Followers

Monday, November 11, 2019

அவசியம் முழுதும் படிக்க வேண்டிய பேட்டி..!

அவசியம் முழுதும் படிக்க வேண்டிய பேட்டி..!

நன்றி : வரலாற்று பேராசிரியர் கருணானந்தன்.

நன்றி : பிபிசி தமிழ்.

"அயோத்தி நிலத்தகராறு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அறிவியல் ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக விமர்சிக்கிறார் வரலாற்று பேராசிரியர் கருணானந்தன். வரலாற்று ரீதியான இந்த வழக்கில் தொன்ம கதைகளை கொண்டு தீர்ப்பளித்ததை ஒப்புக்கொள்ள முடியவில்லை" என்கிறார் அவர்.
அவரது பேட்டி விவரம்:
ஒரு வரலாற்று பேராசிரியராக அயோத்தி நிலத்தகராறு வழக்கின் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்த தீர்ப்பு சில அச்சங்களையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மசூதியில் அத்துமீறி நுழைந்தது தவறு, அங்கு சிலை வைத்தது தவறு, மசூதியை இடித்தது தவறு என எல்லாவற்றையும் கண்டித்துவிட்டு இறுதியாக நிலத்தை இந்துகளுக்கு என்றும் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் என்றும் கூறுவதை எங்களை போன்ற வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ராமர் அங்கு பிறந்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்றும், அங்கு ராமர் கோயில் இருந்தது என்பதற்கான ஆதாரம் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்கிறது. பின்னர் அந்த இடத்தில் அரசு ராமர் கோயில் கட்ட உத்தரவிடுகிறது. ஏன் மசூதி கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கவில்லை? ஒரு மதச்சார்பற்ற அரசு ஒரு மதத்திற்கு சார்பாக கோயில் கட்டும் பணியை எவ்வாறு மேற்கொள்ளலாம்? அத்துமீறி செயல்பட்டவர்களுக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்ற கருத்தியலுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.
சுமார் 1,045 பக்கம் தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பல்வேறு தொல்லியல் சான்றுகளை நம்பியுள்ளது என குறிப்பிடுகிறார்கள். மசூதிக்கு கீழே ஒரு கட்டுமானம் இருந்ததற்கான சான்றுகள் இருந்தது என்றும் பாபர் மசூதியில் 1857க்கு முன்பாக தொழுகை நடந்ததற்கான சான்றுகள் இல்லை என்றும் கூறுகிறார்கள்.
தாஜ்மகால், செங்கோட்டை போன்ற கட்டடங்களை தோண்டினால் வேறு ஏதாவது கிடைக்கலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை விட, இந்த சொத்து யாரிடம் தற்போது உள்ளது என்பதுதான் சொத்துரிமை பிரச்னைகளில் முக்கியமானது. ஒரு கட்டுமானத்தை இடித்துவிட்டு, மக்கள் வழிபடும் இடத்தை தோண்டி நடத்தப்படுவது தொல்லியல் ஆய்வு அல்ல. ஒவ்வொரு கட்டுமானத்திற்கு கீழேயும் வேறு ஏதாவது பொருட்கள் கிடைக்கலாம். இருக்கின்ற இடத்தை இடித்துவிட்டு ஆய்வு நடத்துவது என்பது உலகில் வேறு எங்கும் நடைபெறுவதில்லை.
