Followers

Sunday, June 28, 2020

சவுதி காவல் துறையும் நமதூர் காவல் துறையும்

சவுதி காவல் துறையும் நமதூர் காவல் துறையும்
ஒரு முறை முதலாளியிடம் இருந்து ஓடி வந்து வெளியில் வேலை செய்து கொண்டிருந்தான் எனது நண்பன் உஸ்மான். ஊருக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற முயற்சியில் இருந்தான். சிலர் அவனிடம் சிக்னலில் தண்ணீர் பாட்டில் விற்றால் உன்னை பிடித்து சிறையில் தள்ளி ஊருக்கு அனுப்பி விடுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே ஒரு வாரமாக சிக்னலில் தண்ணீர் விற்றான். பாட்டில்கள் காலியானதே தவிர காவல் துறை பிடித்த பாடில்லை. வெறுத்து போய் ஒரு காவல் துறை அன்பரிடமே போய் 'தண்ணீர் வேண்டுமா?' என்று கேட்க.. அவரோ ' நீ ஓடி வந்து ஊருக்கு போக முயற்சிக்கிறாய்... தற்போது இந்தியாவில் நிலைமை சரியில்லை... இன்னும் கொஞ்ச நாள் சம்பாதித்து விட்டுப் போ' என்று அவன் கையில் 10 ரியாலையும் தந்து விட்டு சென்றார்.  உஸ்மானுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
அதே போல் ஒரு முறை வியாழன் இரவு ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு இரண்டு மணிக்கு டாக்ஸி பிடித்து ரூமுக்கு வந்தேன். டாக்ஸி காரன் 'இரவு வெகு நேரமாகி விட்டது. உள்ளே வந்து விட்டு நான் தனியே திரும்புவது சிரமம்' என்று மெயின் ரோட்டிலேயே இறக்கி விட்டு சென்று விட்டான். எனக்கோ சரியான பயம். ஒரு போலீஸ் வண்டி வந்தது. அந்த வண்டியை கை காட்டினேன்.. நின்று 'என்ன?' என்று கேட்டார்.
'டாக்ஸிகாரன் வழியில் இறக்கி விட்டு சென்று விட்டான். உள்ளே சிறிது தூரம் போக வேண்டும். பயமாக உள்ளது' என்றேன். 'வண்டியில் ஏறு' என்று கூறி எனது ரூம் வரை கொண்டு வந்து விட்டார்.
அதே போல் நண்பர் தமீம் மளிகை கடையில் பிலிப்பைனி நிறைய பாக்கி வைத்திருந்தான். எவ்வளவு கேட்டும் தரவில்லை. இது பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது எனக்கு பழக்கமான காவல் துறை அதிகாரியிடம் இது பற்றி சொன்னேன். விலாசத்தை வாங்கினார். வாங்கிக் கொண்டு நேராக பிலிப்பைனியின் இருப்பிடத்திற்கே யூனிஃபார்மோடு சென்று 'பணத்தை தருகிறாயா? அல்லது மேலதிக நடவடிக்கை எடுக்கட்டுமா?' என்று கேட்க 'சம்பளம் வாங்கி தந்து விடுகிறேன்' என்று பிலிப்பைனி சொல்ல அதன்படி பணமும் வந்தது. இதற்காக அந்த அதிகாரி ஒரு பைசா கூட வாங்கவில்லை.
இது போல் சவுதி காவல் துறையைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். சிறு வயது முதலே இறை பக்தி ஊட்டப்படுவதால் அனைவரும் இறப்புக்குப் பிறகு ஒரு வாழ்க்கை உள்ளது அதற்காக நீதி நேர்மையோடு நடப்போம் என்று ஓரளவாவது நியாயத்தோடு நடக்கின்றனர்.
சவுதி காவல் துறையையும் சாத்தான் குளத்தில் அரை மணி நேரம் கடையை அதிகம் திறந்ததற்காக தந்தையையும் மகனையும் அடித்தே கொன்ற நமதூர் காவல் துறையையும் இங்கு ஒப்பிட்டு பார்க்கிறேன்.
எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பங்களாதேஷத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்களோடு காவல் துறையினர் உணவு உண்பதைத்தான் முதல் படத்தில் பார்க்கிறோம்.




1 comment:

Dr.Anburaj said...

சிறு வயது முதலே இறை பக்தி ஊட்டப்படுவதால் அனைவரும் இறப்புக்குப் பிறகு ஒரு வாழ்க்கை உள்ளது அதற்காக நீதி நேர்மையோடு நடப்போம் என்று ஓரளவாவது நியாயத்தோடு நடக்கின்றனர்.
-----------------------------------------------------------------------------------
இந்த பாக்கியம் இந்திய ஹிந்துக்களுக்கு இன்று வரை மறுக்கப்பட்டுவருகிறதே. மனம் வேதனை அடையவில்லையா ?