Followers

Monday, January 05, 2015

வேர்களைத் தேடும் சில இஸ்லாமியர்கள்!

வேர்களைத் தேடும் சில இஸ்லாமியர்கள்!

சகோதரர் இமாம் ஹூசைன் சம்சுதீன்!

//தயவு செய்து, உங்களுடைய http://suvanappiriyan.blogspot.com/2015/01/blog-post_97.html பக்கத்தில் உள்ள பதிவை முடிந்தால் நீக்கி விட்டு, இங்கு விவாதிக்க முயற்சியுங்கள் சகோ. எனக்கு அங்கு பின்னூட்டம் இடுவது கடினமாக இருக்கிறது.//

இன்று அலுவலகத்தில் அதிக வேலை. எனவே உடன் பதில் தர முடியவில்லை. பதில் நீண்டு விட்டதால் தனி பதிவாக தருகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

முதலில் நாம் யாருக்காகவும் நமது வேர் என்ன என்று நிரூபிக்க எந்த அவசியமும் இல்லை சகோதரரே!. நம்மை அரபு நாட்டு இறக்குமதி என்று சொல்லக் கூடிய இந்துத்வாவாதிகளுக்கும் நாம் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற உண்மை தெரிந்தே உள்ளது. அவர்களின் நோக்கம் அதுவல்ல. இஸ்லாத்தின் வளர்ச்சியை கண்டு அச்சப்படுகின்றனர். நாம் பெரும்பான்மையாக ஆகி விட்டால் வர்ணாசிரமக் கோட்பாடு சரிந்து விழுந்து விடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார்கள். அவர்களால் குர்ஆனில் குறை கண்டு பிடிக்க முடியாது. நபிகளாரின் வாழ்க்கையிலும் எந்த குறையையும் காண முடியாது.

எனவேதான் இஸ்லாமிய பெயர்களில் தீவிரவாத செயல்களை செய்து விட்டு பழியை முஸ்லிம்கள் மேல் போடுகிறார்கள். நாம் இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்க மாட்டோம் என்று நெஞ்சறிந்து பொய் சொல்கிறார்கள். நாமெல்லாம் வந்தேறிகள் என்ற கட்டுக் கதைகளையும் பரப்புகின்றனர். ஆனால் இன்றைய இணையம் என்ற வலிமையான சாதனம் உடனுக்குடன் அவர்களின் பொய் முகங்களை ஆதாரத்தோடு வெளிக் கொண்டு வந்து விடுகிறது. நம்மிடம் தினப் பத்திரிக்கை இல்லா விட்டாலும் பிளாக்கர், முகநூல், ட்விட்டர் என்று நமது சகோதரர்கள் தங்களின் திறமைக்கேற்ப தங்களின் வாதங்களை ஆங்காங்கே வைத்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சகோதரர்கள் அனைவரும் நம்மை உடன் பிறவா சகோதரர்களாகத்தான் இன்று வரை பாவித்து வருகின்றனர்.

நான் இந்த மண்ணின் மைந்தன்தான் என்று நிரூபிக்க உங்களின் பழைய வேர்களை தோண்ட ஆரம்பித்தால் அது விபரீதத்திலேயே முடியும். உங்களின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். ஆனால் உங்கள் செய்தியை படிக்கும் சாமான்ய இஸ்லாமியன் தன்னை ஒரு தேவராகவோ, வன்னியனாகவோ, நாடாரகவோ, பார்பனராகவோ, தலித்தாகவோ கருத ஆரம்பித்தால் அங்கு இஸ்லாம் மெல்ல அதன் தனித் தன்மையை இழக்க ஆரம்பிக்கும். 'நான் தேவன்டா..' 'நான் வன்னியன்டா' என்ற திமிர் வாதம் மேலோங்க ஆரம்பிக்கும். வேர்களை இன்று வரை விடாமல் பிடித்து வைத்ததால்தான் கிருத்துவம் இந்து மதத்தின் ஒரு பிரிவாக மாறி விட்டது. பவுத்தத்தின் நிலையும் அதுவே. அந்த நிலை இஸ்லாத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? 'குலப் பெருமையையும் மொழி வெறியையும் எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று நமது தலைவர் நபிகள் நாயகம் நமக்கு அழகிய வழிமுறையை காட்டித் தந்துள்ளார் என்பதையும் இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.

நீங்கள் இந்த மண்ணின் மைந்தன்தான் என்பதை நிரூபித்து விட்டால் அடுத்து தீவிரவாதம், அல்லது பெண்ணடிமைத்தனம் என்ற பல்லவியை பாடிக் கொண்டு அதே கூட்டம் உங்களைத் தூற்ற ஆரம்பிக்கும். நாம் யார் என்பதையும் நாம் இந்த மண்ணின் மைந்தன்தான் என்பதையும் நம்மை விட நம் எதிரிகளான இந்துத்வா வாதிகள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். எனவே இவர்களுக்காகவெல்லாம் உங்களின் வேர்களை தேடி சாதி என்ற படுகுழியில் வீழ்ந்து விடாதீர்கள் என்று அன்போடு எச்சரிக்கிறேன்.

குஜராத் கலவரத்தை உங்கள் வாதத்துக்கு ஆதாரமாக வைக்கிறீர்கள். அங்கு முஸ்லிம்கள் காங்கிரஸையே நம்பியிருந்ததால் இழப்பை சந்தித்தார்கள். ஆனால் தமிழகம் அப்படி அல்ல. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாபுலர் ஃப்ரண்ட், முஸலீம் லீக் என்று பலமான அஸ்திவாரத்தோடு இஸ்லாமியர்கள் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு திறம்பட அவரவர் வசதிக்கேற்ப செயலாற்றுகின்றனர். தமிழகமெங்கும் கிளைகள் தங்களின் அன்றாட சேவைகளை எந்த தொய்வுமின்றி செய்து வருகின்றன. ஒரு சிறிய சம்பவமும் பொது தளத்துக்கு உடன் வந்து விடும். குற்றவாளிகள் உடன் அடையாளம் காணப்படுவர். எனவே குஜராத்தையும் தமிழகத்தையும் இதில் ஒப்பிட வேண்டாம். இறைவனின் துணை கொண்டு அனைத்து சூழ்ச்சிகளையும் நாம் முறியடிப்போம்.

எனவே இதற்கெல்லாம் பயந்து கொண்டு நஜீர் அஹமது நாடார், ஹூசைன் வன்னியர், காதர் பாப்பான், தலித் அஹமது என்றெல்லாம் போட்டு குழப்பி :-) பார்பன சூழ்ச்சிக்கு பலியாகி விட வேண்டாம் என்று மீண்டும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஒரு தமிழ்ப் புலவரும் உங்களுக்கு அழகிய பதிலைத் தருகிறார் .....

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 129)
-கணியன் பூங்குன்றனார்

பொருள்
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.







1 comment:

C.Sugumar said...

தவறு.இந்திய முஸ்லீம்கள் தங்களுக்கென ஒரு கலாச்சார அடையாளத்தை உருவாக்க வேண்டும்.அரேபியனாக வாழ முயலக் கூடாது.அரேபியனாக அரேபியன் போல் அரேபியனைக்காப்பி அடிப்பவனாக வாழ்தல் முட்டாள்தனம்.முஸ்லீம் பெண்கள் நெற்றிக்கு பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.கத்தோாிக்க கிறிஸ்தவ பெண்கள் பொட்டு வைத்துக் காள்வதால் என்ன கெட்டு போய்விட்டது.