Followers

Saturday, May 28, 2016

சாவர்க்கர் உண்மையில் விடுதலை போராட்ட வீரரா?



வீர சவார்க்கர் என்று அழைக்கப் படும் ஒருவர் இருந்தார். அவரது எழுத்துக்களைப் படித்தாலே அவரது சுயரூபம் வெளிப்படும். வன்மமும் துவேஷமும் கொண்டவர். ஆர் எஸ் எஸ் அமைப்பின் அங்கமாகத் திகழ்ந்தவர். இந்து மகா சபையை நிறுவியவர். இந்த வீர சவர்க்காருடைய உண்மைப் பெயர் விநாயக் தாமோதர் சவார்க்கர் என்பதாகும் . இவருடைய பெயருக்கு முன் “வீர “ என்கிற அடைமொழி அல்லது பட்டம் ஏன் வந்தது என்று வரலாற்றை உற்று நோக்கும் பலருக்கு புரியாத விந்தை. மாவீரன் நெப்போலியன் என்றும் மாவீரன் அலெக்சாண்டர் என்றும் வரலாறு பல உண்மை வீரகளுக்கு பட்டம் வழங்கி கவுரவித்து இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கூட ஒரு முக்கிய அரசியல் தலைவரின் அடிதடி மகனுக்கு அஞ்சா நெஞ்சன் என்றும் , மாவீரன் என்றும் பட்டம் வழங்கி அழைத்து வருகிறார்கள். பொன்னியின் செல்வியும் இந்தப் பட்டியலில் அடங்கும். இவைபோல காரணம் இல்லாமல் பட்டங்கள் வழங்குவது ஒரு நகைச்சுவையாக மாறிவிட்டது. இப்படி ஒரு வகை நகைச் சுவைதான் சவர்க்காருடைய பெயருக்கு முன் “வீர” என்கிற பட்டத்தை வைத்து அழைப்பதும். அவருடைய வரலாற்றைப் படித்தால் நமக்கு சிரிப்புத்தான் வருகிறது.

இந்திய சுதந்திர வேள்வியில் தியாகத்தில் புடம் போடப்பட்ட பல முஸ்லிம்களின் பெயர்கள் மறைக்கப் பட்டு அகா சுகா பேர்வழிகளின் பெயர்கள் முன்னிறுத்தப் பட்டது ஏன்? ஒரு பிளாஷ் பேக்குக்குப் போகலாம். சுதந்திரப் போராட்ட வீரர் என்று அந்தமான் சிறையில் அடைக்கப் பட்ட ஒருவர் நவம்பர் 1913ல் பிரிட்டிஷ் அரசுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் ; அல்லது கருணை மனு போடுகிறார்; அல்லது காலில் விழுகிறார். அந்தக் கருணை மனுவின் சாராம்சங்கள் இவையாகும்.

பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்.

பிரிட்டிஷ் அரசமைப்பை ஏற்றுக் கொண்ட எனது மாற்றம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஏராளமான இளைஞர்களை சரியான திசைவழிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்.

மேன்மைக்குரிய பிரிட்டிஷ் அரசு விரும்புகிற எந்த வழியிலும் நான் பணிபுரிவேன்."

இப்படி இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வாசகங்கள் கொண்ட கடிதத்தை அந்நியருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு அந்தமான் சிறையில் இருந்து வெளிவந்தவர்தான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான வரும் இந்து மகா சபையின் தலைவரும் ஆன வி .டி. சவர்க்கார். (ஆங்கிலேய அதிகாரிகளுக்கு சவார்க்கர் எழுதிய கடிதத்திலிருந்து பிரண்ட்லைன் ஏப்ரல் 07,1995 இதழ்). இந்து மகா சபைதான் இன்றைய பாரதீய ஜனதாக் கட்சியின் தாத்தா. இதன் தத்துவங்கள்தான் இன்றைய பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றவே முடியாதவை என்று குறிப்பிடப்படும் ஐந்து அம்சங்கள்.

அந்தமானில் சவர்க்காரின் சிறை வாழ்க்கை நிறைய சுவாரசியமானது. அவருடன் சிறையிலிருந்த 92 வயதான தினேஷ் குப்தா என்பவர் ஆக. 9, 2003 அன்று டில்லியில் அளித்த ஒரு பேட்டியில்,

"வி.டி. சவர்க்காரும் நானும் ஒன்றாக சிறையில் இருந்தவர்கள். அவர் ஒன்றும் சிறையிலேயே உயிரைவிட்டு விடவில்லை. சிறையிலேயே உயிரைப் பறிகொடுத்த 8 விடுதலை தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்ற போர்ட்ப்ளேயரில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் சவர்க்காரின் சிலையையும் வைத்திருப்பது அந்த மற்ற விடுதலை வீரர்களையும் அவமானப்படுத்துவதாகும். மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உதவுவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் எழுதியனுப்பிய சவர்க்காரை விடுதலைப் போராட்டத் தியாகியாக சித்திரிப்பது மாபெரும் தவறாகும்; தாங்கமுடியாத துன்பமாகும்" என்று குறிப்பிட்டார்.

அவருடன் சிறையிலிருந்த விஸ்வநாத் மாத்தூர் என்பவர், "ஒரு கோழையைப் புரட்சியாளனாக தூக்கி நிறுத்துவது கேலிக் கூத்தாகும்" என்று கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் சவர்க்கார் படத்தை நாடாளுமன்றத்தில் வைத்தபோது தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தினேஷ் குப்தாவும், மாத்தூரும் மட்டுமல்ல, சவார்க்கருடன் சிறையில் இருந்த வங்காளத்தின் திரிலோகநாத் சக்ரவர்த்தி அவர்கள் தனது சுயசரிதை நூலில் தங்களை சிறை அதிகாரிகளுக்கு எதிராகப் போராடத்தூண்டி விட்டு, தான் மட்டும் (சவார்க்கர்) நல்ல பிள்ளையாக இருந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். இதை சவார்க்கரும் 'அந்தமானில் எனது ஆண்டுகள்' என்ற நூலில் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரபல வரலாற்றாளர் பிபின் சந்திரா கூறுகிறார்.

சவர்க்கார் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக ஆள் திரட்டும் பணியில் விடுதலையான பிறகு ஈடுபட்டார். அவரது தலைமையில், காந்தியார் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான நாராயண ஆப்தே மகாராஷ்டிரத்தில் இந்து மகாசபைக்கும், பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் ஆள் எடுக்கும் பணியில் ஈடுபட்டு அதற்காக அரசாங்கத்திடமிருந்து உரிய ஊக்கத் தொகையையும் பெற்று வந்தார். இப்படிப்பட்டவர்கள்தான் நாட்டுப் பற்று பற்றி நாக்குக் கிழியப் பேசுகிறார்கள்.

1 comment:

Dr.Anburaj said...


சிறு குறைகளுக்காக மகத்தான காாியங்கள் பல செய்தவரை மலினப்படுத்துவது சாியானதல்ல.
இந்துக்களின் நலன் காக்க நிறைய செய்திருக்கின்றாா்.