Followers

Wednesday, May 18, 2016

அரசு வழக்கறிஞரை மாற்று: புரோகிதுக்கு கிளீன் ஷீட் கொடு!





கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன. 2007 நவம்பர் 11-ம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் தில்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், ஹரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது.

அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மாலேகான் நகரில் 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்பு சம்பவங்களில் மொத்தம் 111 பேர் கொல்லப்பட்டனர். 398 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் முதலில் முஸ்லிம்களே ஈடுபட்டிருக்க கூடும் என்ற அடிப்படையில் கைது நடவடிக்கைகள் அரங்கேறியது. இதற்கிடையில் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருளை முன்னாள் இராணுவ அதிகாரியான ஸ்ரீகாந்த் புரோகித் ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. ஜெனரல் புரோகித் கொடுத்த தகவலின்படி சுதாகர் சதுர்வேதி என்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் பெருந்தொகையான ஆர்டிஎக்ஸ் கைப்பற்றப்பட்டது. இதனை கைப்பற்றியது மத்திய புலனாய்வு அதிகாரி சேகர் பக்டே. தேச விரோத செயலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை கவனியுங்கள். எந்த சாதி என்பதையும் கவனியுங்கள்.

சங்பரிவாருடன் தொடர்புடைய அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்து குண்டு வெடிப்பு நாச வேலையை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும் மாலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த தொடர்பை உறுதி படுத்தும் வகையில் இக்குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் (ஏபிவிபி ) எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே தலைமையிலான குழு புலன்விசாரணை நடத்தி உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டில் பிரஞ்க்யா சிங், முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார்.

இதற்கிடையில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்க்கரே மர்மான முறையில் கொல்லப்பட்டார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சிபிஐ தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சங் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டதை உறுதிபடுத்தின.

இதனடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதியன்று தில்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டு வரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.இந்நிலையில் பாஜக மகாராஷ்டிரா மற்றும் மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த வழக்கை நீர்த்து போக செய்வதற்கான அனைத்து வேலைகளிலும் இறங்கியிருக்கிறது. இதற்கிடையில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை இந்த மாதம் 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ரோகிணி சலியன் நீதி மன்றத்தில் ஆஜராகி திடுக்கிடும் தகவலை நீதிபதியிடம் தெரிவித்தார்.

வழக்கறிஞர் ரோகிணி சலியன் நீதிபதியிடம், “தேசிய புலனாய்வு அமைப்பு உயர் அதிகாரி என்னை தொலைபேசியில் அழைத்து இந்து தீவிரவாதிகள் பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இது பற்றி உங்களிடம் பேசவேண்டும். தொலைபேசியில் பேச விரும்பவில்லை, நேரில் வருகிறேன் என்று தெரிவித்தார். பின்னர் அவர் நேரில் என்னிடம் வந்து, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு உங்களால் முடியாவிட்டால், வழக்கு விசாரணையில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். வேறு வக்கீல் இந்த வழக்கில் ஆஜராவார் என்று என்னிடம் கூறினார்” என்று தெரிவித்தார். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பெண் வழக்கறிஞரை தேசிய புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி மிரட்டியதாக அந்த பெண் வழக்கறிஞரே நீதிமன்றத்தில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அன்று.

இது குறித்து ரோகிணி சலியன் பத்திரிகையாளர்களிடம் கூறியிருப்பதாவது, "அரசிடம் இருந்து வரும் செய்தி மிக தெளிவாக இருக்கிறது. மாலேகான் வழக்கில் நேர்மையான முறையில் குற்றவாளிகளை தண்டிக்கும் விதத்தில் நீதிமன்றத்தில் இருந்து உத்தரவுகள் பெறக்கூடாது. குற்றவாளிகளுக்கு ஆதரவான உத்தரவுகள் பெறலாம் என்பதே. அதாவது இந்த சமூகத்திற்கு எதிராக என்னை செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்" என குற்றஞ்சாட்டினார். இத்தனை ஆதாரங்கள் அடுக்கடுக்காக இருந்தும் அரசு வழக்கறிஞர்களை மாற்றி இன்று குற்றவாளிகளான ஈந்துத்வா தேச விரோதிகள் புரோகித், பிரக்யாசிங்கை விடுவிக்க மோடி அரசு முயல்கிறது. இது நாம் எதிர்பார்த்ததே!

இன்று மோடி அரசால் புரோகித், பிரக்யாசிங் போன்ற இந்துத்வா தேச விரோதிகளுக்கு கிளீன் ஷீட் கொடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் விடுதலை செய்யப்படலாம். திரும்பவும் ஆர்டிஎக்ஸ் ராணுவத்திலிருந்து கடத்தப்படும். மீண்டும் எல்லா இடங்களிலும் குண்டுகள் வெடிக்கும். மோடி அரசு சந்தேகத்தின் பேரில் முஸ்லிம்களை கைது செய்து சிறையிலடைக்கும். முஸ்லிம்களும் விசாரணக் கைதிகளாக பத்து வருடம் பதினைந்து வருடம் என்று சிறையில் வாடுவார்கள். புரோகித்தும் பிரக்யா சிங்கும், அசீமானந்தாவும் 'போலோ பாரத் மாதா கீ ஜே' என்று ஆனந்த கூத்தாடுவார்கள். அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்வாவினரும் அந்த நடனத்தில் கலந்து கொள்வர்.

வாழ்க இந்திய ஜனநாயகம்! போலோ பாரத் மாதா கீ ஜே :-)


No comments: