பரியேறும் பெருமாள்
===================
===================
பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு அப்படி ஒரு உணர்வு. நான் கண்ட காட்சிகள், என்னைச் சுற்றி நடந்த நிகழ்வுகள், நாங்கள் தினமும் சென்று திரும்பும் அதே தூத்துக்குடி சாலை, எங்கள் கல்லூரியின் எதிரே உள்ள அதே சட்டக்கல்லூரி என்று என் வாழ்க்கையின் அந்த நாட்களை மீட்டெடுத்தது .
பயணித்த அதே சாலை என்பதால் இன்னமும் நெருக்கமானது இந்த கதை.
மனோகர் From பாளையங்கோட்டை - ஷோபனா From வி எம் சத்திரம் - சரவணன் From ஆழவார் திருநகரி -ரமேஷ் From கொக்கிரகுளம்- எம் ஆனந்த From சமாதானபுரம்
என்று ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்தும் முதல் காட்சி என்னுடைய முதல் நாளையும் ஞாபகப்படுத்தியது.
என்று ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்தும் முதல் காட்சி என்னுடைய முதல் நாளையும் ஞாபகப்படுத்தியது.
"ஞானி From மேலப்பாளையம்" முதல் நாள் கல்லூரியில், நானும் பரியனை போல, பிஏபிஎல் மேல ஒரு கோடு என்பதைப் போல சொல்லிக்கொண்டிருந்தேன்
"ஞானியா...? பெரிய ஞானின்னு நினைப்பா..? தொப்பிய கழட்டு முதல்ல"
என்று இக்பால் சார் திட்டுதலில்தான் ஆரம்பித்தது என்னுடைய கல்லூரி வாழ்க்கையும்.
என்று இக்பால் சார் திட்டுதலில்தான் ஆரம்பித்தது என்னுடைய கல்லூரி வாழ்க்கையும்.
படத்தில் ஒரே ஒரு விநாடிகளில் வரும் ஒவ்வொரு சீனிலும் நிறைய கதைகள் இருக்கின்றது.
பேருந்தில் இருந்து படியில் தொங்கிக் கொண்டிருந்த மாணவன் , தவறி விழ வைக்கப்பட்டு கீழே விழுந்து இறந்து விட ,அதே பேருந்தில் கடைசி சீட்டில் ஒரு பெண் கதறி அழுது கொண்டிருப்பாள். அந்தக் காட்சியும் சரி.
ஒரு பாடல் காட்சியில் தாமிரபரணி ஆற்றில் ஒருவனை போலிஸ் லத்தியால் அடித்துக் கொண்டிருக்கும் காட்சியும் சரி, இதுபோல விநாடியில் மறையும் காட்சிகள் மறையாத வலிகள் நிறைந்தவை.
அது 1 விநாடியில் வருவதனால் நாம் கவனிக்கத் தவறியிருப்போம். ஆனால் அதற்குப் பின்னால் பெரும் வலி ஒன்று இருக்கின்றது.
1999ல் ஜூலை 23ல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் நடந்த மாஞ்சோலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்தின் ஒரு விநாடி காட்சிதான் அது.
அந்த ஒரு விநாடி காட்சியின் நீட்சியில் தாமிரபரணியில் மூழ்கி சாகடிக்கப்பட்டவர்களின் நிறைய கதைகள் இருக்கின்றது. "மறக்கவே நினைக்கிறேன்" பகுதியில் மாரி செல்வராஜ் இப்படி குறிப்பிட்டிருப்பார்.
"எதையும் யோசிக்காமல் இறங்கி அக்கரைக்கும் இக்கரைக்கும் அடித்தேன் நீச்சல். எனக்குத் தெரியும்
உங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கும் அது என்னுடைய நீச்சல் அல்ல; அஞ்சு வயசில் ஆற்றுக்குள் இறங்கி அம்மாவால் நீச்சல் பழக்கப்பட்டவனை... ஆற்றுக்குள் விழுந்து செத் தான் என்று சொல்லி ஓர் அரசாங்கம் கொன்ற 'குமார்' என்கிற இளைஞனின் பழிவாங்கும் எதிர்நீச்சல் அது!'
உங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கும் அது என்னுடைய நீச்சல் அல்ல; அஞ்சு வயசில் ஆற்றுக்குள் இறங்கி அம்மாவால் நீச்சல் பழக்கப்பட்டவனை... ஆற்றுக்குள் விழுந்து செத் தான் என்று சொல்லி ஓர் அரசாங்கம் கொன்ற 'குமார்' என்கிற இளைஞனின் பழிவாங்கும் எதிர்நீச்சல் அது!'
சதக்கத்துல்லா கல்லூரியில் என்னுடைய கல்லூரி தோழர்தான் இந்த குமார். இப்படி குமாரைப் போல செத்துப் போனவனின் கதைகளும் கடைக்குச் சென்று விட்டு இன்று வரை திரும்பாதவர்களின் கதைகளும் ஏராளமாய் இருக்கின்றன.
இது கதையல்ல நிஜம்.
எவ்வளவு நுட்பமாக திருநெல்வேலி பேச்சுக்கள் , சூழல்கள், மண் வாசனைகள் செதுக்கப்பட்டிருக்கின்றது என்று இந்தப் படம் பார்க்கும் திருநெல்வேலிகாரர்களுக்கு இன்னமும் நெருக்கமாக இந்தக் கதை ஒட்டிக்கொள்ளும்.
மேலப்பாளையத்தில் பள்ளியில் படித்துவிட்டு வெளியில் சென்று ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும்பொழுதுதான், நாம் இதுவரை ஆங்கிலமே படிக்கவில்லை என்பதை உணர ஆரம்பித்தோம் அந்த பரியனைப் போலவே.
ஆங்கிலத்தை அறிவோடு இணைத்தே பழக்கப்படுத்திவிட்டதால் , ஆங்கிலம் தெரியாமல் இருப்பதை அறிவு இல்லாமல் இருப்பதைப் போலவே தோன்றச் செய்த , அந்த தன்னம்பிக்கையில்லா உணர்வு , பரியனோடு சேர்ந்து நானும் உணர்ந்தேன். யாரைத் திட்ட கல்விமுறையையா அரசாங்கத்தையா ?
பரியன் பாதங்களில் வைத்து பிட் அடிப்பது , பரிட்சை நேரத்தில் பேப்பர் மாற்றுவது, நிறைய பிட்டுக்கள் எடுத்துக்கொண்டு போய் எந்தக் கேள்விக்கு எந்த பிட் என்று தெரியாமல் குழம்பிப் போவது எல்லாம் மாரி செல்வராஜ்க்கு நிகழ்ந்தவையாக இருக்கலாம்.
இதுபோலத்தான் எனது கல்லூரி நண்பன் ஒருவன் , பரிட்சை அறையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து , அந்தக் கேள்வி எந்தப் பக்கத்தில் இருக்கின்றது என்று கேட்டுக் கொண்டிருந்தான். இதுபோல நிறைய பிட் அடித்த பிட்டுக் கதைகள் இருக்கின்றன.
கல்லூரியில் செய்த தவறுக்காக, அப்பாவை போல ஒருவரை அழைத்து வந்து நடிக்கச் சொல்லும் காட்சிகள் எல்லாம் அப்பொழுது எங்கள் கல்லூரியில் நடந்து கொண்டிருந்தன.
சட்டக்கல்லூரி எதிரே இருக்கின்ற ரஹ்மத் நகர் கேண்டீனுக்கு, சாப்பிட வந்தவர்களையெல்லாம் அழைத்து வந்த கதை இருக்கிறது.
கல்லூரியில் படிக்கும் மாணவியின் வீட்டின் திருமணத்திற்கு பரியன் சென்றதால், அவர்களால் அடைத்து வைக்கப்பட்டு , அடித்து அவமானப்படுத்தப்பட்டு அனுப்பும் காட்சியும் சரி , அவனது தந்தை யார்? அவரை ஏன் கல்லூரிக்கு அழைத்து வர அவன் வெட்கப்பட்டான்? அவரை அழைத்து வந்ததால் என்ன நடந்தது ?
இப்படியெல்லாம் கூட மக்கள் இருக்கின்றார்களா..இவ்வளவு பயங்கரமானவர்களா நம்மைச்சுற்றிலும் நம்முடனே சகஜமாய் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று பதற வைக்கிறது.
நாம் திரையில் கண்டதால் பதறுகின்றோம். ஆனால் இன்று வரையிலும் சிறுபான்மையினர்கள் அடித்துக் கொல்லப்படும் நிகழ்வுகள், கொசுக்களை கொல்வதைப் போல எந்தவொரு மனச் சங்கடமில்லாமலும், அதனை குற்றமென்றே உணராமலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது இந்தியாவில்.
மாணவப் பருவத்தில் சாதி பார்க்காமல் பழகுவோம் என்று பேச்சுக்கு சொல்லப்பட்டாலும், அவைகள் பெரும்பாலும் பாசாங்குகள்தான். தேவையென்று வரும்பொழுது சாதி உணர்வுகள் முளைக்க ஆரம்பிக்கும்.
"இப்பலாம் யாரு சார் சாதி பார்க்குறா ?"என்று கேட்பவர்கள் பெரும்பாலும் உயர்சாதிக்காரர்களாகவே இருப்பார்கள். மாணவப்பருவத்திலிருந்தே அவைகள் ஆரம்பித்து விடுகின்றன.
இந்த திரைப்படத்தில் வரும் பத்திரிக்கைச் செய்திகள் , கொலைகள் எல்லாம் இப்பொழுதும் நடந்து கொண்டிருப்பவைகள்தான். அந்த பத்திரிக்கைச் செய்தி காட்சிகள் எல்லாம் அத்துனையும் நிஜம். ஆணவப் படுகொலையின் அத்தனை விதைகளும் இந்த மாணவப்பருவத்தில் இருந்தே துடைத்தெறிய வேண்டும்.
கல்லூரி தேர்தலில் கூட சாதி வேற்றுமையில் நிறைய வன்முறைகள் நடைபெறும். என்னுடன் முந்தைய நாள் வரை டியுசன் வந்து கொண்டிருந்தவன் மறுநாளிலிருந்து காணவில்லை. "மாணவர்களுக்குள் மோதல் நடுரோட்டில் மாணவரின் கை துண்டிப்பு " என்கிற பத்திரிக்கை செய்தியில் வரும் அவனது புகைப்படம் பார்த்தபிறகுதான் மிரட்சியடைய ஆரம்பித்தோம்.
பரியன் கல்லூரிக்கு அப்பாவை அழைத்து வர தயங்குவதன் பின்புலத்தில் உள்ள காரணம் உணரும்பொழுது கண்ணீர்.
இது பரியனுக்கு மட்டுமல்ல நிறைய பேர் இப்படித்தான் இருக்கின்றார்கள். அப்பாவை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதையே கவுரவக் குறைச்சலாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
"ம் ஆளயும் சைசையும் பாரேன்...அவனுங்க வந்தா பயந்துரணுமோ பேசாம இரம்ல.."
"அவனுங்க வந்தா என்னல..இப்ப ஏன் பயப்படுற ..பயந்தாங்கொள்ளி பயல.."
