Followers

Tuesday, June 02, 2020

மக்களுக்கான போலீஸ் அதிகாரி என்றால் எப்படி இருக்கவேண்டும்

மக்களுக்கான போலீஸ் அதிகாரி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான மிகப் பெரிய மானுட உதாரணம் இந்த ஆர்ட் ஏசிவேடோ..
ஹூஸ்டன் நகரம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பேரணி, கலவரங்களில் போலீசாரே தாக்கப்படுகிறார்கள்.. நம்ம ஊரில் என்றால் வேன் மீது ஏறி நின்று குறிபார்த்து சுடுவார்கள்.. இங்கே..?
ஹூஸ்டன் நகர காவல்த்துறை தலைவர் ஆர்ட் ஏசிவேடோவோடு சிஎன்என் செய்தியாளர் பேசுகிறார்.. அதன் தமிழாக்கம் இது..
--------------------------------
செய்தியாளர் : அனைத்து மாநில கவர்னர்களுடனும் ட்ரம்ப் கான்ஃபரன்சில் பேசுகிறார்.. அதில் சில கவர்னர்களிடம் அவர் சொல்லி இருக்கிறார் “நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள்.. நீங்கள் இப்படி பலவீனத்தை வெளிப்படுத்தக் கூடாது.. மக்கள் முன்னால் நாம் கோமாளிகளாகி நிற்கிறோம்.. நீங்கள் அதிகாரத்தை செலுத்த வேண்டும். அதிகாரத்தைக் நிலைநாட்ட வேண்டும்..”
இதைக் கேட்கும்போதே தனது எரிச்சலை அந்த சீஃப் ஆஃப் போலீஸ் தன் உடல் மொழியில் வெளிப்படுத்துகிறார்.
செய்தியாளர் தொடர்ந்து கேட்கிறார் : எனக்கு உங்கள் நிலைமை புரிகிறது.. அமெரிக்க அதிபருடைய இந்த கமெண்ட்டுக்கு நீங்கள் எந்த கருத்தையும் வெளியிட விரும்பவில்லை என்றால் அதை நாங்கள் புரிந்து கொள்வோம்.. ஆனால் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் போராடுபவர்களிடம் சென்று போலீஸ் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவது என்பது சரியான முடிவுதானா..? தாங்கள் பலவீனமானவர்கள் இல்லை என்று அவர்கள் நிரூபிக்கத்தான் வேண்டுமா.? இந்த மோசமான சூழ்நிலையில் போலீசார் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..?
இதைக் கேட்டதும் அந்த போலீஸ் சீஃப் சற்றும் யோசிக்காமல் பதில் சொல்கிறார்.
''அமெரிக்க அதிபருக்கு இந்த நாட்டிலிருக்கும் அனைத்து போலீஸ் சீஃப்களின் சார்பில் நான் சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.. ப்ளீஸ்.. உங்களால் ஆக்கபூர்வமாக எதுவும் சொல்ல முடியவில்லை என்றால்.. உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்.. / உங்கள் வாயை மூடியே வைத்திருங்கள்.. ஏனென்றால் நீங்கள் இருபதுகளின் வயதுகளில் இருக்கும் ஆண் பெண்களின் உயிரை பணயம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. இது நம் பலத்தைக் காட்ட வேண்டிய நேரம் இல்லை.. அவர்களது இதயங்களை வெல்ல வேண்டிய நேரம்.. ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்வோம்.. கருணையை / அன்பை பலவீனம் என்று புரிந்து கொள்ள வேண்டியதில்லை.. நான் நாடுமுழுக்க இருக்கும் எனது சக ஆபீசர்களின் சார்பில்தான் பேசுகிறேன்.. ஆபிசர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.. சமூகத்தின் சக மனிதர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதிகாரத்தை காண்பி என்பது மாதிரியான முட்டாள்தனமான வார்த்தைகளைத் தவிர சொல்வதற்கு வேறு ஏதும் இல்லை என்றால் நீங்கள் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது.. ஏனென்றால் நல்ல தலைவனுக்கு அதுதான் அடையாளம். இந்த கடினமான நேரத்தில் நமக்குத் தேவை நல்ல தலைவன்தான்.. அந்த தலைவனாக நீங்கள் இருக்க வேண்டி இருக்கிறது. தலைமைப் பண்பைக் காட்ட வேண்டியிருக்கிறது.. நாங்கள் உங்களுக்கு வோட்டுப்போட்டோமா இல்லையா என்பது தேவையே இல்லை.. இந்த தருணத்தில் நீங்கள்தான் அதிபர்.. ஒரு அதிபருக்கான தகுதியை நீங்கள் வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.. உங்கள் வலதுசாரி வீரத்தைக் காட்ட வேண்டிய தருணம் இதுவல்ல.. இது ஹாலிவுட் திரைப்படம் அல்ல. நிஜ வாழ்வு.. நிஜ உயிர்கள் பணயத்தில் இருக்கின்றன. என்னைக் கேட்டால் இது அமெரிக்க மக்களிடம் உரையாடும் தருணம்.. போலீசாரோடு நீங்களும் இணையுங்கள்.. நாம் ஒன்றிணைந்து நிற்போம்.. நமது கவனத்தை எல்லாம் வோட்டுகளின்மீது குவிக்க வேண்டிய தருணம் இது.. இதயங்கள் சொல்வதைக் கேட்க வேண்டிய நேரம் இது.. மறுபடி யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதே இந்த தருணத்தில் முக்கியம். அவர்கள் செங்கற்களையும் மற்ற கற்களையும் எறிந்து பொதுச் சொத்துகளை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..
ஆனால் வோட்டுப் போட வேண்டும் என்று அவர்கள் இதுவரை நினைக்கவே இல்லை.. உங்களுக்கு வேறு தேர்வே இல்லை.. உங்கள் குரல்களை உயர்த்த வேண்டிய நேரம் இதுதான்.. உங்கள் குரல்களை வோட்டிங் பூத்துகளில் தெரிவியுங்கள்.. உங்களது குரல்களை இந்த தருணத்தில் தேர்தலை நோக்கித் திருப்புங்கள்.. யாரை மறுபடி தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்.. உங்களது எதிர்ப்புப் பேரணிகளை அமைதியாக நடத்துங்கள்.. அப்போதுதான் நாம் சரியான நோக்கத்தோடு செயல்பட முடியும்.. நாம் நேர்மையாக சிந்திப்போம்.. தவறான காவலர்கள்,. கிரிமினல் காவலர்கள் ஆகியோரை அப்போதுதான் தனிமைப்படுத்த முடியும்..
சொல்லப் போனால் இது போலீசாரைத் தனிமைப்படுத்தும் தருணமே அல்ல.. இது போலிசிங் பற்றிய விஷயமே இல்லை.. இது இந்த நாட்டில் நடக்கும் சமூக அநீதி பற்றிப் பேச வேண்டிய தருணம்.. நம் நாட்டில் நடக்கும் அறமற்ற செயல்கள் பற்றி பேச வேணடிய தருணம். கல்வி, சுகாதாரம்,, உணவு என்று மனிதனுக்குத் தேவையான அனைத்திலும் தேவைப்படும் சமூக சமத்துவம் பற்றிப் பேச வேண்டிய தருணம் இது. ஆகவே தயவு செய்து தவறாக எதிர்வினையாற்றாதீர்கள்.. நாம் ஒருவரை ஒருவர் அன்போடு அணைத்தபடி நடக்க வேண்டிய தருணம் இது.. வெறுப்பைக் கடந்து வர சரியான ஆயுதம் அன்பு மட்டுமே.. அன்பின் மீது கவனம் வைப்போம்.. இதயங்களோடு பேசுவோம்.. தவறாமல் நமது வாக்குரிமையை செலுத்துவோம்..''
என்று முடிக்கிறார்.
கிட்டத்தட்ட டிரம்ப்புக்கு எதிராக வோட்டுப் போடுங்கள். அந்தாளை பதவியிலிருந்து துரத்துங்கள் என்று வெளிப்படையாகப் பேசுகிறார்..
இந்த மாதிரி நம் நாட்டில் பேசிவிட்டுத் தப்பிவிட முடியுமா.? சாதாரண மனிதரை விடுங்கள்.. ஒரு மாநகரத்தின் காவல்துறை தலைவராக இருந்து கொண்டு அதிபருக்கு எதிராக இப்படி பேசித்தான் விட முடியுமா..?
உண்மைலயே நீ கெத்துய்யா.. செம்ம கெத்து..
- நந்தன் ஸ்ரீதரன்
ட்ரம்புக்கு கூறிய அதே வார்த்தைகள் உலகின் பல சர்வாதிகார அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். நம்ம மோடிக்கும் அமித்ஷாவுக்கும் மிகச் சரியாக பொருந்தும்.


1 comment:

vara vijay said...

He is a proud kaffir. And this is possible only in a democratic country. Where as in AMERICAN JEWISH WAHABI SLAVE COUNTRY HIS THROAT WILL BE SLICED IN NOTIME.