நான் இந்து இல்ல; நான் இப்ப பள்ளனும் இல்ல
ஜாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!
முகம்மது பிலால் வியாழன், 06 செப்டம்பர் 2012 23:39
நான் 6.12.1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று, அம்பேத்கர் நினைவு நாளில் சென்னை அசோக் நகர் பள்ளி வாசலில் 1000 பேருடன் இஸ்லாம் தழுவினேன். அதில் 300 பேர் தாழ்த்தப்பட்டவர்கள்.
இதற்கு முன்பே 1981 இல் தென் மாவட்டங்களில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா போன்றோரின் தலைமையில், மிகப்பெரிய மதமாற்றம் மீனாட்சிபுரத்தில் நடந்தது என்பது பலருக்கும் தெரியும்.
குறிப்பாக, பள்ளர்கள் அதிகமாக இஸ்லாம் தழுவினார்கள்.
பொதுவாக தங்களுக்கு நடக்கிற பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடுகிற, எதிர்க்கிற, எதிர்த்துத் தாக்குகிற குணம் பள்ளர்களுக்கு உண்டு. வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க. இயல்பாகவே அப்படி ஒரு குணம். அந்த குணங்களுக்கு ஏற்றதாகக்கூட இஸ்லாத்தை தழுவியிருக்கலாம்.
மதமாற்றத்தில் ஈடுபடுகிற பலருக்கும் பல நோக்கங்கள் இருக்கும். ஒருத்தர் நான் இந்து இல்லன்னு சொல்லி மதம் மாறுவார். இன்னொருத்தர் சாதிக் கொடுமைகள் இருக்கு, அதனால மதம் மாறுகிறோம்னு சொல்லுவார். இன்னும் சிலர் சலுகைக்காக மதம் மாறுகிறோம்னு சொல்லுவாங்க.
ஆனா, மதமாற்றத்தில் நான் முன் வைத்த கருத்து – "பிறவி இழிவு நீங்க வேண்டும்' பொறக்கும்போது பள்ளனா பொறந்திட்டேன். என் பிள்ளைகளும் பள்ளர்களாகப் பிறக்கணும்னு என்ன அவசியம் வேண்டியிருக்கு. இத யார் தீர்மானிக்கிறது? நான் பள்ளனா பொறந்திட்டேன்.
என்னுடைய அடுத்த தலைமுறை பள்ளனா பொறக்கக்கூடாது அதுக்கு உடனடித் தீர்வு இஸ்லாம். இப்ப என் பேரனுங்கள பள்ளன்னு கூப்பாடு போட்டு சொன்னாலும் யாரும் நம்பப் போறதில்ல.
அவன் யாருன்னு ஜமாத்துக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். ஒரு தலைமுறை மாறிடுச்சு. பையன கொடுத்தோம், பெண் எடுத்தோம்.
இந்த மாதிரியான மாற்றம் நம்முடைய பிறவியிலேயே ஏற்படுணும்னா, அதுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான்.
மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்துவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது.
மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம்.
ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மதமாற்றம் மட்டுமல்ல, உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.
இந்தத் தலைமுறைக்கு அது போதும்.
மறந்தும் இந்த மதத்தோட எந்தத் தன்மையும் உன்னை பாதிக்காது. இத பவுத்தத்தில இருந்து உன்னால சொல்ல முடியாது; கிறித்துவரா இருந்தும் சொல்ல முடியாது. இரண்டிலும் இந்து மதம் நம்மள இழி பிறவியா நடத்துற எல்லா விசயமும் அதுக்குள்ள இருக்குது. பள்ளர்கள் எப்பவோ இஸ்லாம் மதத்தைத் தழுவிவிட்டார்கள் என்று சொல்ல முடியும்.
12 ஆம் நூற்றாண்டில் தென் மாவட்டத்தில் ஒருத்தர்கூட தலித் இஸ்லாமியர் இல்லை.
இந்தக் காலகட்டத்தில்தான் நாகர்மலை, சமணர்மலை, யானைமலை போன்ற பகுதிகளை சைவர்கள் கைப்பற்றுகிறார்கள். மிகப்பெரிய சைவப் போராட்டம் நடக்கிறது. சைவம் எப்படி சமணத்தை வீழ்த்தியதோ, அதைப் போலவே சைவத்தை வீழ்த்த வேண்டும்; சைவத்தை வீழ்த்த வேண்டுமானால், அதை எதிர்க்கின்ற, வீழ்த்துகின்ற சக்தியுடைய ஒன்றோடு கூட்டுச் சேர வேண்டும்.
சமணத்தையோ, பவுத்தத்தையோ கூட்டு சேர்க்க முடியாது. அதுதான் வீழ்ந்து கிடக்குதே.
அப்ப அதை எதிர்க்கிற மதமாக இருந்தது இஸ்லாம்தான்.
இந்த மோதலில் செத்துக் கொண்டிருந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள்தான். அதனால் அவர்கள் இஸ்லாம் மாறி இருக்கலாம்.
நான் இருக்கிற சோழவந்தான் பகுதி முழுவதும் சைவ மதம் அட்டூழியம் பண்ணிய இடம். இன்னைக்கும் அந்த பாதிப்பு இருக்குது. அது யாருக்கும் தெரியல.
எனக்கு பள்ளர் – பறையர்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியல. என்னுடைய அதிக காலம் வடக்கேதான் கழிஞ்சது. தந்தை சிவராஜ்தான் தலைவர். பிரச்சனைகள் வடக்கே ஒரு மாதிரியா இருக்கலாம், தெற்கே ஒரு மாதிரியா இருக்கலாம்.
பவுத்தத்தில் கிறித்துவத்தில் சில நல்லதுக இருக்கலாம். சலுகைகள் கிடைக்கலாம். அது, அவரவர் தேவையைப் பொருத்தது. நான் இஸ்லாமியரா இருக்கிறேன்.
ஏற்கனவே இந்த சமூகம் என் பாட்டன், பாட்டிய பேசின இழிந்த நிலையை இப்ப எங்கிட்ட பேச முடியாது.
அதுதான் எனக்குக் கிடைச்ச விடுதலையா பார்க்கிறேன்.
நான் இந்து இல்ல; நான் இப்ப பள்ளனும் இல்ல;
ஜாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!
நேர்காணல் : அன்பு செல்வம்