"நீ ஏம் மாப்ள வீறு வீறுன்னு கத்துற..உக்காரு மாப்ள"
என்று ஆரம்ப காட்சியில் பரியன் நண்பர்கள் பேசிக் கொள்ளும் காட்சி ஒன்றே போதும் திருநெல்வேலியின் மண் மணம் மாறாமல் எவ்வளவு யதார்த்தமாய் எடுக்கப்பட்டிருக்கும் காட்சி யென்று. திருநெல்வேலியைப் பற்றி திருநெல்வேலிக்காரனால் மட்டுமே இவ்வளவு யதார்த்தமாய் எடுக்க முடியும்.
இதுபோல ஒரு காதல் ப்ரபோஸலை தமிழ் சினிமா நிச்சயம் கண்டிருக்காது. நானும் பயந்து கொண்டே இருந்தேன் , எங்கே ஜோதி லெட்சுமி, பரியனிடம், " ஐ லவ் யு" சொல்லிவிடுவாளோ என்று? உண்மையாய் நேசிப்பவர்கள் "ஐ லவ் யு" சொல்வதில்லை.
காதலைத் தெரிவிக்கும் பொழுது, சாக்லேட் கொடுக்கும் பழக்கம் ஜோதி லெட்சுமியைப் போலவே நிறைய பெண்களுக்கு இருக்கிறது. அந்த சாக்லேட் நினைவுகள் , சிலருக்கு நினைவுகளாக மட்டுமே இருக்கின்றது. Jumaana Syed Ali
பரியன் கல்லூரியில் நடைபெறும் ஒரு தகராறில், தள்ளுமுள்ளு நிகழ்ந்து முடிந்த பிறகு ,
அவள் , தகராறில் கழன்று விழுந்த கடிகாரத்தை எடுத்து வந்து , அவனிடம் கொடுக்கும் காட்சி எத்தனை பேர்களுக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. அவ்வளவு ஆழமானது. அவளது கண்கள் அவன் மீதே இருந்திருக்கின்றன.
அவள் , தகராறில் கழன்று விழுந்த கடிகாரத்தை எடுத்து வந்து , அவனிடம் கொடுக்கும் காட்சி எத்தனை பேர்களுக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. அவ்வளவு ஆழமானது. அவளது கண்கள் அவன் மீதே இருந்திருக்கின்றன.
நாம் செய்து கொண்டிருப்பது தவறு என்று படம் பிடித்து காட்டினால் மட்டுமே, அதனை தவறாகவே உணருகின்ற நிலையில் உள்ள ஆதிக்க ,அதிகார , துஷ்பிரயோகம் செய்கின்ற மனிதர்கள் நம்மைச் சுற்றியும் இருக்கின்றார்கள்.
சினிமா நடக்க முடியாதவற்றை காட்டுவதை நிறுத்திவிட்டு , நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதை காட்டினாலே போதும் .
வாழ்த்துகள் Mari Selvaraj இன்னமும் நிறைய வலிகள் இருக்கிறது உன்னிடம் என்பது இந்த படத்தின் மூலம் தெரிகின்றது. காத்திருக்கின்றோம்.
செத்துப் போன பிறகு 3 நாட்களுக்கு மேல நம்ம பாடியை நம்ம வீட்டுலயே வைக்க மாட்டாங்க..அது அழுகி, உடல் உறுப்புகள் எல்லாம் கெட்டுப்போய், ஊதி, நாற்றம் வர ஆரம்பித்துவிடும் .
இந்த நாறிப்போகப்போகிற பாடியை சுமந்து திரிபவர்களுக்கு, ஏன் இத்தனை சாதி வெறி? ஆணவம்? திமிர்? உயர்ந்தவன் என்கிற அகம்பாவம்..? திருந்தி தொலைங்கல ...
-gnaniyar Zubair
1 comment:
நல்ல படம், ஜாதிக்கொடுமையை தோலுரிக்கும் படம், அன்புராஜ் போன்ற சூத்திரர்களுக்கு பல படிப்பினைகள் உண்டு, ஆனால் என்ன அவர்கள் திருந்தமாட்டார்கள்.
Post a Comment