Followers

Sunday, October 14, 2018

ஆரம்ப பள்ளிகளிலேயே மத துவேஷத்தை வளர்க்கும் இந்துத்வா!

ஆரம்ப பள்ளிகளிலேயே மத துவேஷத்தை வளர்க்கும் இந்துத்வா!
டெல்லி வசிராபாத் பகுதி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் இந்து முஸ்லீம் மாணவர்களை தனித்தனியே பிரித்து வைத்து பாடம் நடத்தும் கொடுமை தற்போது தெரிய வந்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கிடைத்துள்ள வசிராபாத் வடக்கு எம்.சி.டி ஆண்கள் பள்ளியின் பதிவேட்டில் மாணவர்களை பின்வருமாறு பிரித்து வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.
IA: 36 இந்துக்கள், IB: 36 முஸ்லீம்கள்
IIA: 47 இந்துக்கள், IIB: 26 முஸ்லீம்கள் and 15 இந்துக்கள், IIC: 40 முஸ்லீம்கள்
IIIA: 40 இந்துக்கள், IIIB: 23 இந்துக்கள் and 11 முஸ்லீம்கள், IIIC: 40 முஸ்லீம்கள், IIID: 14 இந்துக்கள் and 23 முஸ்லீம்கள்
IVA: 40 இந்துக்கள், IVB: 19 இந்துக்கள் and 13 முஸ்லீம்கள், IVC: 35 முஸ்லீம்கள், IVD: 11 இந்துக்கள் and 24 முஸ்லீம்கள்
VA: 45 இந்துக்கள், VB: 49 இந்துக்கள், VC: 39 முஸ்லீம்கள் and 2 இந்துக்கள், VD: 47 முஸ்லீம்கள்
இப்பள்ளியை சார்ந்த ஒருவர் கூறுகையில் “பழைய பள்ளி தாளாளர் ஜூலை 2-ம் தேதி மாற்றலானார். புதிய தலைமையாசிரியர் வரும் வரை ஒரு ஆசிரியரை பொறுப்பாக நியமித்தார்கள். அவர் தான் இம்மாற்றங்களை கொண்டு வந்தார். இதில் மற்ற ஆசிரியர்களை கலந்தாலோசிக்கவில்லை. இதை சில ஆசிரியர்கள் சுட்டி காட்டிய போது கோபத்துடன் அவர்களை வேலையை மட்டும் பார்க்கும்படி கூறிவிட்டார்” என்று தெரிவித்தார்.
சி.பி.சிங் செராவத் என்கிற ஆசிரியர் தான் பள்ளியின் பொறுப்புக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் கூறுகையில் உள்நோக்கத்துடன் இப்பிரிவினை நடக்கவில்லை என நம்மை நம்ப சொல்கிறார். “வேண்டும் என்றே இப்படி பிரிக்கவில்லை. மாணவர்களின் வகுப்பு பிரிவுகளை மாற்றி அமைப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. மாணவர்களுக்கு அமைதி, ஒழுக்கம், மற்றும் படிப்புக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக நிர்வாகம் தான் இப்படி பிரிக்கும் முடிவை எடுத்தது. குழந்தைகள் சண்டையிடுகிறார்கள்” என்கிறார்.
மாணவர்கள் மத அடிப்படையில் சண்டையிடுகிறார்களா என்று கேட்டதற்கு “இந்த வயதில் மதம் குறித்து மாணவர்களுக்கு தெரியாதுதான். ஆனால் வேறு விசயங்களுக்காக குறும்புத்தனமாக சண்டையிடுகிறார்கள். சில மாணவர்கள் சைவம் உண்பவர்கள், அதனால் வேறுபாடு ஏற்படுகிறது. இது போல விசயங்கள் இருக்கின்றன. நாம் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும்.” என்கிறார். பார்ப்பனிய ஆதிக்க மனோபாவம் அவர் பேச்சிலேயே தெரிகிறது.
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறையின் மண்டல அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார்கள். ஆனால் தாங்கள் குறிவைக்கப்படுவோம் என்கிற அச்சத்தின் காரணமாக எழுத்துபூர்வமாக புகார் அளிக்கவில்லை. இது குறித்து டெல்லி வடக்கு மாநகராட்சி கல்வி துறை அதிகாரியிடம் கேட்டபோது “இப்போது தான் இது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து நிச்சயம் விசாரணை செய்வோம். தவறு உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த பிரிவினை குறித்து மாணவகளின் பெற்றோர்களுக்கு எதுவும் தெரியவில்லை. “ என் வகுப்பில் இந்து மாணவர்கள் யாரும் இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் வரை நாங்கள் ஒன்றாக இருந்தோம். நானும் என் பிரெண்டும் இப்போ ஒரே வகுப்பில் இல்லை” என்கிறான் ஒரு நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் தாய் இது குறித்து கூறுகையில் “இது பெரிய தவறு. எல்லா மாணவர்களும் ஒன்றுதான். பள்ளியிலேயே இப்படி நடத்தப்பட்டால் பிறகு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இது மிகவும் கவலையளிக்கிறது” என்கிறார்.
சிறு குழந்தைகள் பழகுவதை தடை செய்வதோடு சிறு வயதிலேயே அவர்கள் மனதில் பார்ப்பனீய விஷத்தை விதைக்க முயற்சிக்கிறார்கள். இது ஒரு தனிப்பட்ட ஆசிரியரின் செயல் போல தெரியவில்லை. அவ்வாசிரியரின் பின்னணி குறித்து விசாரித்து இது போல எத்தனை பள்ளிகளில் நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
அம்பேத்கர் வகுப்பறையில் தனிவே உட்கார வைக்கப்பட்டிருந்தும், பொது குடத்தில் தண்ணீர் குடித்ததற்காக தண்டிக்கப்பட்டதையும் நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். தமிழகத்தின் சேரன்மகாதேவி குருகுல தீண்டாமை எதிர்ப்பு போரட்டத்தையும் வரலாற்றில் பார்த்திருக்கிறோம்.

இதோ நவீன பார்ப்பனியம் மீண்டும் அதே தீண்டாமையையும், ஒதுக்கலையும், கூடவே ஒடுக்குமுறையையும் திணிக்க ஆரம்பித்துவிட்டது. எது நடந்துவிடுமோ என்று முற்போக்காளர்கள் அச்சப்பட்டார்களோ அது நடக்க ஆரம்பித்துவிட்டது.
இப்போது இந்து முஸ்லீம் என்று பிரித்து வைத்திருப்பது பின்னர் சாதி வாரியாக பிரிப்பதையும், அதற்கேற்ற கல்வி என்கிற நவீன குலக்கல்வி முறையை அடைய வெகுதொலைவு இல்லை. இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்
11-10-2018
தமிழில் மொழி பெயர்ப்பு
வினவு தளம்.


No comments: