொழுகையே நடத்தியுள்ளேன். என்னைப் பின்பற்றி பல நாட்டவரும் தொழுதுள்ளனர். தலையில் தொப்பி இல்லாத எனக்கு அங்கு எந்த ஆட்சேபணையும் வரவில்லை.

எனவே அழகிய இஸ்லாமிய மார்க்கத்தை நமது பழக்க வழக்கங்களை முன்னிலைப்படுத்தி அதன் அழகிய மற்ற செயல்களை பின்னோக்கித் தள்ளாமல் பார்த்துக் கொள்வோம். மிக இலகுவாக பின்பற்றத்தக்க மார்க்கமான இந்த இறை மார்க்கம் சொல்லும் அழகிய வழி முறைகளை மாற்றாரிடம் எடுத்துச் செல்வோம். இறைவன் சொன்ன வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம் என்று உறுதிபூணுவோம்.



2 comments:

Unknown said...

PJ யும் பெரும்பாலான நேரத்தில் தொப்பி அணிந்துதானே இருக்கிறார்..? அப்படியானால், இந்த அளவுகோள் அவருக்குப் பொருந்தாதா..?

தொப்பி அணிவது, யூதர்களின் கலாச்சாரம்; யூதர்களின் பழக்கம் என்கிறீர்கள்.

இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்து முடிவுக்கு வாருங்கள், please..!

Anonymous said...

சுவனம் சார், உங்களுடைய மதம் மற்றும் பல பழக்க வழக்கங்கள் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இருந்து காப்பி அடித்தது தானே. இத மட்டும் புதுசா சொல்றிங்க. யூதர்களிடம் இருந்து காப்பி அடித்ததால் தொப்பி போட கூடாதென்றால், உங்கள் சுன்னத்து செய்வது கூட யூதர்களின் பழக்கம் தான். அதையும் நிறுத்தி விடலாமே . உங்களை தாடி வைக்க சொன்னது கூட யூதர்களை பார்த்து தானே. அதாவது அவர்கள் தாடி மற்றும் மீசை வைத்திருப்பதால் வித்தியாசப்படுத்த நீங்கள் மீசையை விட்டுவிட்டு தாடி மட்டும் வைத்துக் கொள்கிறீர்கள். படத்தில் பாருங்கள் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது சுவற்றில் முட்டிகொள்கிறார்கள் நீங்கள் தொழுகையில் தரையில் முட்டி கொள்கிறீர்கள்.

//யூதர்களின் ஒவ்வொரு செயல்களையும் தவறாமல் காப்பி அடிக்கும் நம் நாட்டு இந்துத்வாவாதிகளும் இதே காரியத்தை செய்கின்றனர். //

ஹா ஹா ஹா, கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க அண்ணே யாரு யூதர்களை அதிகமா காப்பி அடிக்கிறது என்று. அடிக்கடி உங்கள் குருவி மண்டை புத்திய காட்டாதீங்க.

//யூதர்களின் ஒவ்வொரு செயல்களையும் தவறாமல் காப்பி அடிக்கும் நம் நாட்டு இந்துத்வாவாதிகளும் இதே காரியத்தை செய்கின்றனர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ள அனைவரும் தொப்பி அணிவது கட்டாய கடமையாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். //

அய்யோ, அய்யோ ... ஏனுங்க உலகம் எல்லாம் இருக்கிற போலீஸ்காரங்க , ராணுவம், இது மாதிரி இருக்கிறவங்க எல்லாம் தொப்பி அணிவது கட்டாயம் தான். அவங்க எல்லாம் யூதர்களோட பழக்கத்தை காப்பி அடிச்சி தான் பண்றாங்களா. உங்களோட ஒரே நகைச்சுவை தான் பொங்கல்