Followers

Tuesday, February 10, 2015

எனது வாழ்வின் மறக்க முடியாத பள்ளி வாசல்!



ஒவ்வொருவருக்கும் வாழ்வில் மறக்க முடியாத இடங்கள் என்று சில இருக்கும். அந்த வகையில் எனது வாழ்விலும் மறக்க முடியாத இடத்தை இந்த பள்ளி வாசல் பெற்றுள்ளது. எனது அலுவலகத்துக்கு பின்புறம் இந்த பள்ளி அமைந்துள்ளது. வாழ்நாளில் அதிக நாட்களை இந்த பள்ளியில் செலவழித்துள்ளேன். தமிழகத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியை தவிர்த்து அதிகம் தொழுதுள்ளது இந்த பள்ளியாகத்தான் இருக்கும்.

சில நேரங்களில் வேலை அதிகமாகி விட்டால் கூட்டு தொழுகைக்கு சற்று தாமதமாக சென்று விடுவதுண்டு. அது போன்ற நேரங்களில் கூட்டு தொழுகையானது முடிந்து விடும். எனவே பின்னால் தாமதமாக வந்தவர்கள் அவர்களுக்குள் ஒரு தலைவரை ஏற்படுத்திக் கொண்டு தொழுவது வழக்கம். தனியாக தொழுவதை விட இவ்வாறு கூட்டாக தொழுவது பல மடங்கு நன்மை பயக்கும் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் சேர்ந்து தொழுவதையே விரும்புவர். ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இவ்வாறு தாமதமாக வந்தவர்கள் பல முறை கூட்டாக நின்று தொழுவதை சவுதியின் ஒவ்வொரு பள்ளி வாசலிலும் தினமும் பார்கலாம்.

அந்த வகையில் நேரம் கழித்து செல்லும் போது தொழுகைக்கு வருபவர்களில் பலர் என்னை கை காட்டி தொழ வைக்க சொல்வர். சில நேரங்களில் மறுத்தாலும் பல நேரங்களில் கட்டாயப்படுத்தி நிறுத்த வைக்கப்படுவேன். இவ்வாறு கிட்டதட்ட நூறு தடவைக்கு மேல் நான் இந்த பள்ளியில் தொழ வைத்திருப்பேன். என்னை பின் பற்றி சவுதி, எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், சூடான், ஏமன் போன்ற நாட்டைச் செர்ந்த முஸ்லிம்கள் தொழுதுள்ளனர். நான் யார்? நான் எந்த மொழி? எந்த நாட்டைச் சேர்ந்தவன்? எனது நிறம் என்ன? எந்த குலத்தைச் சேர்ந்தவன்? என்றெல்லாம் அந்த மக்கள் பார்கவில்லை. நான் ஒரு முஸ்லிம் என்றுதான் பார்கிறார்கள். நான் புரோகித படிப்பு படித்துள்ளேனா? நான் புரோகிதனா? புரோகிதன்தானே தொழ வைக்க வேண்டும்? என்று அந்த மக்கள் என்னை தடுத்து நிறுத்தவில்லை. இஸ்லாம் எங்களுக்கு கொடுத்த மிகப் பெரிய பாக்கியங்களில் இந்த கூட்டுத் தொழுகையும் ஒன்று. இந்த கூட்டு தொழுகைதான் இனவெறி, மொழி வெறி, நிற வெறியை முஸ்லிம்களிடத்தில் ஒழித்துள்ளது என்றால் மிகையாகாது.

10 வருடத்துக்கு முன்பு நான் தமிழகம் சென்றிருந்த போது எங்கள் ஊரில் உள்ள பள்ளியில் தொழுகைக்கு சற்று தாமதமாக சென்றேன். நான் படித்த பள்ளிக் கூடத்துக்கு அருகில் உள்ள பள்ளி வாசல் அது. என்னைப் போலவே மூன்று பேர் தாமதமாக தொழுகைக்கு வந்தனர். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து கூட்டாக தொழுக ஆரம்பித்தோம். சிறிது நேரம் கழித்து இன்னும் மூன்று பேர் வரவே அவர்களும் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். தொழுகை முடிந்தவுடன் பள்ளியின் இமாம்(தலைவர்) கோபத்தோடு என்னை நோக்கி...

'இரண்டாவது ஜமாத்(கூட்டு தொழுகை) வைப்பது ஹனபி மத்ஹபின்(சாதி) படி தடை செய்யப்பட்டது. இது தெரியாதா உங்களுக்கு?'

'நான் ஹனபியை பின்பற்றவில்லை. நான் பின் பற்றுவது நபிகள் நாயகத்தை'

'என்ன இப்படி பேசுகிறீர்கள்? லால் பேட்டை மதரஸாவிலிருந்து இரண்டாவது ஜமாத் வைப்பது தடுக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கை வந்துள்ளது. அதன் காப்பி என்னிடம் உள்ளது'

'லால் பேட்டை மதரஸாவின் கருத்தை எல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை. நான் பின் பற்றுவது குர்ஆனையும், நபி மொழிகளையும். அதில் இரண்டாவதாக கூட்டாக தொழுவது தடை செய்யப்பட்டுள்ளதா? பல மடங்கு நன்மை என்றல்லவா வருகிறது?'

வாக்கு வாதம் முற்றவே அங்கு தொழுகைக்கு வந்தவர்கள் எல்லாம் எங்களை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

'அப்போ லால்பேட்டை மதரஸா கருத்தை ஓரத்தில் வைக்கச் சொல்கிறீர்களா?'

'நான் நபிகள் நாயகத்தின் வழிமுறையை சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் லால் பேட்டை அறிக்கையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எது முக்கியம்?

'எனக்கு லால்பேட்டை மதரஸா அறிஞர்களின் கருத்துதான் முக்கியம். அதன்படிதான் இந்த பள்ளி இயங்குகிறது'

'நபிகள் நாயகத்தை விட லால் பேட்டை மதரஸாவின் அறிக்கைதான் உங்களுக்கு முக்கியம் என்றால் அதனை தூக்கி குப்பையில் வீசுங்கள்''

'நான் ஏன் வீச வேண்டும். உங்கள் கொள்கையை தூக்கி குப்பை தொட்டியில்..........' என்று சொன்னவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார். கோபத்தில் நபிகள் நாயகத்தை அல்லவா சொல்கிறோம் என்ற நினைப்பு வரவே 'எல்லாம் இந்த 10 வருடமாகத்தான் குளறுபடிகளே! யாரெல்லாம் மார்க்கம் பேசுவது என்று வரைமுறையே இல்லாமல் போய் விட்டது' என்றார் கோபமாக.

குரல் இருவருக்கும் உயர்ந்து வருவதைப் பார்த்து தொழ வந்தவர்கள் இரண்டு பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

எனது மாமனாரிடம் சென்று அந்த இமாம் 'மருமகப் பிள்ளையை கண்டித்து வையுங்கள். எல்லோர் முன்னாடியும் என்னோடு சண்டைக்கு வந்து விட்டார். என்னை அவமானப்படுத்தி விட்டார்' என்று குறை பட்டுக் கொண்டுள்ளார்.

'அவர்கிட்டே மார்க்க விஷயமா என்னால எதுவும் பேச முடியாது. நான் ஒரு கேள்வி கேட்டா திருப்பி 10 கேள்வி என்கிட்டே கேட்கிறார். எனக்கு பதில் சொல்லவும் தெரியல. அவரு 2 மாதம் அல்லது 3 மாதம் இருந்து விட்டு சவுதி சென்று விடுவார். அவரிடம் பிரச்னை வைத்துக் கொள்ளாதீர்கள்.' என்று ஆலோசனை வழங்கி உள்ளார்.

'மருமகப் பிள்ளையை விட்டுக் கொடுத்துக்க மாட்டீங்களே' என்று கலாய்த்துக் கொண்டாராம் அந்த இமாம். :-). இந்த செய்தி என் மனைவி மூலமாக என்னிடம் வந்தது. :-)

அந்த இமாமுக்கும் தெரியும் இவ்வாறு கூட்டாக தொழ வைப்பதுதான் சிறந்தது என்று. ஏன் தடுக்கிறார் என்றால் இவ்வாறு எல்லோரும் தொழ வைக்க ஆரம்பித்தால் அவருக்கு மதிப்பில்லாமல் போய் விடும். அவருக்கு வேலை போய் விடும். இதன் காரணமாகத்தான் அவர் இரண்டாவதாக நடத்தப்படும் கூட்டுத் தொழுகைகளை தடுக்க முயற்சிக்கிறார். இஸ்லாமிய சட்டங்களைப் பொருத்த வரை புரோகிதத்துக்கு இடமே இல்லை. நன்கு ஓதத் தெரிந்த இஸ்லாமிய சட்டங்களை ஓரளவு தெரிந்த யாருமே தொழ வைக்கலாம். மதரஸா சென்று ஆலிம் பட்டம் வாங்கியவர்தான் தொழ வைக்க வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. சொல்லப் பொனால் உலகமெங்கும் புரோகிதத்தை ஒழிக்க வந்ததுதான் இஸ்லாம் என்றால் மிகையாகாது.

என்னை தடுத்த அந்த மார்க்க அறிஞரின் மேல் கோபம் வரவில்லை. பரிதாபமே ஏற்பட்டது. அற்ப உலக சுகத்துக்காக நபியின் ஒரு நடைமுறையை தடை செய்து நாளை மறுமையில் இறைவனின் முன்னால் குற்றவாளியாக்கப்பட்டு தண்டிக்கப்படுவாரே என்ற வருத்தமும் ஏற்பட்டது.

நான் தொழ வைத்தால் எந்த எதிர்பும் சொல்லாமல் பார்த்துக் கொண்டு சென்ற மதினா பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் வாங்கிய அந்த சவுதி இமாமையும், கூட்டுத் தொழுகையை தடுத்த எங்கள் ஊர் இமாமையும் ஒப்பிட்டு பார்த்தேன். மறுமையில் எங்கள் ஊர் இமாமின் இழிந்த நிலைக்காக வருத்தப்பட்டு அவருக்கு நேர் வழி கிடைக்கட்டும் என்று பிரார்தித்தேன்.

அந்நிய நாடான சவுதியில் 100 தடவைக்கு மேல் தொழ வைத்த பொது வராத எதிர்ப்பு சொந்த மண்ணில் ஒரு முறை தொழுததற்காக பிரச்னையானது. ஆனால் தற்போது நிலைமை நிறைய மாறியுள்ளது. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல இன்று தனியாக கூட்டு தொழுகை நடத்தினால் யாரும் தடுப்பதில்லை. அது நபிகள் நாயகத்தால் வலியுறுத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்பதை மக்களும் விளங்கிக் கொண்டனர். மார்க்க அறிஞர்களும் வேறு வழியின்றி எதிர்ப்பை குறைத்துக் கொண்டனர். அதே போல் தொப்பி போடாமல் பள்ளிக்கு வந்தால் முன்பெல்லாம் தடுத்து நிறுத்தப்படுவர். தற்போது அந்த கட்டுப்பாடுகளெல்லாம் உடைத்தெறியப்பட்டுள்ளது.

எல்லா புகழும் இறைவனுக்கே!

2 comments:

Anonymous said...

poda poram poku

Unknown said...

Sabash..........