Followers

Wednesday, October 17, 2018

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' - வி.பி துரை

சாராயத்திற்குப் பெயர் போன நெல்லை மாவட்டம் சொக்கம்பட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவன் நான். சாதிச் சண்டையின் பாதிப்பால் இடம் பெயர்ந்து செங்கோட்டை வட்டம் விஸ்வநாதபுரத்தில் வசித்து வருகிறேன்.

சமூகப் பொராளியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டு டி.ஐ.ஒய்.எஃப், எஸ்.எஃப்.ஐ போன்ற அமைப்புகளில் பொறுப்பாளர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். இந்த ஈடுபாடு மதங்களையும் அதன் கட்டுப்பாடுகளையும் அதன் சுதந்திரங்களையும் எனக்கு அறியத் தந்தது. ஆனாலும் மதம் ஒரு அபின்: மதங்கள் மனிதனைப் பண்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற மார்க்சிய எண்ணம்தான் என்னில் வேரூன்றி இருந்தது.

வர்ணாசிரமக் கொள்கையை கையில் ஏந்தி திராவிட இனங்களை ஜாதிகளாகப் பிரித்து அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் உயர் ஜாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் இன்றளவும் செய்யும் கொடுமைகளுக்கு எதிராகவும் அகில உலக ரட்சகனாகத் தன்னைப் பிரகடனப் படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மார்க்சியப் போராட்டங்களில் முழு அளவில் இணைந்து 12 ஆண்டு காலம் போராடி பல முறை சிறை சென்றுள்ளேன். 

நான் சார்ந்திருந்த சமூக மக்கள் உழைக்கும் மக்களாக பள்ளன் என்றும் பறையன் என்றும் சக்கிலியன் என்றும் பல பெயர்களால் அவர்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி கொடுமைப் படுத்தப் படுவதும் ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என இந்தியச் சூழல் இருந்தாலும் இன்றும் திண்ணியம் கிராமத்திலே தாழ்த்தப்பட்ட சகோதரனுக்கு மனிதக் கழிவை வாயில் திணித்ததும், செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக மத வெறியர்கள் ஐந்து தாழ்த்தப்பட்ட மக்களை அடித்தே கொன்ற கொடுமையும், பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் ஜனநாயக உரிமை கூட மறுக்கப்படுவதும் ........ இவை எல்லாமே பல வடிவங்களில் தொடர்ந்து நடக்கும் கொடுமைகள் ஆகும். 

இவற்றுக்கு தீர்வு வெறும் போராட்டங்கள் அல்ல. மனித சட்ட திட்டங்களாலோ ஆணைகளாலோ இவற்றிற்கு தீர்வு காண முடியாது. பிறகு இதற்கு என்னதான் வழி? தொட்டால் தீட்டு, பட்டால் பாவம் என்ற கொடுமைகளுக்கு விடிவு காலம் எப்போது? கார்ல் மார்க்சின் 'மாறாது' என்ற சொல்லைத் தவிர மற்றவை எல்லாம் காலப் போக்கில் மாறும் என்பது வெறும் தத்துவம் தானா? 

இந்தத் தலைவர்கள், மேதாவிகள் அவர்தம் கொள்கைகள் காலப் போக்கில் மங்கி நிறமிழந்து போகும் போது எந்த வழிதான் இந்த உலகை உயிர்ப்பிக்கும் என்ற தேடல் எப்போதம் என்னுள் உண்டு. 

இந்தச் சூழலில் நெல்லை மாவட்டம் கடைய நல்லூர் ஒன்றிய டி.ஒய்.எஃப்.ஐ பொறுப்பாளராக கட்சியின் மாவட்ட நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டேன். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கடையநல்லூரில் இஸ்லாமிய மக்களிடம் கட்சியை வளர்ப்பதில் மட்டுமே நாட்டம் கொண்ட மார்க்சிய வாதங்களை எடுத்து வைப்பேன். அதே சமயம் உலக அளவில் சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுதல் குறிப்பாக நர வேட்டை நாயகன் நரேந்திர மோடி குஜராத்தில் நடத்திய இனப் படுகொலைகள், இஸ்லாமியப் பெண்கள் மீது நடத்திய தாக்குதல்கள் வகுப்பு வாத பாசிச வெறியர்களால் இந்தியா முழுவதும் நடக்கும் கொடூரச் செயல்கள் பொன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தும் போராடியும் இருக்கிறேன். இந்தச் சிறுபான்மை மக்களில் பெரும்பாலோர் மௌனிகளாக இருப்பது கோபத்தையும் ஒரு இரக்கத்தையும் கூட என்னுள் ஏற்படுத்தியது. 

