கண் இருந்தும் நாம் இறை வேதத்தை ஓதுவதில்லை!
இங்கு கண் பார்வை தெரியாத சிறுவர்கள் இறை வேதமான குர்ஆனை அழகுடன் ஓதுவதை காணுங்கள்.
----------------------------------------
முகமது நபியையே கண்டிக்கும் குர்ஆனிய வசனம்!
'தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர் (முகம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.'
80 : 1, 2 -குர்ஆன்
ஒரு முறை முகமது நபி உயர் குலத்தவரான குரைஷிகளிடம் இஸ்லாமிய போதனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்கள் 'முகம்மதே! நீர் சொல்லும் கொள்கைகள் நன்றாகத்தான் இருக்கிறது. ஒரே இறைவனை ஏற்க்கச் சொல்கிறீர். ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. கருப்பு அடிமைகளோடு எங்களையும் ஒன்றாக உடகார வைத்து போதிக்கிறீரே அது தான் எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. எங்களுக்கு ஒரு நாள் அந்த அடிமைகளுக்கு வேறொரு நாள் என்று பிரித்து உபதேசம் செய்தால் உம்முடைய கோரிக்கையை பரிசீலிக்கிறோம்' என்ற ரீதியில் கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர்.
இதன் மூலம் நம் நாட்டு பிராமணியத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அந்த மக்களிடத்தில் நிற வெறியும் குலப் பெருமையும் நிறைந்திருந்ததை விளங்க முடிகிறது. முகமது நபியும் சிறிது யோசிக்கிறார்கள். முதலில் அவர்கள் கோரிக்கையை ஏற்று இஸ்லாத்துக்குள் வரவழைப்போம். பிறகு நம்முடைய பிரச்சாரத்தால் அவர்களின் நிற வெறியை போக்கி விடலாம் என்று மனதுக்குள் நினைத்தவராக மேற்க் கொண்டு குரைஷிகளிடம் பேச முகமது நபி முற்படுகிறார்.
அந்த நேரத்தில் அந்த சமுதாயத்தில் இழிவாக கருதப்பட்டவரான அப்துல்லா என்பவர் அந்த இடத்துக்கு வருகிறார். இவருக்கு கண் தெரியாது. முகமது நபி சிலருடன் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட இந்த குருடர் 'இறைவனின் தூதரே! அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறுகிறார். இதை முகமது நபி விரும்பவில்லை. அங்கு பிரச்சினையே இது போன்ற இழி குலத்தவர் குறிப்பிட்ட சபைக்கு வரக் கூடாது என்பதே! எனவே முகமது நபி முகத்தை சற்று கடுகடுப்பாக்கிக் கொண்டு அப்துல்லாவுக்கு பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். அப்துல்லாவும் 'இறைவனின் தூதர் ஏதோ சங்கடத்தில் இருக்கிறாரபோல' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார்.
இந்த நேரத்தில் தான் இறைவனிடமிருந்து ஒரு வசனம் இறங்குகிறது.
'தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர் (முகம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது முகம்மதே உமக்கு எப்படி தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.'
'யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகா விட்டால் உம் மீது (குற்றம்) ஏதும் இல்லை. இறைவனை அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார்.'
80 : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 - குர்ஆன்
முகமது நபி கோபம் அடைந்ததோ, முகத்தை சுளித்ததோ கண் தெரியாத இந்த மனிதருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்காது. அவர்கள் முகத்தை சுளித்துக் கொண்டு உயர் குலத்தவரோடு பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.
ஆனால் உடனடியாக இறைவன் புறத்திலிருந்து எச்சரிக்கை வருகிறது.
உம்மை ஆர்வத்தோடு தேடி வருகின்ற இந்த குருடரை உயர் குலத்தவருக்காக விரட்டி அடிக்கிறீரா? என்று இறைவன் முகமது நபியைக் கண்டிக்கிறான்.
குர்ஆன் முழுக்க ஒவ்வொரு வசனத்திலும் 'முகம்மதே! மக்களுக்குக் கூறுவீராக!' என்று அடிக்கடி நேரிடையாகக் குறிப்பிடும் இறைவன், இந்த குறிப்பிட்ட வசனத்தில் மட்டும் ஏதோ ஓர் மூன்றாம் மனிதரிடம் பேசுவது போல் 'இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்' என்ற ரீதியில் வசனம் அமைந்திருப்பதிலிருந்து இறைவனின் கோபம் நமக்கும் விளங்குகிறது.
இப்படி ஒரு சம்பவம் நடந்தது அந்த குருடருக்கே மற்றவர்கள் சொல்லித்தான் தெரிகிறது. இந்த சம்பவம் நமக்கு ஒரு உண்மையை விளக்குகிறது.
குர்ஆனை முகமது நபி தாமே சொந்தமாக உருவாக்கியிருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்கின்ற ஒரு வாசகத்தைத் தமக்கு எதிராக அவர்கள் உருவாக்கியிருக்க முடியாது.
காலா காலத்துக்கும் இந்த வேதத்தைப் படிப்பவர்களெல்லாம் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து இந்த வசனத்தை நீக்கியும் இருக்கலாம். யாருக்கும் தெரியப் போவதில்லை.
குர்ஆன் முகமது நபி உருவாக்கியது அல்ல என்பதாலும் இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதாலும் தான் இதைக் கூட நபிகள் நாயகம் அவர்கள் அந்தக் குருடர் மத்தியிலும் தம்மைப் பெரிதும் மதிக்கின்ற சமுதாயத்தின் மத்தியிலும் 'இறைவனே என்னைக் கண்டித்து விட்டான்' என்று பிரகடனம் செய்கிறார்கள்.
இந்தக் குர்ஆன் இறைவன் அருளியதுதான் என்பதற்கு இந்த சம்பவத்தை சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.அது மட்டுமல்லாமல் முகமது நபியே ஆனாலும் அவர்கள் இறைவன் விருப்பத்திற்கு மாற்றமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லை என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது.
செய்பவர் யார் என்று பார்த்து இறைவன் நீதி வழங்க மாட்டான். செய்யப் படும் காரியத்தைத்தான் அவன் பார்ப்பான் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
ஒரு சாதாரண மனிதராகக் கருதப்பட்ட கண் தெரியாதவருக்காக தனது தூதரையே இறைவன் கண்டிக்கிறான் என்றால் இது எவ்வளவு அற்புதமான ஒரு மார்க்கம்! இது போன்ற ஒரு கடவுள் கொள்கையினால் மனித குலத்திற்கு எவ்வளவு பயன் கிட்டும் என்பதை எல்லாம் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
முகமது நபி கூட இந்த சம்பவத்திற்கு பிறகு அப்துல்லா இப்னு மக்தூம் என்ற அந்தக் குருடரிடத்தில் முன்பிருந்ததை விட அதிக மரியாதையோடு நடந்து கொண்ட வரலாற்றையும் பார்க்கிறோம்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
சுவனப்பிரியன்.
1 comment:
Comedy story
Post a Comment