Followers

Monday, March 28, 2016

அனைத்தும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!

அனைத்தும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!----------------------------------------------------------------------------'பூ...

Posted by Nazeer Ahamed on Monday, March 28, 2016

அனைத்தும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!

'பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே'
-குர்ஆன் 6:38

ஊர்வன, நீந்துவன, பறப்பன, என்று உலகில் உள்ள எந்த உயிரினங்களும் மனிதர்களைப் போன்று சமுதாயமாகவே கூடி வாழ்வதாக இறைவன் கூறுகிறான். அன்பு, பண்பு, பாசம், கோபம் என்ற உணர்வுகள் அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டுள்ளது. உயிரியல் நிபுணர்கள் இதுவரை 1.75 மில்லியன் உயிரினங்களை கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் தனித் தனி குடும்பங்களாக வாழ்ந்து வருவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் இன்னும் கண்டு பிடிக்காத உயிரின வகைகள் 4.5 மில்லியனாகக் கூட இருக்கலாம் என்பது அறிவியலாரின் கணிப்பு. 3.8 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரினங்களின் படிமங்கள் இன்று நமக்கு கிடைத்துள்ளன. இன்று எவ்வாறு நாம் அந்த உயிரினங்களைப் பார்க்கிறோமோ அதே அமைப்பிலேயே 3.8 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களும் தோன்றுகின்றன. எந்த மாற்றமும் தென்படவில்லை. டார்வினின் பரிணாமக் கொள்கை இங்கும் அடிபட்டுப் போகிறது. பரிணாமம் அடைந்த இடைப்பட்ட படிமங்களை இன்று வரை பரிணாவியலார் எங்கும் சமர்ப்பிக்கவும் இல்லை. அவ்வாறு சமர்ப்பித்த ஒன்றிரண்டு படிமங்களும் பொய்யாக புனையப்பட்டது என்று அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சார்லஸ் லினோஸ் என்ற ஸ்வீடன் நாட்டின் தாவரவியல் வல்லுனர் தனது புத்தகமான 'சிஸ்டமா நேச்சுரா' ‘Systema Naturae’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். (1735) அதில் அவர் கூறுவதாவது 'ஒவ்வொரு உயிரினமும் அதன் உடலமைப்புக்கு தக்கவாறு மிக நேர்த்தியாக இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு உயிர் மற்றொரு உயிராக பரிணமிக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறு பரிணமித்தால் அதன் டிஎன்ஏ யிலிருந்து அவ்வுயிரின் உட்புறங்களில் மிக அதிகமான மாற்றங்கள் நிகழ வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை' என்று கூறி அதற்கான ஆதாரங்களை வரிசையாக பட்டியலிடுகிறார். தாவரங்கள் மண்ணிலிருந்து தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொள்ளும் விதத்தில் அதன் உடலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று மிருகங்களும் மனிதர்களும் பறவைகளும் தங்களின் உணவை தேடிக் கொள்ளும் வகையிலேயே உடலமைப்பை இயற்கை கொடுத்துள்ளது என்கிறார். இவர் இயற்கை என்கிறார். அதனை நாம் கடவுள், இறைவன், அல்லாஹ் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம்.

எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு அறையில் பூனை ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றது. மிக அழகாக இருக்கும். வெளி ஆட்கள் யாரும் வந்தால் குட்டிகள் ஓடி ஒளிந்து கொள்ளும். அவ்வப்போது மீன், கறி துண்டுகள் என்று நான் கொடுப்பது உண்டு. தாய் பூனை அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அந்த குழந்தைகளுக்கு ஊட்டும் அழகே தனி. நான் அருகில் சென்றால் தாய் பூனை 'வந்திருப்பது நமது கூட்டாளிதான். பயமில்லை வெளியே வாருங்கள்' என்று சங்கேத மொழியில் தனது குட்டிகளுக்குக் கூறும். அதனை விளங்கிக் கொண்டு அந்த சிறிய குட்டிகள் ஒவ்வொன்றாக தலையை வெளியில் நீட்டும் அழகே அழகு..... அந்த குட்டிகள் பெரிதானவுடன் அதே தாய் பூனை தன்னோடு அண்ட விடாது விரட்டுவதையும் பார்த்திருக்கிறேன். குட்டிகள் பெரிதாகி விட்டன. இனி நமது உதவி அவைகளுக்கு தேவையில்லை என்பதாலேயே தனது குட்டிகளை தாய் பூனை விரட்டுகிறது. இவை எல்லாம் அனைத்து உயிரினங்களும் மனிதர்களைப் போல ஒரு சமுதாயமாகவே வாழ்ந்து வருகின்றன என்பதை நமக்கு அறிவுறுத்துகின்றன. இவற்றை எல்லாம் சிந்திக்கும் போது இறைவனின் படைப்பாற்றலை நினைத்து அதிசயிக்காமல் ஒருவனால் இருக்க முடியாது.
Posted by சுவனப் பிரியன் at 2:59 AM

No comments: