Followers

Saturday, May 30, 2020

10 வருடங்களுக்கு முன்பு ரியாத் ரப்வாவில் நிகழ்ந்த நிகழ்வு!

10 வருடங்களுக்கு முன்பு ரியாத் ரப்வாவில் நிகழ்ந்த நிகழ்வு!
இந்த வாரம் வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் எனது ரூமில் ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலை நேரம் முடிந்து சினிமா சாப்பாடு மற்ற கேளிக்கைகள் என்ற ரீதியில் செயல்படும் பெரும்பான்மையோரை மாதம் ஒரு முறை இது போன்று அழைத்து அவர்களுக்கு வாழ்வின் நோக்கத்தை புரிய வைப்போம் என்று முடிவெடுத்தோம். இது போல் முன்பே பல சகோதரர்கள் சிறப்பாக மார்க்க பணி செய்து வருகின்றனர். அந்த வகையில் சகோதரர் இக்பால் அவர்கள் 'தக்வா' அதாவது 'இறை அச்சம்' என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் அழகிய முறையில் சொற்பொழிவு ஆற்றினார். முதலில் தக்வா என்றால் என்ன என்பதை பார்த்து விடுவோம்.
தக்வா எனும் அரபுச் சொல், விகாயா என்ற வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் "தற்காத்தல்" என்று பொருளாகும். இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருளில் தக்வா எனும் சொல், இறைமறை வழக்கில் "இறையச்சம் - பயபக்தி" என்று பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவன் நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். எனவே, பாவச் செயல்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்கிறோம் என்னும் எண்ண உறுதியை ஏற்படுத்துவது "தக்வா"வாகும்.
இந்த தலைப்பில் சகோதரர் ஒரு நபி மொழியையும் மேற் கோளாக காட்டினார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் 'நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!" என்று தமக்குள் கூறினர்.
அவர்களில் ஒருவர் 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். விடியற்காலை நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!
மற்றொருவர், 'இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, 'முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!" என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், 'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!"
என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார்.
ஆதாரம்: புஹாரி: 2272.
Volume :2 Book :37
ஒரு மனிதனுக்கு இறை அச்சம் இருந்தால் அது எந்த அளவு சமூகத்தில் அவனை நேர்மையாளனாக நடக்க வைக்கும் என்பதற்கு மேற்சொன்ன நபிமொழி சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
இந்த கூட்டத்தை சகோதரர் நெல்லிக் குப்பம் அக்பர் அவர்கள் துவக்கி வைத்தார். கூட்டத்தின் முடிவில் அடுத்த அமர்வில் இன்னும் நிறைய சகோதரர்களை அழைத்து வருவது என்றும் மாற்று மத நண்பர்களுக்கும் அழைப்பு விடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மதுரை காதர், விழுப்புரம் அன்வர் போன்ற சகோதரர்களும் வந்திருந்தனர். அடுத்த கூட்டத்தை இன்னும் சிறப்பாக நடத்துவோம் என்ற முடிவில் இறை பிரார்த்தனையோடு கூட்டம் நிறைவுற்றது.


No comments: