Followers

Tuesday, December 29, 2015

தலித் மக்கள் மீதான தாக்குதலில் 7 பேர் கைது:



கர்நாடகத்தில் தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியதில் கர்ப்பிணி உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந் தனர். இது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 22 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டத்தில் துர்விஹால் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நடுவில் தலித் அமைப்பினர் வைத்திருந்த பேன‌ர் மீது, கடந்த 24-ம் தேதி வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தினார். மேலும் அந்த பேனரில் இருந்த அம்பேத்கரின் படத்தையும் அவர் அவமதித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தலித் அமைப்பை சேர்ந்த‌ இளைஞர்கள் மறுநாள் விசாரித்தபோது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, “ஊருக்கு நடுவில் அம்பேத்கரின் பேனரை வைக்கக்கூடாது. மீறி வைத்தால் தலித் மக்களை ஊரை விட்டே விரட்டுவோம்” ஆதிக்க சாதியினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலித் மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கு மாறு துர்விஹால் போலீஸாரிடம் மனு அளித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிக்க சாதியினர் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, அங்குள்ள தலித் காலனிக்குள் நுழைந்து, தலித் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 3 மாத கர்ப்பிணி உட்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 25 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இதையடுத்து 29 பேர் மீது துர்விஹால் போலீஸார் 5 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 22 பேரை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ரெய்ச்சூர் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில், காவல் கண்காணிப்பாளர் சேத்தன் சிங் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பீர் பாஷா தலைமையிலான உண்மை ஆராயும் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விவரம் கேட்டறிந்தனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
30-12-2015

ஒரு சுதந்திர நாட்டில் தனக்கு பிடித்தமான தலைவரின் படத்தை வைக்கக்கூட அனுமதி இல்லை என்றால் ஆதிக்க சாதியினரின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

No comments: