வெள்ளபாதிப்பில் இருந்து கேரள மாநிலத்தை மீட்க உதவுகிறேன் என்று வாக்களித்துவிட்டு, எங்கள் அமைச்சர்கள் வெளிநாட்டில் சென்று நிதியுதவி கோருவதற்கு அனுமதியளிக்காமல் வாக்குத்தவறிவிட்டார் மோடி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அங்குள்ள கேரள மக்களைச் சந்தித்து வெள்ள பாதிப்பில் இருந்து மாநிலத்தைச் சீரமைக்க நிதி கோரி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தின் போது, ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்தால் கேரள மாநிலம் சீரழிந்தது.
அப்போது, மாநிலத்தை மறுகட்டமைக்க தேவையான நிதியை அளிக்க வெளிநாடுகளில் இருக்கும் மலையாள மக்களைச் சந்தித்து உதவிக் கோர கேரள அமைச்சர்கள் வெளிநாடு செல்ல முயன்றனர். ஆனால், முதலில் அனுமதி தருவதாகக் கூறிய மத்திய அரசு பின் கடைசிநேரத்தில் அமைச்சர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டது. இதனால், முதல்வர் பினராயி விஜயன் மட்டும் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மாநிலத்தைச் சீரமைக்க நிதி திரட்டும் முயற்சியில் அமைச்சர்கள் ஈடுபட்டனர். 15 அமைச்சர்கள் 13 நாடுகளுக்கு வெளிநாடு சென்று அங்குள்ள கேரள மக்களிடம் நிதி கோர அனுமதி கோரியபோது அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
என்னிடம் அனுமதி தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்ற பிரதமர் மோடி கடைசி நேரத்தில் அனுமதி வழங்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. கேரள அரசை மத்திய அரசு பாரபட்சத்தோடு நடத்துகிறது.
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு மாநிலம் உருக்குலைந்த போது, பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்குச் சென்று குஜராத் மக்களைச் சந்தித்து மாநிலத்தைச் சீரமைக்க நிதி கோரினார். ஆனால், கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது நிதியுதவி கோர வெளிநாடு செல்ல எங்கள் அமைச்சர்கள் அனுமதி கேட்டபோது கொடுக்கவில்லை. என்னிடம் வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் பிரதமர் மோடி தவறிவிட்டார்
கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்டபல நாடுகள் உதவி அளிப்பதாகத் தெரிவித்தன ஆனால், அந்த உதவிகளைப் பெற மத்தியஅரசு மறுத்துவிட்டது. கேரள யார் முன்பும் தோல்வி அடையத் தயாராக இல்லை. எங்களுடைய மாநிலத்தை நாங்கள் கட்டமைப்பது அவசியாகும். எங்கள் மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்வதை யாரும் தடுக்க முடியாது. மலையாள மக்களின் ஒற்றுமையே எங்களின் பலம். அவர்கள் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து கேரள மாநிலம் மறுகட்டமைக்க உதவ வேண்டும். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
21-10-2018
தமிழ் இந்து நாளிதழ்
21-10-2018
2 comments:
பினரயி விஜயனுக்கு சற்று கோணல் புத்தி. இவன் சொன்வதையெல்லாம் நீங்கள் நம்ப கூடாது.
மோடி என்று சொன்ன சொல்லை காப்பாற்றி இருக்கார், இப்பமட்டும் வாக்கு தவற
Post a Comment