Followers

Tuesday, May 12, 2020

ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்

ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்
சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஸாலிஹ் நபி.
சவுதி அரேபியாவில் உள்ள மதாயன ஷாலிஹ் என்ற இடத்தில் பெரும்பாறைகளை குடைந்து அவர்கள் வாழ்ந்த குகை வீடுகள் இப்போதும் உள்ளன. மதீனாவிலிருந்து 405 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் மதாயன ஷாலிஹ் உள்ளது. மக்காவிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அல் ஊலா என்ற ஊரிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. அங்குதான் ஹிஜ்ர் பகுதி உள்ளது. இப்போது அதை ‘மதாயின் ஸாலிஹ்’ -(ஸாலிஹ் (அலை) அவர்கள் வசித்த ஊர்) என்று அழைக்கின்றார்கள்.
இந்த மக்கள் பேசிய மொழி அரபி மொழியாகும். இறைவன் அனுப்பிய தூதர்களில் அரபுகளாக அறியப்படுபவர்கள் நான்கு பேர். 1.நபி ஹூத், 2. நபி ஷூஐப், 3.நபி சாலிஹ், 4.நபிகள் நாயகம்.
காலை தொழுகையை முடித்துக் கொண்டு நானும் மதுரையை சேர்ந்த நைனார் முஹம்மதும், ஒரு கேரள அன்பரும் சேர்ந்து கம்பெனி வண்டியில் கிளம்பினோம். நாங்கள் நினைத்தது தூரம் 300 கிலோமீட்டரே! ஆனால் அந்த இடம் வர கிட்டத்தட்ட 550 கிலோ மீட்டர் ஆகி விட்டது.
இந்த இடத்துக்கு செல்பவர்கள் முதலில் அல்ஊலாவில் இருக்கும் அரசு அலுவலகத்தில் சென்று அனுமதி பத்திரம் வாங்க வேண்டும். இது தெரியாமல் நாங்கள் நேரிடையாக சென்று விட்டோம். எங்களை உள்ளே விட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பிறகு நான் அவர்களிடம் 500 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வருகிறேன்: என்று அரை மணி நேரத்துக்கு மேலாக வாதிட்டு அதன் பிறகு அனுமதி வாங்கினோம். அரபி மொழி தெரிந்ததால் அனுமதி பத்திரம் இல்லாமலேயே எங்களுக்கு அனுமதி கிடைத்தது. சிரமத்தை தவிர்க்க இங்கு செல்பவர்கள் முதலில் அல் ஊலா சென்று அனுமதி வாங்கி விட்டு வரவும்.
கடும் பலம் வாய்ந்த சமுதாயமாக படைக்கப் பட்டிந்த ஸமூத் கூட்டத்தினர், சிலைகளை வணங்கிக் கொண்டும், ஆடம்பர வாழ்க்கையில் திலைத்துக் கொண்டும், மலைகளைக் குடைந்து, கோட்டைகள் கட்டி வாழ்ந்தும் வந்தார்கள். தோட்டங்களும் நீரூற்றுக்களும் வேளாண்மைகளும் பேரீத்தத் தோட்டங்களும் அங்கு மிகுந்து காணப்பட்டன.
இவர்கள் வீட்டின் வாயில்கள் மிகவும் உயரமாக உள்ளது. அந்த அளவு உயரமான மக்களாக இருந்துள்ளனர். மலைகளையே குடைந்து வீடு அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அத்தகைய வலிமை மிக்க சமூகமாக இவர்கள் வாழ்ந்துள்ளார்கள். போகும் வழியெங்கும் அந்த ஊர் இறைவன் சாபத்திற்குரிய ஊர் என்பதை நினைவுபடுத்தும் முகமாக எங்கும் அழிவின் காட்சிகள் காணக்கிடைக்கும்.
நமது நாட்டு கோவில்களை ஒத்து சில இடங்களில் சித்திரங்களும் செதுக்கியுள்ளனர். அழகிய வேலைப்பாடுகள். பல தெய்வ வணக்கம் புரியும் நம் நாட்டு மக்களின் கலாசாரமும் இந்த மக்களிடமும் இருந்ததை இந்த கட்டிடங்கள் இன்றும் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன.
அவர்களிடம் நபியாக அனுப்பப்பட்ட ஸாலிஹ் (அலை) அவர்களின் ஓரிறைக் கொள்கையையும் தூதுத்துவப் பிரச்சாரத்தையும் ஏற்க மறுத்தனர்.
'ஸாலிஹே! இதற்கு முன் எங்களிடம் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர். எங்கள் முன்னோர்கள் எதை வணங்கினோமோ அதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? நீர் எதற்கு எங்களை அழைக்கிறீரோ அதில் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்' என்று அவர்கள் கூறினர்.
