Followers

Monday, June 01, 2020

’யாரும் யாரையும் விட உயர்ந்தவர்கள் இல்லை’

’யாரும் யாரையும் விட உயர்ந்தவர்கள் இல்லை’ - இஸ்லாமியத்தில் தன்னை ஈர்த்த விஷயங்களைப் பகிர்ந்த யுவன்
இஸ்லாம் மதத்தில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்ற கேள்விக்கு யுவன் பதிலளித்துள்ளார்.
முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2016-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஷாஃப்ரூன் நிஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கினார் ஷாஃப்ரூன் நிஷா. அப்போது பலரும் யுவனின் மதம் மாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்குத் தகுந்த பதில் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து யுவனிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள், அதற்கு அவரே பதிலளிப்பார் என்று ஷாஃப்ரூன் நிஷா அறிவித்தார். அதில் யுவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:
கேள்வி: இஸ்லாம் மதத்தில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன?
யுவன்: இந்த கேள்வியைக் கேட்டதுமே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் யாரும் யாரையும் விட உயர்ந்தவர்கள் இல்லை என்பதுதான். நாம் தொழுகைக்கு செல்லும்போது நம் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அப்போது இவர்தான் முதலில் நிற்க வேண்டும் என்று யாருக்கும் முன்னுரிமை கிடையாது. இதுதான் என்னை முதலில் ஈர்த்த விஷயம்.
கேள்வி: குர்ஆனில் என்ன மாதிரியான விடைகள் உங்களுக்கு கிடைத்தது?
யுவன்: பொதுவாக நான்கு பேர் பேசிக் கொண்டிருக்கும்போது என்ன மாதிரியான கேள்விகள் வருமோ அவை எனக்கும் வந்தன. நாம் இறந்தபிறகு நம் ஆன்மா எங்கு செல்கிறது? நம்மை சுற்றி ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வுகள் ஏன் உள்ளது? இது போன்ற பலவகையான கேள்விகள் நமக்குள் வரும்? அந்த சமயத்தில் நான் குர்ஆனை எடுத்து படிக்கும்போது அதற்கான விடைகள் எனக்கு நேரடியாக கிடைத்தது போல இருந்தது. அதே வீட்டுக்கு ஒரு தலைவன், நாட்டுக்கு ஒரு தலைவன் இருப்பது போல உலகத்துக்கு ஒரு தலைவன் என்னும் விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.
-------------------------------------------------
2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை யுவன் திருமணம் செய்து கொண்டார். 2016-ம் ஆண்டு இந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஷாஃப்ரூன் நிஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.
நேற்று (மே 27) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளிக்கத் தொடங்கினார் ஷாஃப்ரூன் நிஷா. அப்போது பலரும் யுவனின் மதமாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதில் "ஏன் யுவனை முஸ்லிமாக மாற்றினீர்கள். நீங்கள் இந்துவாக மாறுவீர்களா?" என்ற கேள்விக்கு ஷாஃப்ரூன் நிஷா பதிலளித்திருப்பதாவது:
"அவர் இஸ்லாமைத் தேர்ந்தெடுத்ததில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இஸ்லாமைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகுதான் எனக்கு அவரைத் தெரியும். அவர் இஸ்லாமைத் தேர்ந்தெடுத்தார். ஏனென்றால் மற்ற மதங்களை விட அவருக்கு அது பிடித்திருந்தது. மிகப்பெரிய கேள்விகளுக்கான விடைகள் அவருக்கு குரானில் கிடைத்திருக்கின்றன. எங்கள் திருமணம் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
எங்களுடைய ஒரே எண்ண அலைவரிசைகளால் நாங்கள் இணைந்திருக்கிறோம். எங்களுடைய கடந்த காலங்களில் நாங்கள் எதிர்கொண்டவையும், வாழ்க்கையில் தினமும் வரும் அற்ப வார்த்தை சண்டைகளை விடவும் பெரிய விஷயங்களைப் பற்றிய எங்களுடைய உரையாடல் மூலமும் நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம். இஸ்லாமை விட முக்கியமான ஒன்றை நான் தேர்ந்தெடுப்பேன் என்றால் அதை நான் விவரிக்கிறேன்".
இவ்வாறு ஷாஃப்ரூன் நிஷா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து யுவன் இஸ்லாம் உடையில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, ''இப்படி மாற்றிவிட்டீர்களே?'' என்று கேட்க, அதற்கு ஷாஃப்ரூன் நிஷா, "வெறுப்பவர்கள் வெறுக்கட்டும், ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்று பதிலளித்துள்ளார்.
மேலும், "இளையராஜா சார் எவ்வளவு கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவர் பையனை இப்படி மாத்திடீங்களே" என்று ஒருவர் கேட்க, அதற்கு யுவனின் மனைவி, "மறுபடியும் அது உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. உங்களுக்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எப்படி மக்கள் இவ்வளவு முட்டாள்தனமாக இருக்க முடியும் என்று அதிர்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து "மக்கள் எப்படி இப்படி முட்டாளாக இருக்கிறார்கள் என்று கூட எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. யார் வேண்டுமானாலும் அவர்களது வெகுளியான மனதில் விஷத்தை கலக்க முடியும். எப்படியோ யுவனின் மனதில் விஷத்தைக் கலப்பதில் வெற்றி பெற்று விட்டீர்கள்" என்று ரசிகர் பதிலடி கொடுத்தார்.
யுவனின் மனைவியோ. "எனவே மனதில் விஷம் கலப்பது என்றால் என்ன என்று என்னிடம் சொல்லுங்கள். ஆனால் என் கணவர் இஸ்லாமுக்கு மாறிய பிறகுதான் நான் அவரைச் சந்தித்தேன். அவர் கடந்த 4 ஆண்டுகளாக முஸ்லிமாக இருக்கிறார்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தொடர்ச்சியாகப் பலரும் யுவனின் மதமாற்றம் தொடர்பாக கேட்க, இறுதியாக ஷாஃப்ரூன் நிஷா "நான் யுவனை அவருடைய நம்பிக்கை பற்றியும், அவர் ஏன் இஸ்லாமை தேர்வு செய்தார்? என்றும் நேரலையில் பேட்டி எடுக்கட்டுமா? அது உங்களுக்குப் போதுமா? உங்களில் பலர் எனக்கு தொடர்ந்து ஆர்வத்தில் மெசேஜ் அனுப்பி வருகிறீர்கள் அதனால் தான் கேட்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கேள்வி பதில்கள் அனைத்துமே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா பகிர்ந்திருக்கிறார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-05-2020


No comments: