நேற்று(10.5.20) காலையில் வழக்கம்போல நாங்கள் வாக்கிங் போகும் வண்டலூர்-மீஞ்சூர் சுற்றுவட்டச்சாலையில் கிட்டத்தட்ட 10 வட இந்திய மாநிலத் தொழிலாளர்கள் எதிர்ப்புறமாக நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும் சாலை, ஒருகட்டத்தில் பாலத்தில் dead end ஆக முடியக்கூடியது.
சந்தேகப்பட்டு அவர்களிடம் விசாரிக்கையில், ஆந்திரா செல்வதாக ஹிந்தியில் கூறினார்கள். ஆனால் அந்த சாலை dead end என்பதால், சர்வீஸ் சாலை வழியாகச் செல்ல வேண்டுமென்று கூறவும், திரும்பிவந்து சர்வீஸ் சாலையில் நடக்கத் தொடங்கினார்கள். என் மனைவிக்கு ஹிந்தி தெரியும். எனவே ஹிந்தியில் அவர்கள் சரியாகச்செல்லும் ஊர் என்னவென்று கேட்டதும் உத்தரபிரதேசம் கோரக்பூர் என்றார்கள். யோகி ஆதித்யநாத்தைக் குறிப்பிட்டு, அவரது ஊர் என்றும் கூறினார்கள். அதாவது, ஆந்திரா வழியாக உத்தரபிரதேசம் நோக்கி நடந்தே செல்லும் எண்ணத்தில் நடக்கிறார்கள். கேட்டதுமே தூக்கிவாரிப்போட்டது!
அவர்களுக்கு கூகுள் மேப் பயன்படுத்தக்கூடத் தெரியவில்லை. அப்போதைக்கு அவர்களிடம் மெயின் ரோட்டுக்குச் சென்றால் லாரி வசதி எதாவது கிடைக்கும் என்ற யோசனையைக் கூறிவிட்டு, அவர்களில் ஒருவரின் எண்ணை மட்டும் வாங்கிக்கொண்டேன்.
வீட்டுக்கு வரும்வழியில் ஏகப்பட்ட குழப்ப மனநிலை. ஒருபக்கம் நாம சந்தோசமா வாக்கிங் போறோம். இன்னொருபக்கம், குடும்பத்தைத்தேடி பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்லும் வர்க்கம். அவர்களுக்கு முறைப்படி உதவுவதற்கான வழிமுறையை விசாரித்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல் மிஸ்ரா, திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் ஆகியோரைத் தொடர்புகொண்டேன். திருவள்ளூர் எஸ்.பி, அவர்களை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாகக்கூறி அவர்களைத் தொடர்புகொள்ளும் எண்ணைப் பெற்றுக்கொண்டார். புகைப்படங்களையும் அனுப்பிவைத்துள்ளேன். இப்போதுதான் சற்று நிம்மதி.
இந்த அகண்ட பாரதத்தில், திக்குத்திசை தெரியாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்றுவரை இப்படித்தான் நெடுஞ்சாலைகளில் நடந்துகொண்டிருக்கிறார்கள்...
அவர்களின் உறவுகளைத்தேடி...
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
1 comment:
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!
தாயுமானவர்.
Post a Comment