டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் "Masters in Divinity" பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சுமார் அறுபது கட்டுரைகள் உளவியலிலும், சுமார் 150 கட்டுரைகள் அரேபிய குதிரைகளின் வரலாற்றை பற்றியும் வெளியிட்டுள்ளார். United Methodist சர்ச்சில் உதவிப் பாதிரியாராக இருந்தவர். அமெரிக்க முஸ்லிம்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்ததில் மிகப்பெரும் பங்காற்றியவர்.
இறைவன், தான் நாடுவோரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரும் ஒவ்வொரு விதமும் ஆச்சர்யமூட்டுபவை, அழகானவை. அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக முஸ்லிம்களின் நட்பு கிடைத்து, அவர்களால் குர்ஆனை ஆராயத் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் டர்க்ஸ்.
இஸ்லாம் நோக்கிய தன்னுடைய பயணத்தில் எப்படியான மனப்போராட்டத்தை தான் சந்தித்தேன் என்பதை நெகிழ்ச்சியுடன் பின்வருமாறு விவரிக்கிறார் டர்க்ஸ்..
"ஈசா (அலை) அவர்களின் தெய்வத்தன்மையில் என்றுமே நம்பிக்கை கொண்டிருந்ததில்லை. இறைவன் ஒருவனே என்று நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்று நம்புகிறேன். ஐந்து வேலை தொழுகிறேன். நோன்பு நோற்கிறேன்...
இப்படி முஸ்லிம்களை போன்று நடந்துக் கொள்கிறேன். ஆனால் முஸ்லிமில்லை. இன்னும் நான் கிருத்துவன் தான். கேட்வர்களுக்கு இது நிச்சயம் குழப்பத்தை தரும். ஆனால் என் மனப்போராட்டங்கள் இப்படித் தான் இருந்தன.
என்னைப் பார்த்து "நீங்கள் முஸ்லிமா?" என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், ஒரு ஐந்து நிமிடங்களாவது ஏதாவது பேசி தலைப்பை திசை திருப்பிவிடுவேன். கடைசி வரை அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலாக அது இருக்காது.
மத்திய கிழக்கில் எங்களது பயணம் கடைசி கட்டத்தை எட்டியிருந்தது. ஒரு பாலஸ்தீன முதியவருடன், பாலஸ்தீன அகதிகள் முகாமில், ஒரு குறுகிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்த முதியவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. அப்போது எதிரே ஒருவர் வந்தார். அவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.
எதிரே வந்த அந்த சகோதரர் சலாம் சொன்னார், நான் பதிலளித்தேன். தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்டார். எனக்கு அரபி சிறிதளவே அப்போது தெரியும். ஒரு சில வார்த்தைகள் பேசுவேன். மற்றவர்கள் பேசினால் சிறிதளவு புரியும். அந்த சிறிதளவு அரபி ஞானம் போதும், அவர் கேட்ட கேள்வியை புரிந்துக்கொள்ள.
ஆம். அதே கேள்விதான்.
"நீங்கள் முஸ்லிமா?"
இப்போது என்ன சொல்வது? ஏதாவது சொல்லி மழுப்பக் கூட முடியாது. ஏனென்றால் நாங்கள் மூவர் தான் இருக்கிறோம். மற்ற இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அவர்கள் மொழியிலேயே மழுப்பலாம் என்றால், எனக்கு அரபி சரளமாக தெரியாது.
எனக்கு தெரிந்த சிறிதளவு அரபியில் தான் நான் பதில் சொல்லியாக வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை. என்னிடம் இப்போது இரண்டே இரண்டு பதில்கள்தான், ஒன்று "நாம்" (N'am, அரபியில் "ஆம்" என்று அர்த்தம்), மற்றொன்று "லா" ( La, "இல்லை" என்று அர்த்தம்).
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை இப்போது நான் சொல்லியாக வேண்டும், வேறு சாய்ஸ் இல்லை. இப்போது குர்ஆனின் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்தது,
'திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவன்'
ஆம், அது நிச்சயமான உண்மை. இப்போது என்னை அவன் வசமாக சிக்க வைத்துவிட்டான். என்ன பதில் சொல்வது?அல்ஹம்துலில்லாஹ்...சில நொடிகள் பதற்றத்திற்கு பிறகு, இறுதியாக அந்த வார்த்தை வெளியே வந்தது....
'நாம்'.......................
இதே காலக்கட்டத்தில் என்னுடைய மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ்..."
1 comment:
சு..னில் பதிவிட்ட எனது விமா்சனங்கள் பதிலளிக்க ஆளில்லாமல் சவால்கள் எதிா் கொள்ளப்படாமல் உள்ளது என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
Post a Comment