கட்சியை அறிமுகப்படுத்தி வளர்ப்பதற்காக பகுத்தறிவுப் புத்தகங்கள், மார்க்சியப் புத்தகங்கள், கட்டுரைகள், கவிதைகள், நான் எழுதிய 'போர் வாள்", செம்மண், கிராமத்துக் கரையோரம் ஆகிய நூல்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்வேன். அப்படி எடுத்துச் செல்லும் போது 20 வயதான மதினா நகர் டி.எ.அப்துல் அஜீஸ் எனும் நண்பரையும் சந்திக்கச் செல்வேன். அவர் மார்க்க அறிஞரோ அல்லது மார்க்கத்தை முழு அளவில் எடுத்துரைக்கும் அழைப்பாளரோ அல்ல. பத்து வருடங்களுக்கு முன் இஸ்லாத்தில் இணைந்தவர்தான். 

என் நூல்களை அவர் படித்தாரா என்று தெரியாது. என் உணர்வுகளை மதித்து நெருங்கி தோழமை உணர்வோடு பழக ஆரம்பித்தார். அவரை இஸ்லாமிய மக்கள் மத்தியில் மார்க்சிய அறிவைப் புகுத்தி போராட்டவாதியாக ஆக்க முயன்றேன்.

இஸ்லாமிய நண்பர்களிடம் மார்க்சிய வாதங்களை எடுத்துரைத்து தோற்றுப் போகத்தான் முடிந்தது. அப்துல் அஜீஸிடம் நான் தோற்றுப் போனேன். 'நான் மார்க்சியத்தை படிப்பது இருக்கட்டும்: நீங்கள் நபிகளின் வாழ்க்கை முறையை படியுங்கள்' என்று நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை எனக்குத் தந்தார். 

என்ன ஒரு அற்புத வாழ்வு!ஆஹா..! நடைமுறைக் கேற்ற அழகிய வழி காட்டுதல்கள். அந்த மாமனிதரின் வாழ்வு முறை என்னை ஈர்த்தது. ஓரிறைக் கொள்கையின் மீது ஒரு பிரியம் ஏற்பட்டது. சிந்திக்க ஆரம்பித்தேன். திருக்குர்ஆனின் அத்தியாயங்களை ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினேன். விஞ்ஞான உலகோடு ஒப்பாய்வு செய்து படித்தேன். நபிகளார் மூலம் மனித குலத்திற்கு இறைவன் அருளிய வழி காட்டுதல்கள் உண்மையானவை: சத்தியமானவை: கண்ணீர் மல்க கரைந்துருகினேன். நான் இப்போது அப்துல் அஜீஸ். 

தீண்டாமையை ஒழிக்கவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு காலம் பிறக்கவும், ஏற்றத் தாழ்வுகளைக் களையவும் அருமருந்தான இஸ்லாத்தை என் சமூக மக்களிடம் எடுத்துச் செல்வேன். 

ஓரிறையை ஏற்று திருமறை வழியில் நடப்பதன் மூலமே மனித குலம் மேம்பாடு அடைய முடியும். மனிதன் மாண்பு பெற இம்மார்க்கமே மகத்தான மருந்து என உலகிற்குப் பறை சாற்றப் போகிறேன்.

-அப்துல் அஜீஸ் (முன்னால் வி.பி துரை)

நன்றி:சமரசம் 

-------------------------------------------------------------------

ஆஹா... என்ன ஒரு தீர்க்கமான முடிவு! என்ன ஒரு ஆணித்தரமான வார்த்தைகள்! இனி உங்களை ஒருவனும் சூத்திரன் என்று கூற மாட்டான். நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் நான் ஆதமின் வழி வந்த வாரிசு என்று! 

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது இனி ஏட்டளவில் மட்டுமல்ல செயலிலும் நீங்கள் செயல்படுத்தலாம். தமிழனின் பூர்வீக மதத்தை நோக்கி ஓடி வந்த நமது சகோதரன் துரையை இரு கரம் நீட்டி அரவணைப்போம். 


1 comment:

ASHAK SJ said...

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கல்வி மொத்த உலகத்தினருக்கும் கொடுக்கப்படவேண்டும், அதை சொன்னது தமிழன் என்றும் சொல்லப்படவேண்டும், அதன் முடிவு சாதி மத பேதமில்லாமல் மக்கள் அனைவரும் அமைதி மார்க்கத்தை கடைப்பிடித்து ஈருலக வாழ்வில் நன்மை அடைவது