Followers

Saturday, November 09, 2019

பல வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு.

பல வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு.
பாபர் பள்ளியை இடித்து விட்டு வம்படியாக இனி அங்கு ராமர் கோவில் கட்டப் போகிறார்களாம். இதனால் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது? தற்கால சூழலுக்கு இந்த பதிவு பொருத்தமாக உள்ளதால் அதனை மீள் பதிவு செய்கிறேன்.
---------------------------------
எனது அலுவலகத்தின் பின்னால் இருக்கும் பள்ளியில் நேற்று மதிய நேர (லுஹர்) தொழுகைக்கு போனபோது எடுத்த புகைப்படம் தான் இது. துப்புரவு தொழிலாளியாக தெருக்களை கூட்டி பெருக்கும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பள்ளியில் அமர்ந்திருப்பதைப்பதைத்தான் நாம் பார்கிறோம். இந்த பள்ளிக்கு தொழ வரக் கூடியவர்கள் பெரும்பாலும் மல்டி மில்லினர்களான சவுதி நாட்டைச் சேர்ந்தவர்கள். விலையுயர்ந்த உடைகளோடு மிக உயர்ந்த வாசனை திரவியங்களோடு மிகவும் சுத்தமாக வந்து தொழுகைக்கு அமர்வர்.
அதே பள்ளியில் கம்பெனி சீருடையான மஞ்சள் நிற அழுக்கு படிந்த உடையோடு அந்த பங்களாதேஷத்து முஸ்லிம் உரிமையோடு பள்ளி வாசலின் மத்தியில் அமர்ந்திருப்பதை பார்கிறோம். இது உலக பள்ளி வாசல்கள் அனைத்திலும் சர்வ சாதாரணமாக பார்கலாம். இது மட்டுமா... தொழுகை ஆரம்பமானவுடன் அந்த பங்காளி எங்கு விரும்புகிறாரோ அங்கு சென்று நின்று கொள்ளலாம். முதல் வரிசையிலும் பல முறை இவர் நின்று பார்துள்ளேன். அதோடு வரிசையில் நிற்கும் போது இவரது அழுக்கு உடையினால் சங்கோஜப்பட்டுக் கொண்டு சற்று விலகி நிற்பார். ஆனால் பக்கத்தில் நிற்கும் மல்டி மில்லினர் சவுதியோ அந்த இளைஞனின் தோள் பக்க துணியை பிடித்து இழுத்து தனது தோளோடு நெருக்கி நிறுத்திக் கொள்வார். ஏனெனில் தொழுகையில் இடைவெளி விட்டு நின்றால் அந்த தொழுகையின் நன்மையில் குறைவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். எனவே அந்த சவுதிகளுக்கு விருப்பம் இல்லா விட்டாலும் தொழுகையில் நன்மை குறைந்து விடக் கூடாது என்பதற்காக அந்த பங்காளியை தனது அருகில் இழுத்து நிறுத்திக் கொள்கின்றனர். அதிக நேரம் வெயிலில் அந்த இளைஞர் வேலை செய்வதால் உடையிலிருந்து வியர்வை வாசமும் சில நேரங்களில் வரும். பல நேரங்களில் அதை நானும் உணர்ந்திருக்கிறேன். அதையும் மீறித்தான் அந்த சவுதிகள் அந்த இளைஞனை தனதருகில் இழுத்து நிறுத்திக் கொள்கிறார்கள்.
இது மட்டுமல்லாது 'பள்ளி வாசலில் யாரும் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து அமர வேண்டாம். யாரையும் தள்ளி விட்டுக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டாம்' என்று கட்டளையிட்டுள்ளதையும் பார்கிறோம். இதற்கு காரணம் அரசு முக்கியஸ்தர்கள், பணம் படைத்த செல்வந்தர்கள் குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கிக் கொள்ளாமல் இருக்கவும் வறியவர்களை பின்னுக்கு தள்ளி முதல் வரிசையை பிடிக்காமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கம். இதனால் தான் நமது முன்னால் ஜனாதிபதிகள் டெல்லியில் பெருநாள் தொழுகையில் தாமதமாக வந்ததற்காக ரோட்டிலேயே நின்று தொழுதார்கள். அதிகார வெறியை இறைவனை தொழும் இடத்தில் காட்டக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இதனை எல்லா நாட்டு முஸ்லிம்களும் இன்று வரை கடைபிடிக்கின்றனர்.
ஐந்து வேளை பள்ளியில் சென்று தொழுவதால் இறைவனுக்கு என்ன நன்மை என்று பலர் கேட்கின்றனர். இறைவனுக்கு இதனால் எந்த நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை. மாறாக மனித குலத்துக்குத்தான் இதனால் நன்மை. மனிதர்கள் நிறம், இனம், மொழி, பொருளாதார பாகுபாடுகளால் பிரிந்து கிடக்கிறோம். பிரிந்த மனிதர்கள் இறைவனை வணங்கும் போது அனைத்தையும் மறந்து நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வை ஒவ்வொரு முறையும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இதனை அனுபவத்தில் நானும் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை பள்ளியில் சென்று தொழக் கூடியவர்களிடம் மொழி வேறுபாடு, இன வேறுபாடு, நிற வெறுபாடு, பொருளாதார வேறுபாடு இல்லாதிருப்பதைக் காணலாம். எந்த முஸ்லிமாவது மொழி வெறி, சாதி வெறி, தான் பணம் படைத்தவன் என்ற திமிரோடு நடந்தால் அவனிடம் ஐந்து வேளை தொழுகை இல்லாதிருப்பதை நீங்கள் காணலாம். எனவே இஸ்லாமியர்களுக்குள் தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே இந்த தொழுகைதான் என்றால் மிகையாகாது.
இனி நமது தமிழகத்தின் பக்கம் கொஞ்சம் வருவோம்.....
நாம் பிறந்து வளர்ந்த தாய் மண்ணனான தமிழகத்தை நினைத்துப் பார்கிறேன். அங்கும் இதே போன்று சீருடையில் குப்பை கூட்டுபவர்கள் உள்ளனர். அவர்களை நாம் தோட்டி என்று அழைப்போம். அவர்களின் அருகில் கூட நாம் செல்ல மாட்டோம். அதிகம் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டோம். பலர் அவர்களை தொட்டால் தீட்டு என்று தொடக் கூட மாட்டார்கள்.
இதை விடக் கொடுமையாக அவர்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். அவர்களை தனி சாதியாக பாவித்து திருமண உறவு முறை கூட இந்துக்களில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். பெரும் பான்மை சமூகம் என்று காட்டிக் கொள்வதற்காக இவர்களையும் இந்து மதத்தில் சேர்த்திருப்பர். ஆனால் இந்து மதத்துக்கும் நம் ஊர் தோட்டிகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இதனை நடைமுறையில் நாம் பார்க்கலாம். தோட்டிகளைப் போல் மற்ற கீழ் சாதிகளுக்கும் இதே நிலைதான். இவர்களின் எல்லைகள் கோவிலில் வரையறுக்கப்பட்டிருக்கும். அந்த எல்லையையும் கீழ் சாதிக்காரர்கள் மீற மாட்டார்கள்.
பள்ளிவாசலில் பார்த்த அந்த துப்புரவு தொழிலாளியான பங்காளியையும் நம் நாட்டு துப்புரவு தொழிலாளியான தோட்டிகளையும் ஒப்பிட்டுப் பார்தேன். நம் நாட்டு சகோதரனை நினைத்து வருத்தமே மேலிட்டது.



No comments: