Followers

Wednesday, June 15, 2016

ஆகம விதி, ஆகம விதிங்கறாங்களே... அப்படின்னா என்னண்ணே!



டிவி செய்தியப் பாத்துட்டு, இளம் செய்தியாளர் கோசிமின் என்கிட்ட கேட்ட கேள்விதாம் இந்தத் தலைப்பு. “அது வந்துடா தம்பி…”ன்னு திருதிருன்னு முழிச்சேன். அந்த நேரம் பாத்து தெனமும் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போற சீனியர் கிருஷ்ணமூர்த்தி அண்ணென் வர, ‘‘அவருட்ட கேளு, கரெக்ட்டா சொல்வாரு”னுன்னு நான் தப்பிச்சிட்டேன். “ஆகம விதி தெரியாதாப்பா? அது அந்தக் காலத்துலயே சம்ஸ்கிருத பொஸ்தகத்துல எழுதியிருக்கிற ஒரு விதி”ன்னாரு அண்ணென். கோசிமின் சிரிச்சிட்டான்.

அறுப்புக் கோஷ்டி, வெட்டுக் கோஷ்டி

ஆகம விதின்னா என்னன்னு ஒரு கிராமத்தானா யோசிச்சிப் பாத்தேன். எங்க ஊரு (சோலைசேரி) பத்ரகாளியம்மன் கொடையில ஆட்ட வெட்றதா, அறுக்கறதான்னு பிரச்சினை வந்துச்சு. “யோவ்! தலை தொங்கல் விழுந்தா குடும்பத்துக்கு ஆகாது. ஆட்டை அறும். வெட்டாதீர்”னு ஒருத்தர் கத்த, “ஒரே போடா போடுறதுதாம் ஐதீகம்”னு இன்னொருத்தர் சொல்ல, கோஷ்டி சண்டையாகிடுச்சி. வெட்டுக் கோஷ்டியோட திட்டுச் சத்தம் கொட்டுச் சத்தத்தத் தாண்டிக் கேட்டதால ஆட்டை வெட்டுறதுன்னு முடிவாச்சு. என்ன கெரகமோ, துண்டா விழ வேண்டிய தல தொங்கிப்போச்சி. கெக்கே பிக்கேன்னு சிரிச்ச அறுப்புக் கோஷ்டி ஆளுக, “இப்ப என்ன செய்வீங்க… அறுத்துத்தான ஆகணும்?”னு கிண்டலாக் கேக்க அடிதடியாகிடுச்சு. கடைசியில ஒரு வருசம் அறுப்புக் கோஷ்டிக்கு, மறு வருசம் வெட்டுக் கோஷ்டிக்குன்னு கோயிலையே பங்கு பிரிச்சிட்டாங்க.

எங்க ஊரு ராமர் கோயில்ல கருப்பன், பேச்சி, வைரவன்னு அசைவச் சாமிகதாம் மெஜாரிட்டி. அதுலயும் ராமருக்கும் கருப்பசாமிக்கும் இடையில கிச்சனுக்கும் டைனிங் ஹாலுக்குமான தூரம்தான் இருக்கும். கருப்பனுக்கு ஆடு, கோழி, முட்டைன்னு படைப்பு போட்டா, வாசம் ராமர் மூக்கத் தொளைக்கும்.

இதக்காட்டி கருப்பனை இடம்மாத்தணும்னு ராமரக் கும்பிடுதவங்க சொல்ல, ‘முடிஞ்சா கை வைங்க பாப்போம்’னு கருப்பனக் கும்புடுதவங்க மல்லுக்கு நின்னிருக்காங்க. ஒத்துமதாம் முக்கியம்னு உணர்ந்த பெருசு ஒண்ணு, “கருப்பன் யாரு? ராமரோட புள்ள. காவக்காரப் புள்ள அப்படி இப்பிடித்தாம் இருப்பான். விடுங்கப்பா, அவங்க பாட்டுக்குக் கிடா வெட்டிப் படையல் போடட்டும். தப்பில்ல”ன்னு சொல்லிட்டாரு. பிரச்சினையும் முடிஞ்சிருச்சி. ஆக, கிராமக் கோயில்களப் பொறுத்தவரைக்கும் சூழ்நிலைக்கு ஏத்தமாரி ‘ஆகம விதி’யை மாத்திக்கிடுதாங்க. இல்லாட்டி ஊர் ரெண்டுபடுது.

பூசாரிய நாய் கடிச்சிருச்சிப்பா!

இது பெருங்கோயில்களுக்கும் பொருந்துமாங்கிறதுதாம் கேள்வி. பொதுவா, கிராமத்தான்க உள்ளூர் பூசாரிய மதிக்க மாட்டாங்க. அதும் சொந்தக்காரனா இருந்திட்டா கேக்கவே வேணாம். ராமர் கோயில் பூசாரியா இருந்த சொர்ணமணி தாத்தாவ கோயில் பக்கத்துலயே நாய் கடிச்சிருச்சி. ‘ஏலே! நம்ம கோயில் பூசாரிய நாய் கடிச்சிருச்சாம்லா’ன்னு ஒருத்தர் சந்தோஷமா கத்த, ‘கடிக்கலடே, சவச்சித் துப்பிருச்சி’ன்னு எங்கப்பா சொல்ல, ‘சவைக்கதுக்கு அங்க என்ன இருக்கு, அதாம் துப்பிருக்கும்’னு கருப்பசாமி அண்ணன் சொன்னாரு. வாயில இருந்த பீடி விழுந்ததுகூடத் தெரியாம பூராப்பேரும் சிரிச்சாங்க.

கடுப்பான பூசாரி கிறிஸ்தவ மதத்துக்கு மாறி எங்க மூஞ்சியிலக் கரியப் பூசிட்டாரு. மாலையும் பொங்கப் பானையும் சொமந்த கையில, பைபிளை ஏந்திக்கிட்டு சர்ச்சுக்குப் போனவரு, கூன் விழுந்தபொறவு பேர ‘டேவிட்’னு மாத்திக்கிட்டாருன்னா பாத்துக்கோங்களேன்.

இதே ஊர்க்காரங்க திருச்செந்தூர் கோயிலுக்குப் போனா, அர்ச்சகர்களுக்கு குடுக்கிற மரியாத பிரமிப்பா இருக்கும். தட்டுல 50 ரூவா போட்டுட்டு, குழாய்ல தண்ணி குடிக்கது மாரி ரெண்டு கையையும் சேத்து வெச்சுக்கிட்டுப் பயபக்தியா நிப்பாங்க. கைய ஒரு முழம் உசரத்துக்கு மேல வெச்சுக்கிட்டு, பொத்துன்னு விபூதியைப் போடுவாரு அர்ச்சகரு. தொட்டு நாமம் சாத்துற உள்ளூர் பூசாரிய மதிக்காதவங்க, இங்க கையேந்தி நிக்கிறதப் பாக்க வேடிக்கையா இருக்கும். உள்ளூர்ல யாரு வேணுமின்னாலும் பூசாரியாகலாம், ஆனா அர்ச்சகரா ஆகணும்னா பிராமணனால்லா பிறந்திருக்கணும்ங்கிற நினைப்புதாம் இந்தப் பவ்யத்துக்குக் காரணம்னு நினைக்கேன்.

கருணாநிதி செஞ்சா தப்பு!

இத மாத்துறதுதாம் பெரியாரோட கடைசி ஆசையா இருந்துச்சி. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்னு கருணாநிதி 1971ல சட்டம் போட்டாரு. வேத சாஸ்திரம், ஆகம விதி தெரியுமான்னு கேள்வி வந்துச்சி. 2006ல எறநூத்திச் சொச்சம் பேருக்கு அறநிலையத் துறை சார்பில் பயிற்சி குடுத்த பிறகும், ஆகம விதி தடுக்குதாம்.

இதப்பத்தி ‘பெருந்தெய்வ’ வழிபாட்டுல பிரியமுள்ள சிலருட்ட கேட்டேன். “எந்தச் சாதியா இருந்தா என்னங்க, மனசுல பக்தியும், பூசை செய்ற முறையும் தெரிஞ்சா யாருனாலும் பூசாரி ஆகட்டும்”னு சொன்னாங்க. “ஆனா, கருணாநிதி அதைச் செய்யக் கூடாது. என்னதாம் ஒளிச்சி ஒளிச்சிச் சாமி கும்பிட்டாலும், அவர் இந்துக்களுக்கு எதிரானவர்தாம். இத மோடியோ, ஜெயலலிதாவோ செஞ்சா வரவேப்போம்”ன்னாங்க.

நம்ம ஊர்ல செயலைப் பொறுத்து இல்ல, செய்ற ஆளப் பொறுத்துதாம் ‘தீர்ப்பு’ சொல்வாங்க. உதாரணமா, தன்னை வெறுப்பேத்துன பத்திரிகைக்காரங்களப் பாத்து ‘தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ன்னு சொன்ன விஜயகாந்த்தைப் பூராப்பேரும் திட்டுனாங்க. ஆனா, பவ்யமா கேள்வி கேட்ட இளம் நிருபரை, ‘உனக்கு அறிவிருக்கா? தகுதியிருக்கா?’ன்னு கடுப்படிச்ச இசைஞானியத் திட்டல பாருங்க அந்த மாரி.

ஆகம விதிப்படி, தாழ்த்தப்பட்டவங்க கோயிலுக்குள்ள போனா தீட்டாயிரும்னு ஒரு காலத்துல சொன்னாங்க. ‘இந்து மத விரோதியான’ காந்தி வற்புறுத்துனதால, 1939ல அனைத்துச் சாதியினரும் ஆலயப் பிரவேசம் செய்யலாம்னு முதல்வர் ராஜாஜி சட்டம் போட்டாரு. அதுக்குப் பொறவு மீனாட்சியம்மன் கோயில் முதக்கொண்டு தமிழ்நாட்டுல இருக்க அத்தன பெரிய கோயில்கள்லயும் பக்தர்கள் எண்ணிக்க பல ஆயிரம் மடங்கு அதிகரிச்சிருக்கு. அதுமட்டுமா, இந்து மதத்தோட வளர்ச்சிக்கும் பிராமணர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியிருக்கு. ஆலயப் பிரவேசச் சட்டத்தை ஏத்துக்கிட்டவங்களால, கர்ப்பக்கிரகப் பிரவேசத்தை மட்டும் ஏன் ஏத்துக்க முடியலைன்னு புரியல. ராஜாஜி சட்டம் போட்டா கண்ணுக்குத் தெரியாத ஆகம விதியும் சேந்து மாறுது, கருணாநிதி போட்டா மீறுதே எப்பிடி? அர்ச்சகர்களோட வாழ்வாதாரம் பாதிக்கப் படும்ங்கிறது உண்மைதாம். அப்படின்னா, எங்களுக்கு மாத்து வழியச் சொல்லுய்யான்னுதான போராடணும். ‘ஆகம விதி’யை எதுக்குத் துணைக்குக் கூப்பிடணும்?

என்னைப் பொறுத்தவரைக்கும் ஆகம விதி என்பது அவ்வப்போது மாறுவது. உதாரணமா, வேதம் ஓதுவது, சைவம் மட்டுமே சாப்புடுவது, பூசை செய்றது, கடல் தாண்டாம வாழுறது, பூண்டு, வெங்காயம் சேர்க்காதது, குடுமி வெக்கிறது, மேல்சட்ட போடாம பஞ்ச கச்சம் மட்டும் கெட்டுறது, மண்ணாச, பெண்ணாசய விட்டொழிக்கதுன்னு ஏகப்பட்ட விஷயத்தைக் கடைப்பிடிக்கிறவங்கதாம் பிராமணன்னு ஆகம விதி சொல்லுது. ஆகம விதிப்படிதாம் எல்லா நடக்கணும்னு சொல்றவங்களால இப்ப இத முழுசா கடைப்பிடிக்க முடியுமா? இந்து மத வளர்ச்சியா, ஒரு சமுதாயத்தோட வளர்ச்சியான்னு பாஜக மாரியான ஆட்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது.

என்னய மாரி அரைகுறை ஆன்மிகவாதிக பெரிய கோயில்களுக்குப் போறதுக்கு எதுக்குத் தயங்குறோம் தெரியுமா? தர்ம தரிசனம், விஐபி தரிசனம்னு சாதி இருந்த இடத்துல இப்ப பணம் வந்து உட்காந்துக்கிடுச்சி. காசு இருக்கவன் சாமிய கிட்டத்துல போய்ப் பாக்கான். இல்லாதவன எட்டி நின்னு உத்துப்பாக்கிறதுக்குள்ள பிறடியைப் பிடிச்சித் தள்ளுதானுவ.

காலத்துக்கேத்தாப்ல மாறாத எந்த மதமும் நிலைச்சி நின்னதா சரித்திரம் இல்ல. கர்ப்பக் கிரகத் தீண்டாமையையும், பொருளாதாரத் தீண்டாமையையும் இந்து மதப் பாதுகாவலர்களான நீங்கதாம் ஒழிக்கணும். இல்லன்னா, ‘இந்து மத விரோதி’களையாவது அதச் செய்ய விடுங்க!

- கே.கே. மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

1 comment:

Dr.Anburaj said...


இந்துக்களில் சமய பாிணாமம் 1000 ஏற்படாமல் தேக்கநிலை காணப்படுகின்றது.தற்சமயம் மத சாா்பற்ற தன்மை என்று இந்துக்களின் சமய கலாச்சார வளா்ச்சியை மீண்டும் தேக்கம் செய்து விட்டாா்கள்.ஸ்ரீநாராயணகுருவையும் சுவாமி விவேகானந்தரையும் திருவள்ளுவரையும் திருமந்திரத்தையும் அனைத்து இந்துக்களும் அறிந்தால் அற்ப விசயங்களில் தங்களின் ஆற்றலை விரயம் செய்ய மாட்டாா்கள்.

சமயத்தை புறக்கணிக்காதிர்்கள் என்றால் யாரும் கேட்கவில்லை.விளைவு கலாச்சார சீரழிவு.
ஒரு முஸ்லீம் தனது குழந்தைகள் முறையாக தொழ படிக்க வேண்டும் என்று அதிக சிரமங்களை தாங்கிக் கொள்கிறான்.
ஒரு கிறிஸ்தவன் தனது பிள்ளை முறையாக பையிள் படித்து ஜெபம் செய்ய தொிய வேண்டும் என்று அதிக பிரயாசைப்படுகின்றான்.
ஆனால் இந்துக்கள் தங்கள் குழந்தைகளை அப்படி சமய அனுஷ்டானங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அறிவு இல்லாதவர்களாக இருக்கின்றாா்கள்.

முஸ்லீம்கள் குரல் எழுப்புங்கள்.இந்து குழந்தைகளுக்கு முறையான சமய கல்வியை ஸ்ரீநாராயணகுரு சுவாமி விவேகானந்தா் வள்ளலாா் வழியில் பெற ஆவன செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி உதவுங்களேன்.