Followers

Friday, June 17, 2016

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்?



எதற்காக நோன்பு நோற்க வேண்டும்?

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.

பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.

பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.

பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா?

நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.

சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது.

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.
யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903, 6057

பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.

நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1893, 1903

நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.

முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.

ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள்.

எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி
ஏகத்துவம் மாத இதழ்.

1 comment:

Dr.Anburaj said...

நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.

முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.

சாியாகச் சொன்னீா்கள்.

மதங்களில் போலித்தனங்கள் நிறையவே குவிந்து கிடக்கின்றது. தங்களின் கருத்து நியாயமானது.அந்தரங்க சுத்தியின்றி வெளிவேசமாக அனுஷ்டானங்களை கை கொள்வது போலித்தனமானது.

நல்ல கருத்து.