அகழ்வாய்வில் கூட ராமர் கோயில் இருந்தது என நிரூபிக்க முடியவில்லை. அந்த இடத்தில், ஒரு கட்டுமானம் இருந்தது. அது சமண கோயிலாக கூட இருக்கலாம், பௌத்த கோயிலாக இருக்கலாம். அல்லது அந்த உள்ளூர் மக்களின் வழிபாட்டு இடமாக இருக்கலாம். அல்லது ஓர் அரண்மனையாக கூட இருக்கலாம். இந்த வழக்கின் சாராம்சமே இந்த சொத்து யாருடையது என்பதுதான், இந்த இடத்திற்கு அடியில் என்ன இருக்கிறது, என்ன விதமான கட்டுமானம் இருக்கிறது என்பது இல்லை. என் வீட்டுக்கு கீழேகூட, யாராவது ஒருவர் அவரது மூதாதையரின் சமாதி உள்ளது எனக்கூறி என் சொத்தை இப்போது கேட்டால் அதனை எப்படி நியாயப்படுத்துவது?
அயோத்தி வழக்கில் அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லை என நீங்கள் கருதுவது ஏன்?
ராமர் பிறந்த இடம் என கூறுவதில் என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது? முனிசிபல் ரெகார்ட் இருக்கிறதா? ராமர் என்பது ஓர் அவதாரம். பிற அவதாரங்களாக சொல்லப்படும் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம் ஆகிய அவதாரங்களுக்கு பிறப்பிடம் சொல்லமுடியுமா? அடுத்ததாக கிருஷ்ணரை சர்ச்சைக்குள்ளாக்குவார்கள் என தோன்றுகிறது. தொன்மங்களை வரலாற்று ஆதாரங்களாக மாற்றக்கூடாது.
ராமர் பிறந்தது திரேதா யுகம் என்கிறார்கள். மனுஸ்மிருதியின் அடிப்படையில் நான்கு யுகங்களில் தற்போது கலியுகத்தில் நாம் இருக்கிறோம் என்கிறார்கள். அதாவது திரேதா யுகம் என்பது சுமார் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு என்றும், அப்போதுதான் ராமர் இருந்தார் என்றும் சொல்கிறார்கள். மனிதன் பிறந்து கற்காலம், உலோக காலம் என அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, மனித இனத்தின் வரலாறு சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் தொடங்குகிறது என்பது உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இதற்கு முன்னர் ராமர் இருந்தார், அவர் இங்குதான் பிறந்தார் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொண்டு, அதனை வைத்து நவீன காலத்தில், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் ஒரு வழக்கை அணுகமுடியும்?
பைபிள் இருப்பதால், ஆதாம்,ஏவாள் ஆகியோர் இருந்ததாக வரலாறு சொல்லமுடியுமா? அதனை ஐரோப்பிய வரலாற்றில் ஆதாரம் என யாரும் இணைக்கவில்லை. நான் இந்து மதத்தை வெறுப்பவன் கிடையாது, இஸ்லாமியரும் இல்லை. உண்மையான அறிவியல் ஆதாரங்களை வைத்து தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதை புரிந்துகொண்டுபேசுகிறேன்.
இந்தியாவில் பல இடங்களில் நீங்கள் சொல்வது போல புராதன இடங்களுக்கு அடியில் வேறு ஒரு கட்டுமானம் இருக்க வாய்ப்புள்ளதா?
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகம்பரநாதர் கோயில் உள்ளது. அங்கு பௌத்த சிற்பம் எடுக்கப்பட்டது. பௌத்த கல்வெட்டு கூட உண்டு. இன்று பிரபலமாக அறியப்படும் பல இந்து சமயத்தின் சைவ,வைணவ கோயில்கள் சமண, பௌத்த கோயில்களாக இருந்தன என ஆதாரத்துடன் கூறுகிறார்கள். பழனி முருகன் கோயிலில் இருப்பது சமண தீர்த்தங்கரர் சிலை என்கிறார்கள். கேரளாவில் உள்ள கொடுங்கலூர் பகுதியில் உள்ள கோயிலில் இருப்பது பௌத்த சமயத்தை சேர்ந்த தாரா தேவி அல்லது ஜேஷ்ட தேவி என்று கூறப்படுகிறது. சமணர், பௌத்தர்கள் எண்ணிக்கையில் குறைந்திருப்பதால், அவர்கள் அடாவடியாக கோயில்களை இடிக்கமாட்டார்கள் என்பதால், இந்து கோயில்களாக இந்த கட்டுமானங்கள் தொடர்கின்றன. அயோத்தி நிலத்தை இந்துகளுக்கு கொடுத்துள்ளது என்பது பல இடங்களில் சிறுபான்மையினரின் இடங்களை பெரும்பான்மை மக்கள் எடுத்துக்கொள்வதற்கு, அதற்காக வன்முறையை அவர்கள் கையாண்டாலும், எந்த பிரச்சனையையும் அவர்கள் சந்திக்க மாட்டார்கள் என்பதை ஊக்குவிக்கிறது.
உச்சநீதிமன்றம் அயோத்தி நிலதகராறு வழக்கில் கொடுத்துள்ள தீர்ப்பை பலரும் மதிப்பதாக சொல்கிறார்கள். பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. அதை பற்றி உங்கள் கருத்து?
இந்த தீர்ப்பை பெரும்பாலான இந்துக்கள் கூட வரவேற்றதாக தெரியவில்லை என நான் எண்ணுகிறேன். இஸ்லாமியர்கள் தீர்ப்பை மதிப்பதாக சொல்கிறார்கள் ஆனால் இந்த தீர்ப்பால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என இருதரப்பினரும் கருதவில்லை. ஒரு தரப்பு இஸ்லாமியர்கள் மீண்டும் விசாரணை நடைபெறவேண்டும் என்கிறார்கள். இந்த தீர்ப்பு நியாயமான தீர்ப்பு என சொல்லவில்லை. வன்முறை வெடிக்கக்கூடாது என்ற அச்சத்தில்தான் பலரும் அமைதி காப்போம் என்று சொல்கிறார்கள். நீதி வென்றுவிட்டது என குரல்கள் ஒலித்ததாக தெரியவில்லை. அச்சத்தினால் ஏற்படும் அமைதியை எப்படி ஏற்கமுடியும்?
அயோத்தி பிரச்சனை போல பிற நாடுகளில் ஏதாவது மத ரீதியான கட்டுமானத்திற்கு உரிமை கோரி நடத்தப்பட்ட வழக்கு உள்ளதா?
பாகிஸ்தானில் சீக்கியர்களின் கட்டுமானத்திற்கு இஸ்லாமியர்கள் உரிமை கோரினார்கள். அயோத்தி வழக்கு போலவே ஆங்கிலயேர்கள் காலத்தில் இருந்து அங்கு வழக்கு நடந்தது. லாகூர் நீதிமன்றம் விசாரித்தது, பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு விசாரணை வந்தபோது பலரும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும் என நினைத்தார்கள். ஆனால் இஸ்லாமிய மதத்தின் ஆட்சி நடைபெறும் பாகிஸ்தானில் அந்த சொத்து சீக்கியர்களிடம் உள்ளது, புராதன கதைகளை நம்பி சொத்து உரிமைகளை மாற்றமுடியாது என கூறி சீக்கியர்களுக்கு சொத்தின் மீது உரிமை கொடுக்கப்பட்டது. ஷாஹீத் கஞ்ச் குருத்வாரா கட்டடம் இன்றும் சீக்கியர்கள் வழிபடும் தலமாக திகழ்கிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என சொல்லிக்கொண்டு, தற்போது ஒரு சார்பினருக்கு தீர்ப்பு வழங்கி, கோயில் கட்டவேண்டும் என அரசாங்கத்திற்கு ஆணையிடுவது தவறு. அதே நீதிமன்றம் ஏன் ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் இடத்தில், மசூதி கட்டப்படவேண்டும் என ஏன் சொல்லவில்லை?


1 comment:

Dr.Anburaj said...


வரலாறு தெரியாத வரலாற்று அறிஞர்.23-ம் புலிகேசி.
கை தட்டலுக்காக கிடைக்கும் சன்மானத்திற்கு தக்க இவர்கள் பேசுவார்கள்.
இவரது பேச்சுக்கள் யு டியுப்பில் நிறைய கேட்டிருக்கின்றேன்.
சாரமற்ற விமா்சனம்.
முற்றிலும் மொய்கவருக்காக பேசப்பட்ட உரை.
குப்பையில் போடுங்கள்.