
விகடன் செய்தி : 12.12.15
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த பரிதாபம்!
சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் வசித்து வருபவர் ஜாபர். இவரது மகன் இம்ரான் (17). இவர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். விடுமுறை நாட்களில் தனது தந்தையுடன் சேர்ந்து வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார்.
கடந்த 2ஆம் தேதி சென்னையில் பெய்த கனமழையால் நகரங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. இதில் தாங்கல் பகுதியும் தப்பவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இம்ரான் உள்ளிட்டவர்கள் களம் இறங்கினர். ஒவ்வொருவராக மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, மீட்பு பணியில் இருந்த இம்ரானை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது. வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட இம்ரானை உடனடியாக அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், கை, கால்கள் செயல் இழந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இம்ரான் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து நான்கு நாள் சிகிச்சைக்கு பின்னர், இம்ரான் இன்று அதிகாலை 4.30 மணிக்கு உயிரிழந்தார்.
தன்னுயிரையும் பணயம் வைத்து வெள்ள மீட்பில் ஈடுபட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment