Followers

Monday, November 11, 2019

600 ரியால் சம்பளத்தில் 10 வருடங்கள் சந்தோஷமாக!

600 ரியால் சம்பளத்தில் 10 வருடங்கள் சந்தோஷமாக!
சென்ற வெள்ளிக் கிழமை (08-11-2019) அன்று முனியாண்டி என்ற தோழரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சவுதி வந்துள்ளார். சிவ கங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர். தேவர் சமூகத்தை சேர்ந்தவர். சவுதி வந்தவுடன் இங்குள்ள நடைமுறைகள் இவருக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. தொழுகைக்கு வியாபார தளங்கள் மூடப்படுவதும், மக்கள் பெரும்பாலானவர்கள் நேர்மையாளர்களாகவும் இறை நம்பிக்கை உடையவர்களாக இருப்பதும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 10 ம் வகுப்பு வரை படித்த இவர் குர்ஆனை படிக்க ஆசைப்பட்டுள்ளார். நண்பர்கள் மூலமாக குர்ஆன் கிடைக்கிறது. குர்ஆனை ஆழ்ந்து படிக்கிறார். தெளிவு கிடைக்கிறது. அழைப்பு வழி காட்டல் மையம் (தாஃவா சென்டர்) மூலமாக இஸ்லாத்தை தழுவுகிறார். தனது நிலையை தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்கிறார்.
கணவனின் வேண்டுகோலுக்கு இணங்க இஸ்லாத்தை புரிந்து முஸ்லிம் ஆகிறார் அவரது மனைவி. ஆனால் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி விட்டதால் அவர்களாக விரும்பி வரட்டும் என்று விட்டு விட்டார். முனியாண்டி என்ற தனது பெயரை முனீர் என்று மாற்றிக் கொண்டார்.
பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்து கொடுத்துள்ளார். மூத்த மகன் பாலி டெக்னிக்கில் எலக்ட்ரீஷியனாக பட்டம் பெற்று தற்போது துபாயில் வேலையில் உள்ளார். இளைய மகன் பிஎஸ்எஸி முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார்.
சகோதரர் முனீரிடம் கம்பெனி சம்பளம் போன்றவற்றை பற்றி பேச்சுக் கொடுத்தேன். 'நான் வந்ததிலிருந்து 600 ரியால் சம்பளம்தான். சென்ற மாதம் தான் 100 ரியால் கூட்டியுள்ளார்கள்' என்றார்.
'600 ரியாலில் எப்படி குடும்பத்தை ஓட்டுகிறீர்கள்? சிரமமாக இல்லையா?' என்று கேட்டேன்.
'நான் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்திருந்தால் சிரமப்பட்டிருப்பேன். நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை முழுவதும் படித்துள்ளேன். முழு அரபுலகுக்கும் சக்ரவர்த்தியாக இருந்தவரின் எளிய வாழ்க்கையை நானும் கடை பிடித்தேன். எனது மனைவிக்கும் அறிவுறுத்தினேன். சில பார்ட் டைம் வேலைகளை பார்த்து எனது செலவுகளை சரி செய்து கொள்வேன். எனது சம்பளத்தை அப்படியே ஊருக்கு அனுப்பி விடுவேன். எனது மனைவியும் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தக் கூடியவர். இன்று வரை எனது வாழ்வு எந்த சிக்கலும் இல்லாமல் ஓடுகிறது.'
'உங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்னீர்களா?'
'நேரிலும், தொலை பேசியிலும் எப்போதும் இதைப் பற்றித்தான் சொல்லி வருவேன். நான் பெற்ற இந்த இன்பம் எனது பிள்ளைகளும் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். நீங்களும் அவர்களுக்கு நேர் வழி கிடைக்க பிராரத்தியுங்கள்.'
'கண்டிப்பாக... உங்களைப் போலவே அவர்களுக்கும் நேர் வழியை இறைவன் காட்டுவானாக! 'ஹஜ், உம்ரா வெல்லாம் செய்து விட்டீர்களா?'
'ஓ... தாஃவா சென்டர் மூலமாக அழைத்து சென்றார்கள். கஃபாவில் அருகில் நின்று தொழுதது எனது வாழ்வில் மறக்க முடியாத நாள்.முன்பு எனது கிராமத்து கோவில்களில் கூட இந்த அளவு நெருக்கமாக உரிமையோடு நின்றது கிடையாது. '
தமிழகத்தின் ஒரு குக் கிராமத்தில் பிறந்த ஒருவரின் வாழ்வை நபிகள் நாயகத்தின் வாழ்வு எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். இவரைப் போலவே இவரது குழந்தைகளும் அவர்களாக விளங்கி நேர் வழியை பெறுவார்களாக!
-----------------------------------------------------
ஆதமின் மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்! மேலும், உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 7:31)
----------------------------------------------------
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள் : “யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார்.”
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : முஸ்லிம் 1903


1 comment:

Dr.Anburaj said...

சரியான நாட்டுப்புறம் .விபரங்கள் அறியாதவா்.
சவுதி நாட்டு போா் விமானங்கள் யேமனில் வீசும் குண்டுகளின் எண்ணிக்கை தெரியாத அப்பாவி இவர்.
பசும் பொன் முத்துராமலிங்கனாா் அவர்களை முறையாக படிக்காதவா்.பாவம்.