-குர்ஆன் 11:62
நீங்கள் இறைத்தூதர் என்பதற்கு ஏதேனும் அத்தாட்சியை கொண்டு வந்தால்தான் உங்களை நபியாக ஏற்போம் என்றனர். இவ்வாறு முறையிடுவது அவர்களுக்கு சோதனையாகவும் தண்டனையாகவும் அமைந்து விடும் என்பதை புரியாத அவர்கள் தம் கோரிக்கையில் பிடிவாதமாகவும் இருந்தனர்.
அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, கண்கூடான அத்தாட்சியாக பெண் ஒட்டகம் ஒன்றை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.
"நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்பதற்கு இதோ நீங்கள் கேட்ட அத்தாட்சி! இதனை எந்த தொந்தரவும் செய்யாமல் பூமியில் மேய விட்டு விடுங்கள்! அதற்கென தண்ணீர் அருந்தும் நாள் ஒன்றை ஒதுக்கிவிடுங்கள்! இதற்கு தீங்கிழைத்தால் அல்லாஹ்வின் தண்டனையை சந்திக்க நேரிடும்" என்று ஸாலிஹ் (அலை) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
அந்த சமுதாயத்தில் மதிப்பும், பலமும் வாய்ந்த, திமிர் பிடித்த ஒருவன் ஸாலிஹ் (அலை) அவர்களின் உபதேசத்தையும், எச்சரிக்கையும் மீறி அந்த அற்புத ஒட்டகத்தை அறுத்து விட்டு, "ஸாலிஹே! நீர் உண்மையில் அல்லாஹ்வுடைய தூதராக இருந்தால் நீர் வாக்களித்த தண்டனையை கொண்டு வாரும்!" என்றான்.
"மூன்று நாட்கள் வரை உங்கள் வீடுகளில் சுகம் அனுபவியுங்கள்! இது பொய்ப்பிக்கப்படாத வாக்காகும்" என்றார்கள் ஸாலிஹ் (அலை) அவர்கள். மூன்று நாட்கள் முடிந்தன.
“இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
- அல்குர்அன் 11:61
(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
-அல்குர்ஆன் 15:80-82
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
-அல்குர்ஆன் 89:9
ஸமூது கூட்டத்தினர் ஒன்பது வன்முறை கூட்டத்தினர்களாக இருந்து பல தெய்வ வணக்கம் செய்தல், கொள்ளை அடித்தல், அக்கிரம செயல்கள் புரிதல் போன்றவைகளில் பரவலாக ஈடுபட்டனர். அப்பொழுது அல்லாஹ் அதிசயமான உருவத்துடன் ஒரு ஒட்டகத்தை படைத்து அவர்களிடையே நடக்க செய்தான். அவ்வொட்டகத்தை எந்த ஒரு துன்பமும் செய்யாமலிருக்க கட்டளையிட்டான்.
அவர்கள் இறையானைக்கு சவால் விட்டு அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள். அதிகாலை நேரத்தில் அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கியது.
“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).
ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.
நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்.
-அல்குர்ஆன் 11:64-67
இந்த இடங்களை பார்க்கும் நமக்கு இறைவனின் தண்டனை எப்படி இருக்கும் என்ற எண்ணம் நம் மனதில் வர வேண்டும். நேரம் கிடைப்பவர்கள் இந்த இடங்களை சென்று பார்வையிடவும்.
(இந்த பதிவானது பல ஆண்டுகளுக்கு முன் எழுதியது. இது ஒரு மீள் பதிவு)






1 comment:

Dr.Anburaj said...


01) அதெல்லாம் கட்டுக்கதை. நபி என்று யாரையும் இறைவன் அனுப்பவில்லை.

02) ஆதாமை ஏவாளை அம்மணமாகப் படைத்த அல்லாவிற்கு சிலை வணக்கம் பாவம் என்று
சொல்லும் அருகதை குரானுக்கு கிடையாது.
03. நாகரீகங்கள் பல இப்படி அழிந்திருக்கின்றன்.போா் தொற்று நோய் போன்ற காரணங்களால் ஏராளமாக நாகரீகங்கள் அழிந்திருக்கின்றன.
04.அப்படிப்பட்ட காரணம் இருக்க வேண்டும்.சு..ன் அண்டப்புளுகு புளுகுவதில் வல்லவா்.
05. இந்த நாகரீகம் அழிந்ததற்கு தொல்லியில் ஆராய்ச்சியாளர்கள் வேறு காரணங்களை பதிவு செய்திருப்பார்கள். அதை பதிவு செய்வாரா சு..ன்.